பியாஸ் முஹம்மத்

சிங்கள மன்னன் துட்டகைமுனு தனது கால்களைச் சுருட்டி படுத்திருந்தபோது அவரது தாய் ஏன் மகனே, உனது கால்களை நீட்டி ஏன் படுக்கக் கூடாது என வினவுகிறாள். அதற்கு துட்டகைமுனு, எப்படி அம்மா கால்களை நீட்டிப் படுப்பது, ஒரு பக்கம் கடல், மறுபக்கம் தமிழர்கள் என்று இருக்கும் போது நான் எப்படி சுதந்திரமாக கால்களை நீட்ட முடியும் எனப் பதில் அளிக்கிறார். இந்த துட்டகைமுனு தான் பின்னர் தமிழ் மன்னன் எல்லாளனுக்கு எதிராகப் போரிட்டு எல்லாளனுடைய படையைத் தோற்கடிக்கிறார். இந்த துட்டகைமுனுவின் சிலையைத் தான் தனது பதவியேற்புக்குரிய இடமாக புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுத்திருந்தார். கொடுங்கோலனை எதிர்த்துப் போராடி வெற்றிபெற்ற துட்டகைமுனுவின் சிலையின் முன்னாலிருந்து எனது பதவியைப் பொறுப்பேற்பதில் நான் பெருமை அடைகின்றேன் என ஜனாதிபதி தனது கன்னி உரையில் தெரிவித்தார்.

தமிழர்களது போராட்டத்துக்கு எதிரான யுத்தம் தான் ராஜபக்ஷ குடும்பத்தினரை நாட்டு மக்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடும் நிலைமைக்கு ஆளாக்கியிருக்கிறது. முப்பது வருடங்களாக முடிவுக்குக் கொண்டு வரப்படாமல் இருந்த உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த பெருமை யுத்தத்துக்கு அரசியல் தலைமை வகித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், களத்தில் நின்று வழிநடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கும், பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய தற்போதைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுக்கும் உண்டு. அந்த வகையில் 2009 இல் யுத்தம் முடிவடைந்த கையோடு 2010 இல் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவும் போட்டியிட்டனர். தற்போது யுத்த வெற்றியின் மூன்றாவது பங்காளியான கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கிறார்.

ஆகவே யுத்த வெற்றி என்பது இந்த நாட்டு பெரும்பான்மை மக்களில் எவ்வளவு பாதிப்புச் செலுத்தியிருக்கிறது என்பது விளங்குகிறது. உலகில் சிங்கள மக்களுக்கென உள்ள ஒரே நாடாக சிங்கள மக்கள் இந்த நாட்டைப் பூஜிக்கிறார்கள். இந்த நாட்டை விட்டால் தமக்கு வேறு கதியில்லை என்று அவர்கள் நினைக்கின்றார்கள். உலகிலேயே சிறந்த நாடு இது என அவர்களது இதிகாசங்களும் சமயத் தலைவர்களும் அவர்களுக்கு ஊட்டி வைத்திருக்கிறார்கள். இதனால் இந்த நாடு பிளவுபடுவதை, துண்டாடப்படுவதை அவர்கள் தமது இனத்தை அழிக்கும் செயற்பாடாகவே நோக்குகிறார்கள். இதற்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்களை அவர்கள் ஜென்ம விரோதிகளாகவே பார்க்கின்றார்கள். இதன் அடிப்படையில் தான் சிறுபான்மை இனம் பற்றிய அவர்களது கண்ணோட்டமும் அமைகிறது.

