ஆனமடுவ நகரில் நேற்று (04) மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டதன் பின்னர் கருவலகஸ்வெவ பகுதியை நோக்கிச் சென்ற பஸ் வண்டியில் பயணித்தவர்கள் மீது இனந் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான 4 பேர் தப்போவ மற்றும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதவாச்சி பகுதியில் தாம் பயணித்த பஸ் வண்டியை மறித்த பெண்கள் உள்ளிட்ட 20 பேரை கொண்ட குழு இந்த தாக்குதலை நடத்தியதாக தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலால் பஸ் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டவர்களை உடனடியாக கைது செய்யாமைக்கு எதிராக கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் 100 க்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன் பின்னர் அந்த இடத்திற்கு வருகை தந்த பிரியங்கர ஜயரத்ன மற்றும் சனத் நிசாந்த ஆகிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தலையிட்டு மக்களை சமரசப்படுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தம்மை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களே தாக்கியதாக தாக்குதலுக்கு உள்ளான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.