இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனநாயகம் விருத்தியுறாத, மனித உரிமைகளும் சமூக பன்மைத்துவம் பேணப்படாத மன்னர் ஆட்சிக் கால அமைச்சரவைகளில் கூட முஸ்லிம்கள் அமைச்சர்களாகப் பணிபுரிந்து எமது தாய் நாட்டுக்குச் சேவையாற்றியுள்ளனர். இருப்பினும் தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான புதிய அமைச்சரவையில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சரோ பிரதி அமைச்சரோ உள்வாங்கப்படாமையானது பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் தோற்றுவித்துள்ளன.

தேசிய அரசுப் பேரவை தொடக்கம் கோட்டா அரசு அமைச்சரவை வரை

1931 ஜுலை 07 ஆம் திகதி நியமிக்கப்பட்ட முதலாவது தேசிய அரசுப் பேரவையில் கௌரவ H.M. மாகான் மாகார் அவர்கள் முதலாவது அமைச்சராக அதாவது “தொடர்பாடல் மற்றும் தொழில்” அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இரண்டாவது தேசிய அரசுப் பேரவையில் முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படாவிடினும் அதனைத் தொடந்து வந்த அனைத்து அமைச்சரவைகளிலும் முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டு நாட்டுக்குப் பல முக்கிய பங்களிப்புக்களைச் செய்துள்ளனர்.

சுதந்திர இலங்கையின் முதலாவது அமைச்சரவையில் கௌரவ டீ.பீ. ஜாயா அவர்கள் தொழில் மற்றும் சமூக சேவைகள் அமைச்சராகவும் ஜனாப் சேகு இஸ்மாயீல் அவர்கள் உணவு மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சராகவும் ஜனாப் கேட் முதலியார் காரியப்பர் அவர்கள் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து வந்த பாராளுமன்றங்களில் டொக்டர் M.C.M. கலீல், சோ் ராஸிக் பரீட், C.A.S. மரிக்கார், பதியுதீன் மஹ்மூத், M.P.M.M. முஸ்தபா, அப்துல் மஜீத், நைனா மரிக்கார், M.H. மொஹமட், A.C.S. ஹமீட், பாகீர் மாகார், அபூசாலி, இம்தியாஸ் பாகிர் மாகார், M.H.M. அஷ்ரப்,  A.H.M. பவுஸி, A.R.M. அப்துல் காதர், அலவி மௌலானா, A.H.M. அஸ்வர், ரவூப் ஹகீம், கபீர் ஹாசிம், போியல் அஷ்ரப், அதாவுல்லா, ரிஷாட் பதுறுதீன், ஹலீம், பைசர் முஸ்தபா போன்ற பல முக்கிய முஸ்லிம் தலைமைகள் அமைச்சர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

எண்ணிக்கை அடிப்படையில், ஜே.ஆர். ஜயவர்தன அவர்களின் அரசாங்கத்தில் (1978-1988) மூன்று அமைச்சர்களும் ஐந்து பதில்/பிரதி அமைச்சர்களும், பிரேமதாஸ அரசாங்கத்தில் (1989-1993) இரண்டு அமைச்சர்களும் ஆறு பிரதி அமைச்சர்களும் இருந்துள்ளனர்.  ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களின் 1994-2000: 2000-2001: 2004-2005 எனும் மூன்று அமைச்சரவைகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டிருந்தது. முதலாவது அமைச்சரைவில்  2 அமைச்சர்களும் 3 பிரதி அமைச்சர்களுமாக ஐந்து அமைச்சர்களும், இரண்டாவது அமைச்சரைவில்  4 அமைச்சர்களும், 4 பிரதி அமைச்சர்களுமாக 8 அமைச்சர்களும், மூன்றாவது அமைச்சரைவில்  7 அமைச்சர்களும் 3 பிரதி அமைச்சர்களுமாக மொத்தம் 10 அமைச்சர்களும் நியமிக்கப் பட்டிருந்தனர்.

அதேபோல, மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியை நிறுவுவதில் முஸ்லிம்கள் போதிய பங்களிப்புச் செய்யவில்லை என்ற மனக் குறை இருந்தாலும், அவரது முதலாவது அரசாங்கத்தில் வரலாற்றில் அதிகூடிய எண்ணிக்கையான நான்கு அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 14 முஸ்லிம் அமைச்சர்களை நியமித்தார். அவரது இரண்டாவது அமைச்சரவையில் அதனை 03 அமைச்சர்களும் 01 பிரதி அமைச்சருமாக மட்டுப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்த நல்லாட்சி அரசில் (2015) அமைச்சர்களின் எண்ணிக்கை அரசியல் அமைப்பின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டாலும், ஐந்து முஸ்லிம் அமைச்சர்களும் ஏழு இராஜாங்க/ பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். மைதிரி - ரணில் பிரிவுடனான நல்லாட்சியின் இறுதிப்பகுதியில் (2018) அமைக்கப்பட்ட அமைச்சரவையில் நான்கு அமைச்சர்களும் 4 பிரதி அமைச்சர்களும் அங்கம் வகித்தனர்.