சிறுபான்மை பற்றிய அவர்களது இந்த அச்சம் இன்று நேற்று முளைத்ததல்ல. இலங்கை மன்னர்களால் ஆளப்படும் போது மேற்கொள்ளப்பட்ட தென்னிந்தியப் படை எடுப்புக்களுடன் இந்த அச்சம் தொடர்புபடுகிறது. சேர, சோழ நாடுகள் மேற்கொண்ட படையெடுப்புக்கள் தொடர்பான ஞாபகங்கள் இன்னும் மறக்கடிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. துட்டகைமுனு சிலை முன்னிலையிலான பதவியேற்பும் இதனை நினைவுறுத்தித்தான் நடைபெற்றது. சுதந்திரத்தின் போது முன்வைக்கப்பட்ட 50 க்கு 50 கோரிக்கைகள் சிங்களவர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. பின்னர் 1960 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு பெடரல் கட்சியை அணுகியபோது அவர்கள் சுயாட்சிக் கோரிக்கையை நிபந்தனையாக வைத்ததால் சிங்கள மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தையே உதறித் தள்ள முயற்சித்த போது, கடவுளே வந்தாலும் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற கோஷத்தை முன்வைத்தே ஐதேக தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள நேரிட்டது. இந்த எண்ணம் மேலோங்கியதனால் தான் இந்திய வம்சாவழித் தமிழரின் பிரஜாவுரிமையை பறிக்கும் நிலைக்கு ஜேஆரை ஆளாக்கியது.

83 கலவரத்துக்கு முன்னர் தமிழரின் கோரிக்கை தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதாகவே இருந்தது. இது தமிழினத்தின் ஆதிக்கத்தை வளர்க்கும் என்று சிங்களவர் கருதியதனால் அதனைக் கொடுக்கக் கூடாது என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதுவும் கூட சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் தமிழர்கள் முன்வைக்கின்ற ஆட்சியில் பங்குவகித்தல் என்ற இடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்து விடுமோ என்ற ஐயத்தின் வெளிப்பாடாகவே அமைந்தது. வடமாகாணத்தின் முதலைமைச்சராக அரசாங்கம் தன்னை நியமித்த போது அதனைப் பயன்படுத்தி வரதராஜப் பெருமாள் தனிநாடு பிரகடனம் செய்வதற்கு எடுத்த முயற்சி தமிழர்களுக்கு கொடுக்கப்படும் வாய்ப்புக்கள் எல்லாம் நாட்டைத் துண்டாடுவதற்கே பயன்படுத்தப்படும் என்ற பிராந்தியை சிங்களவர் மனதில் ஆழமாகப் பதித்தது.

இந்த வகையில் தமிழரை அடக்கி வைக்க வேண்டும் என்ற பெரும்பான்மை மக்களின் உணர்வை அரசியல் மயப்படுத்துவதில் ஜேஆர் வெற்றிபெற்றார். ஜூலைக் கலவரத்தின் போது அதனை அடக்காமல் தமிழினத்தின் மீதான வெறித்தனத்தை வெளிக்காட்டுவதற்கு சிங்களவர்களுக்கு தாராளமாக இடமளித்தார். தன்னை கிறிஸ்தவர் என்றும் முஸ்லிம் என்றும் கூறு போட்டுப் பார்த்த சிங்கள மக்களுக்கு மத்தியில் தன்னை சிங்கள இனவாதியாகக் காட்டிக் கொள்வதற்கு ஜேஆருக்கு இந்தக் கலவரம் தேவைப்பட்டது. அதிலிருந்து 2015 தேர்தல் வரை தமிழரை அடக்கி வைத்திருக்கும் ஒருவரையே சிங்களவர் தலைவராகத் தெரிவு செய்தனர். 2015 தேர்தல் வித்தியாசமாக அமைந்த போதிலும் தனது தோல்விக்கு தமிழரும் முஸ்லிம்களுமே காரணம் என மஹிந்த ராஜபக்ஷ ஜன்னல் கட்டிலிருந்து தெரிவித்த வார்த்தைகள் சிங்களவர் மனதில் ஊசி போல் குத்தின. இந்தத் தவறை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் சிங்கள சமூகம் ஒன்றிணைந்ததன் வெளிப்பாடே ராஜபக்ஷ குடும்பத்தினை மீண்டும் அரியாசனத்தில் ஏற்றி இருக்கிறது.

