‘ஹாஷிம்’ இவரின் பெயரை உச்சரித்தாலே விகடமாய் இருக்கும்.அதற்காக விகடகவி என்று எண்ணிவிட வேண்டாம். அன்பானவர்,ஆதரவானவர், தெரிந்தோர் தெரியாதோர், அறிந்தோர், அறியாதோர் என எல்லோரையும் குஷிப்படுத்தக்கூடியவர். திருமணமாகியும் அவர் குணத்தால் குன்று. மனைவியோ அழகான அடக்கமான பெண். ஏழை தான், அவளும் ஜாடிக்கு ஏற்ற மூடி. இருவருக்கும் குட்டி தேவதையை அல்லாஹ் பரிசாக கொடுத்தான்.  ஒரு வருடம் உருண்டோடியது. ஹாஷிம், தான் வெளிநாடு சென்று வந்தாலும், உடனடியாக வீட்டைக் கட்ட முடியாமையால் தனக்காக தன் தகப்பன் கொடுத்த காணிப்பங்கில் தற்காலிகமாக மண் கொண்டு வரிச்சில் வீடு கட்ட முடிவு செய்தார். ஏனைய சகோதரர் களுக்கும் பக்கத்தில் பங்குகள் கொடுக்கப்பட்டன. தன் மனைவி சுரையாவும் பெரிய பணக்கார வீட்டுப்பெண் அல்லவே.அவளின் உதவியும் இல்லாமலில்லை. மாஷா அல்லாஹ் என்று அவர்களுக்கான குடிசை தயார். அன்பும் பாசமும் துரு துருவென வளரும் ஷாஹினும் அவர்களுக்கான மகிழ்ச்சியை கொடுத்தன.அழகான வாழ்க்கை அமைதியாக நகர… திடீரென ஹாஷிம் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். அதுவும் மஞ்சல் காய்ச்சல். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது கால போராட்டத்திற்கு பின், இன்னாலில்லாஹ்… முப்பதுகளையும் தாண்டாத  ஹாஷிம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மையினால் இறைவனடி சேர்ந்தார். அந்தப்பிஞ்சுக்கு எதுவும் தெரியாத வயது. இரண்டு வயதில் என்னதாம் புரியும்.? சுரையா வீட்டவர்கள் வந்து எவ்வளவு ஆறுதல் சொல்லியும் இழந்த கணவனை பெற முடியுமா.?  கணவனின் வீட்டில் இத்தா இருக்கலாமா..? தன் வீட்டில் இத்தா இருக்கலாமா? என்ற யோசனையிலும் , விரக்தியிலும் உட்கார்ந்து இருந்தாள். சுரையாவின் கவலைகளும் , காயங்களும் ஷாஹினை பாதிக்கக்கூடாது என சுரையாவின் வீட்டார், சுரையாவையும்  இரண்டே வயதான ஷாஹினையும் கூட்டிப்போய் விட்டார்கள்.  குடிசை விளக்கில்லாது இருண்டது. ஹாஷிம் மரணித்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அவசர அவசரமாக ஹாஷிமின் அரண்மனை தரை மட்டம் ஆனது. அதுவும் காணி யாரால் கொடுக்கப்பட்டதோ, அதே நபர் தான் இடிப்புக்கும் காரணம். தன் மகன் தான் மெளத்தாகி விட்டானே.. இனி காணி கேட்டு யார் வரப்போகிறார்கள்..? என்று நினைத்திருப்பார் சலீஹ் நானா.மேலும் தன் இரண்டாவது மகளான நஸ்ஹானாவுக்கு திருமணம் செய்து வைக்கும் போது காணி தருவதாக கூறிய வாக்குறுதிக்காக ஹாஷிமின் காணியில் அவசர அவசரமாய் அத்திவாரமும் இடப்பட்டது. இவற்றை எல்லாம் கேள்விப்பட்ட சுரையாவின் உள்ளமோ உடைந்தே விட்டது. தந்தையின் பங்கு பிள்ளைக்கு அல்லவா? ஷாஹினை அரவணைத்த படி, தன் வாழ்வில் வரையப்பட்ட கோடுகளை மெதுவாக அசை போட்டாள்.    
பயாஸா – கஹட்டோவிட               

   

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.