இருப்பினும் 15 உறுப்பினர்களைக் கொண்ட கோடாபாய ராஜபக்ஷ அவர்களின் அமைச்சரவையிலும், 34  உறுப்பினர்களைக் கொண்ட இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் தொகுதியிலும்  இரண்டு தமிழ் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாலும் எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் உள்வாங்கப்படவில்லை.

முஸ்லிம் புறக்கணிப்பு?

தனிச் சிங்கள அரசாங்கத்தை அமைப்பதை இலக்காகக் கொண்ட இந்தப் புதிய அரசாங்கத்தின் முதல் எதிரிகள் முஸ்லிம்கள் எனத் தோ்தலுக்கு முன்னமே சித்தரிக்கப்பட்டாலும், ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷ அவர்கள் தனது அமைச்சரவை நியமனத்தின் மூலம் அதனை வெளிப்படையாகவே செய்தும் காட்டியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தோ்தலில் மேலும் அதிக சிங்கள வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று ‘சிங்கள தேசத்தை’ உறுதிசெய்வதற்கானதொரு உத்தியாகவே இந்த அமைச்சரவை நியமனம் உள்ளது.

நாடளாவியரீதியில் சுமார் 150,000 முஸ்லிம்கள் அதாவுது எட்டில் ஒரு பகுதியினர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக கோட்டாபே ராஜபக்ஷவுக்கு வாக்களித்துள்ள நிலையிலும் ஒரு அமைச்சுப் பதவியேனும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படாமையானது கோட்டபாயவுக்கு வாக்களித்த அனைத்த முஸ்லிம்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

ஜனாதிபதி கோடபாய பெற்றுக் கொண்ட 69 இலட்சம் வாக்குகளில் 2 வீத வாக்குகள் முஸ்லிம் வாக்காளர்களது என்பது மறுக்க முடியாது. அவ்வாறாயின், தனது அனைத்து நியமனங்களிலும் குறைந்தது 2 வீத்ததையாவது முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். 49 உறுப்பினர்களுடனான இந்த அமச்சரவையில் ஒரு முஸ்லிமையாவது உள்வாங்கியிருக்க வேண்டும். ஆனால் கோட்டாபாயவுக்கு வாக்களித்த 150,000 முஸ்லிம் வாக்காளர்களும் இலங்கை வாழ் 22 இலட்சம் முஸ்லிம்களும் முழுமையாகவே புறக்கணிப்பட்டுள்ளமை இலங்கை வரலாற்றில் இழப்பீடு செய்ய முடியாத ஒரு பாரிய வரலாற்றுத் தவறாகும்.

முடிவுரை

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனநாயகம் விருத்தியுறாத, மனித உரிமைகளும் சமூக பண்மைத்துவம் பேணப்படாத மன்னர் ஆட்சிக் கால அமைச்சரவைகளில் கூட முஸ்லிம்கள் அமைச்சராகப் பணிபுரிந்து எமது தாய் நாட்டுக்குச் சேவையாற்றியுள்ளனர். இருப்பினும் ‘சிங்கள தேசம்’ எனும் இனத்தேசியவாத எண்ணக்கருவுடனான இந்த புதிய அரசியல் பயணத்தில் இலங்கை வாழ் 22 இலட்சம் முஸ்லிம்களும் முழுமையாகவே புறக்கணிக்கப்பட்டுள்ளமை ஒரு பாரிய வரலாற்றுத் தவறாகும். குறுகிய அரசியல் இலாபம் கருதி இனவாத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்மானங்களால் எமது தாய் நாடு இழப்புகளை அன்றி அபிவிருத்தியை என்றும் அடைந்ததில்லை பல நிகழ்வுகளும் சம்பவங்களும் எமக்கு உணர்த்தியுள்ளன. உனவே இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இன மக்கள் ஒன்றிணைந்த ஒரு பயணத்தின் ஊடாக மாத்திமே இந்த நாடு நிலையான அபிவிருத்தியை அடையும் என்ற உறுதியான நிலைப்பாடு இலங்கையர்களாகிய எம் அனைவரதும் ‘வாக்காகவும் செயலாகவும்’ அமைய வேண்டும்.

----------முற்றும்----------

அபூ அய்மன், BA (Hons), M.Phil. சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர்.
(2019.11.29 - விடிவெள்ளி)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.