தடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா!

ஆக்கம் : Sajidh Safwan
தொடர் : 03

இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம், உலகின் எல்லாத் திசையிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த ராணுவ நடவடிக்கைகளை கையாள்வதைப் பார்க்கிறோம். 120க்கும் மேற்பட்ட நாடுகளில், அமெரிக்கா தனது ராணுவ நிலைகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் கியூபா அமெரிக்காவின் மிக அருகில் உள்ள நாடு. அங்கு புரட்சி நடைபெற்றதையோ, தனது பொம்மை அரசான பாடிஸ்ட்டா விரட்டப்பட்டதையோ, சோசலிச அரசியல் கொள்கை உருவானதையோ அமெரிக்காவினால் ஜீரணிக்க முடியவில்லை.

ஒரு சில தடைகள் அல்ல, ஏராளமான பொருளாதார தடைகளை அமெரிக்கா கியூபா மீது விதித்தது. அதாவது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள், 10% அளவிற்கு அமெரிக்க உதிரிபாகத்தைக் கொண்டிருக்குமானால், அப்பொருள் கியூபாவிற்கு அனுப்பப்படக் கூடாது, என்ற தடையை அமெரிக்கா விதித்தது. சர்வதேச நாணய பரிவர்த்தனையாக அமெரிக்காவின் டாலர் இருந்தாலும், அதை கியூபா பயன்படுத்தக் கூடாது. லத்தீன் அமெரிக்க நாடுகளில், “கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, உலக வங்கி மற்றும் அமெரிக்க கண்டத்தின் வளர்ச்சி வங்கி ஆகியவையிடம் இருந்து கடன் பெற இயலாத, ஒரே நாடு கியூபா” என்ற நிலையை அமெரிக்கா உருவாக்கியது.

ஃபர்ஸ்ட் கரீபியன் இண்டர்நேசனல் பேங்க் மற்றும் இங்கிலாந்து வங்கியான பார்க்லேஸ் ஆகியவை, கியூபாவுடன் செய்து கொண்ட பலக் கோடி டாலர் ஒப்பந்தங்களை, அமெரிக்காவின் மிரட்டல் காரணமாக நிறுத்திக் கொண்டன. ஏனென்றால் சுவிட்சர்லாந்து நாட்டின், வங்கியான யுபிஎஸ், கியூபாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக, 100 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஐரோப்பாவின் பெரிய நிறுவனமான சிரான் கார்ப்பரேசன் குழந்தைகளுக்கான நோய் தடுப்பு மருந்து வர்த்தகத்தை மனிதாபிமானம் கருதி, கியூபாவுடன் செய்து வந்தது. இதற்காக, அந்த நிறுவனத்திற்கு 168,500 டாலர் அபராதம் விதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனம், கியூபாவுடன் தனது வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டது. அமெரிக்க நிறுவனமான, ஜெனரல் எலெக்ட்ரிக், ஃபார்மாசியா, அமெர்ஷம் ஆகிய சுவிஸ் மற்றும் இங்கிலாந்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, கியூபாவுடனான வர்த்தகத்தை தடை செய்தது.

கனடா நாட்டின் ஷெரிட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்கள், கியூபாவுடனான வர்த்தகத்தை நிறுத்தாததால், அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார்கள். அமெரிக்காவின் தடைகளை மீறி செயல்பட்ட அமெரிக்க குடிமக்கள் 316 பேர், 537 விதமான அபராதங்கள் விதிக்கப்பட்டு 2005 அக்டோபர் 12 அன்று, அமெரிக்க அரசினால் தண்டிக்கப்பட்டார்கள். 2004ம் ஆண்டில் மட்டும், 77 நிறுவனங்கள், வங்கிகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை, அமெரிக்காவின் தடையை மீறி, கியூபாவுடன் உடன்பாடு கொண்ட காரணத்திற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளன.

2005 ஏப்ரல் 29ல், அமெரிக்க அதிபர் புஷ், அமெரிக்காவின் வங்கிகளில், கியூபாவைச் சேர்ந்தோர் வைத்து இருந்த, சட்ட விரோதமான 198 மில்லியன் டாலர் பணத்தை, அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் இருந்து, கியூபாவிற்கு எதிராகச் செயல்பட்ட, தீவிரவாத இயக்கத்திற்கு அளிக்க வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டார். இத்தகைய தடைகள் துவக்கத்தில் இருந்தே அமலாகி வருகிறது. சோசலிச சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, 1992ல் சீனியர் புஷ் ஆட்சியில் கியூபா ஜனநாயகச் சட்டம் என்ற பெயரில் டாரிசெல்லி தடை மசோதாவை அமல்படுத்தி தனது ஆதரவு நாடுகளையும், கியூபாவுடனான, வர்த்தகத் தொடர்பைத் துண்டிக்கச் செய்தது. இதைத் தொடர்ந்து 1996 கிளிண்டன் தலைமையிலான, ஜனநாயகக் கட்சியின் ஆட்சியிலும் ஹெல்ம்ஸ் – பர்ட்டன் சட்டத்தின் மூலம், சர்வதேச அளவில், எந்த ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு கியூபாவுடன் வர்த்தக உடன்பாடு கண்டால், அது அமெரிக்காவின் எதிரியாகப் பிரகடனப் படுத்தப்படும், என அறிவித்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத் தடையை சந்தித்து வந்தாலும், கியூபா அமெரிக்காவின் மிரட்டலுக்கும், தடைக்கும் அடிபணியவில்லை. இத்தகைய தடைகளால், கியூபா சுமார் 83 ஆயிரம் மில்லியன் டாலர் (சுமார் 15லட்சம் கோடி ரூபாய்) இழப்பைச் சந்தித்துள்ளது. இவ்வளவு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், தனது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் எதிலும் கியூபா கை வைக்கவில்லை. மாறாக மக்களை எளிமையானவர்களாக வாழ வேண்டுகோள் விடுத்தது. இறக்குமதி செய்து பயன்படுத்தும் பொருள்களைத் தவிர்க்க வேண்டுகோள் விடுத்தது. இதற்கு மக்கள் செவி சாய்த்தனர், என்பதில் இருந்தே இன்றைய கியூபாவின் வளர்ச்சியை மதிப்பிட முடியும்.

தொடரும் ...........................

உதவிய நூல்கள்:

1. ஃபிடல் காஸ்ட்ரோ உரைகள் – 1997
2. குற்றவாலிக் கூண்டில் வட அமெரிக்கா – 1999
3. குரலின் வலிமை – 2005
4. Cuba The Blockade and The declining Empire – 2005
5. நேருக்கு நேர் – 2002
6. சூறாவளியும் அடிபணியும் – 2006

7. சாவேஸ் – 2006

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.