தேர்தலுக்காக வேண்டி சிங்கள மக்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கு ஸஹ்ரானின் அடாவடித்தனம் உதவி  செய்தது. தேர்தலின் ஆரம்பத்தில் ஹக்கீம், மனோ, ரிஷாட் என சிறுபான்மைகள் சஜித்தைச் சூழ அணிதிரளும் பொழுதே சிங்கள மக்கள் தம்மால் ஒன்றிணைவதைத் துரிதப்படுத்தினர். தேர்தல் வெற்றியின் பின்னர் பாற்சோறு பார்ட்டியில் கலந்து கொண்ட ஒருவர், அவர்களுக்கு எமக்கெதிராக ஒன்றிணைய முடியுமென்றால் எமக்கும் ஒன்றிணைய முடியும் என்பதை இப்பொழுது நாங்கள் எடுத்துக் காட்டியிருக்கிறோம். நாங்கள் ஒன்றிணைந்தால் எவனாலும் எங்களை ஆட்டிப் படைக்க முடியாது என்று கூறினார். இந்த ஒன்றிணைவுக்கு இறுதி நேரத்தில் ஒத்துழைத்த அம்சமாக தமிழ்த் தரப்பின் கோரிக்கையை சுட்டிக் காட்ட முடியும். கோதாபயவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த சிங்களவர்கள் கூட தமிழரின் 13 அம்சக் கோரிக்கையை எதிர்நிலையிலேயே பார்த்தார்கள். சிங்களக் கிராமங்களை அகற்றக் கோருகிறார்கள், புத்தர் சிலைகளை நீக்கச் சொல்கிறார்கள் என 13 அம்சக் கோரிக்கைகளின் ஒவ்வொன்றுமே சிங்கள தேசம் பற்றிய அவர்களின் அச்சத்தை ஊதிப் பெருப்பிப்பதாகவே அமைந்திருந்தது. இவர்களின் இந்தக் கோரிக்கைகளை எதிர்த்தரப்பு வேட்பாளர் சஜித் பிரேமதாச ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களை சஜித் பிரேமதாச இணைத்துக் கொண்டமையே அவருக்கு வினையாக முடிந்தது.

மஹிந்த ராஜபக்ஷ தனது தோல்வியின் பின்னர் தெரிவித்த கருத்தை ஒத்ததாகவே ஜனாதிபதி கோதாபயவும் தனது வெற்றியின் பின்னர் கருத்து வெளியிட்டிருந்தார். “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது சிங்கள மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற முடியும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தேன். எமது வெற்றியில் தமிழ் முஸ்லிம் மக்களும் பங்கு கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவு அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை” என அவர் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் முடிவுகள் ஜனாதிபதியுடைய இந்தக் கருத்தை தெளிவாக எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தன. எவ்வளவு தான் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் அவர் எதிர்பார்த்த அளவு சிறுபான்மை மக்களின் ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. இதனை அவர் எதிர்பார்த்ததனால் தான் கிழக்கு மாகாணத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜனாதிபதி செல்லவில்லை என பஸில் ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

