பாட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ´ஹதே அபே பொத´ என்ற சர்ச்சைக்குரிய பாலியல் கல்வி தொடர்பான விடயத்தை ஆராய்ந்து பதில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சுடனும், சுகாதார அமைச்சுடனும் கலந்துரையாடி எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே டொக்டர் அனில் ஜசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன தலையிட்டு 7 ஆம் தர மாணவர்களுக்கு விநியோகித்த பாட புத்தகங்களில் பிள்ளைகளின் மனதை துஷ்பிரயோகப்படுத்தும் வகையிலான பாடங்கள் அமைந்துள்ளதாகவும் அதனை உடனடியாக அகற்றுமாறும் கடந்த 24 ஆம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி மெதகொட அபேயதிஸ்ச தேரர் கோரியிருந்தார்.

முன்னாள் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன மற்றும் அக்கில விராஜ் காரியவசம் ஆகியோரின் தலையீட்டால் இந்த புத்தகம் அச்சிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனவே 7 ஆம் தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான விடயங்களை கற்றுக்கொடுப்பது பொறுத்தமற்றது எனவும் அது பிள்ளைகளின் நல்லெண்ணத்தை பாதிக்கும் செயற்பாடு எனவும் தேரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

AdaDerana.lk

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.