சிறுபான்மையினரின் ஆதரவு பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு தேர்தல்களின் போது தான் தேவைப்பட்டுக் கொண்டிருந்தது. இனி அதுவும் அவசியமில்லை என்ற நிலை உருவாகுமானால் நாட்டில் ஓரங்கட்டப்பட்ட ஒரு சமூகம் உருவாவது தவிர்க்க முடியாதது. இது நாட்டை இன்னும் பல தசாப்தங்களுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லும். அதனால் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பின் பக்கம் சிறுபான்மைச் சமூகங்கள் கவனம் செலுத்த வேண்டும். பொறுப்புக்களில் இருந்து ஒருபோதும் நான் விடுபட மாட்டேன். நடந்து முடிந்த தேர்தலில் எனக்கு ஆதரவு வழங்கியவர்கள், வழங்காதவர்கள் அனைவரினதும் ஜனாதிபதி நானாவேன் என்பதை நானறிவேன். இந்த அனைத்து மக்களினது உரிமைகளையும் ஜனாதிபதி என்ற பதவி நிலையிலிருந்து முழுமையாகப் பாதுகாப்பேன் என அவர் அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கப் போனால் நாட்டை இப்போது அச்ச உணர்வே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. சிங்களப் பெரும்பான்மை மக்கள் தமது இனம் அழிந்து விடும் என்றும் தமது நாடு தம்மிடம் இருந்து பறி போய் விடும் என்றும் அஞ்சுகின்றனர். நாட்டின் முன்னேற்றம் எப்படிப் போனாலும் தமது இனத்தைப் பாதுகாத்தல் என்பதுவே சிங்கள மக்களின் தேவையாகவிருக்கிறது. இதனால் தான் சஜித் பிரேமதாச முன்வைத்த அபிவிருத்திக் கோஷங்கள் சிங்கள மக்கள் மத்தியில் எடுபடவில்லை. சிங்கள மக்களின் பாதுகாப்பு உணர்வு என்ற சூழ்நிலை உருவாக்கிக் கொடுத்த தேர்தல் வாக்குறுதி தொடர்பில் சஜித் பிரேமதாச கொடுத்த அழுத்தம் சிங்கள மக்களின் நம்பிக்கையை வெல்லுவதற்குப் போதுமானதாக இருக்கவில்லை. அநுர குமாரவின் தேர்தல் உறுதிமொழிகளும் சூழ்நிலைக் கைதிகளை திருப்திப்படுத்துவதாக அமையவில்லை.எனவே பாதுகாப்பற்று அச்சத்தில் வாழ்கின்ற தமக்கு ஒரு தீர்வாக சிங்கள மக்கள் கோதாபயவையே தெரிவு செய்தனர்.

மறுபுறத்தில் இந்த மேலாதிக்க உணர்வு காரணமாக சிங்கள மக்கள் தம்மீது அத்துமீறுவார்களோ என சிறுபான்மை மக்கள் அஞ்சுகின்றனர். சிங்களப் பெரும்பான்மை மக்களது அச்சத்தைத் தீர்ப்பதற்கான மீட்பர்கள் காலத்துக்குக் காலம் தோன்றி வருகின்றனர். ஆனால் சிறுபான்மை மக்களின் அச்சம் காலாகாலமாகவும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. அந்த வகையில் நாட்டு மக்கள் அனைவரினதும் ஜனாதிபதி என்ற வகையில் சிறுபான்மையினரின் அச்சம் தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுக்கு நியாயமான பொறுப்பிருக்கிறது.

அதே நேரம் சிறுபான்மை மக்களுக்கும் பாரிய பொறுப்பிருக்கிறது. இந்த நாட்டை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப் போகிறார்கள் என்ற பெரும்பான்மையினரின் மனப்பாங்கை மாற்ற வேண்டும். நாட்டில் தமது பங்குகளைக் கேட்பதிலேயே சிறுபான்மையினர் குறியாக இருக்கிறார்கள் என்ற உணர்வை இல்லாமல் செய்ய வேண்டும். முதலில் எல்லோருமாக இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக விட்டுக் கொடுக்க முடியுமான உரிமைகளில் சில விட்டுக் கொடுப்புக்களுக்கு சிறுபான்மைச் சமூகங்கள் வர முடியும். எல்லோருமாக இணைந்து தான் நாட்டை அபாயத்திலிருந்து மீட்டு மீளக் கட்டியெழுப்பினோம் என்ற வரலாறு இலங்கைத் தீவைப் பற்றி எழுதும் போது எழுதப்படுமானால் அடுத்த தலைமுறையில் சிறுபான்மை பேதமின்றிய இலங்கையர்களைக் காண முடியும்.

Fiyaz Muhammad

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.