பொறுங்கள்
ஒரு சேதி இருக்கிறது சொல்ல.

அடிக்கடி “கடந்த 24 மணி நேரத்தில் எந்த கொரோனா நோயாளியும் நாட்டில் இனம் காணப்படவில்லை” என்ற செய்தி இருந்திருந்து வந்து போகிறது. ஒரு வித திருப்தியுடன் பகிர்கின்றனர் பலர். கேட்கும் போது எனக்கும் சந்தோஷம்தான். ஆனால் அந்த சந்தோஷத்தை கொண்டாடும் நிலமையில் நாம் இல்லை. கடந்த 15 நாட்களுள் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள் நூறு என்பதுதான் செய்தி. எத்தனை பேரை பரீட்சித்து இந்த எண்ணிக்கை சொல்லப்பட்டது என்பதை நினைக்கையில் நிலமை இன்னும் மோசம்.

எந்த முற்பரிசோதனைகளும் நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கோ அல்லது தனிமைப்படுத்தல் மையங்களில் குடி கொண்டிருப்பவர்களுக்கோ அவசியமின்றி அறிகுறியின்றி  செய்யப்படுவதில்லை. செய்யப்படப் போவதும் இல்லை. அந்தளவு வைத்திய வசதியெல்லாம் எங்களிடம் கிடையாது.எங்களால் முடிந்தது ‘தனிமைப்படுத்தி அவதானித்து தேவைப்படின் மாத்திரம் உறுதி செய்தலும், பொதுமக்களை lockdown’ செய்வதும் மாத்திரம்தான்.

ஆக, இது வெடிக்கும்.

 ஏனெனில் தொற்றுக்குள்ளானவர்கள் ஒரு சிலரின் செயற்பாடுகள் ஒரு சமூகத்தையே ஆட்கொண்டிக்கிறது.  தாவடியிலிருந்து யாழ்ப்பாணத்தை, அட்டுளுகமவில் இருந்து களுத்துறையை மெல்ல மெல்ல மொத்தக் கொழும்பை என ஒவ்வொரு ஊராய் பார்த்திருக்கப் பரவும். நாம் பார்க்காமலும் இந்நேரம் அது பரவி முழு நாட்டிலும் ஊடுருவி இருக்கும். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் எட்டிப்பார்த்து தன் கோரதண்டவத்தை ஆட எத்தனிக்கும். பல மாதங்கள் கடக்கும். அல்லது பார்த்திருக்க சூறாவளியாய் மாறி நாட்டை ஒரு சுழற்று சுழற்றி எடுக்கும்.

இரண்டு மூன்று குழாய்களை நாட்கணக்கில் மூக்கிலும் வாயிலும் புகுத்தி கோமா நிலைக்கு கொண்டு சென்று செயற்கை சுவாசத்தை கட்டாயமாக்கி மீளுவோமா மாட்டோமா என்ற நிலையை பலருக்கு ஏற்படுத்தும். கண்ணுக்கு தெரியாமல் எம் பலரில் காவு கொண்டு அடுத்தவரில் பாயக் காத்திருக்கும். கண் இமைக்கும் நேரத்தில் இது நடக்கும். இந்த பாதக நிலமைக்கான சந்தர்ப்பங்களே எமது நாட்டிற்கு  அதிகம் இருக்கிறது. அந்த நிலை ஏற்படின் இத்தாலி ஸ்பெய்ன் அளவுக்கெல்லாம் எம் நாடு தாங்காது.

புரிந்து கொள்ளுங்கள்.

அந்த கொடுமையான நிலமை இச்சிறு நாட்டிற்கு வேண்டாம் என்ற நோக்கில் கடுகதியில் தன்னால் இயன்றளவு இயங்குகிறது சுகாதார மற்றும் வைத்தியத்துறை. இழுத்து மூடப்பட்டிருக்கின்றன பல வார்டுகள். Combine system இற்கு மாற்றப்பட்டிருக்கின்றன பல வார்டுகள். நீண்ட விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது தொடர் கிளினிக்குகளிற்கு. ஒவ்வொரு வைத்தியசாலையிலும் தேடித் தேடி வார்டுகளும் வைத்தியர் அறைகளுமாய் ஒழுங்கு செய்யப்படுகின்றன வரவிருக்கும் நோயாளிகளுக்காக உயிரைப் பணயம் வைத்து முழு மூச்சுடன் இயங்குகிறார்கள் பல வைத்தியர்கள். வழமையான வேலைகளை மாற்றியமைத்து வைத்தியர்களின் shiftகள் மாற்றியமைக்கப்பட்டு அதி அவசர நிலமைக்கான rosterகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன. ICUக்களின் நிலமை பரிதாபம். இருக்கின்ற patients களை என்ன செய்வதென்று முழித்துக்கொண்டே மேலதிக ஆயத்தங்களை தேடிக் கொண்டிருக்கும் பரிதாப நிலை.
சொல்லி மாளாதளவு சவால்கள், குழப்பங்கள், நிருவாக நெரிசல்கள். கலந்துரையாடல்கள், தீர்மானங்கள், மீண்டும் சவால்கள்.

இத்தனையும் நாம் எதிர்நோக்கியிருக்கும் இன்னும் எதிர்னோக்கவிருக்கும் அபாயத்தை கருத்தில் கொண்டுதான்.

இங்கு வைத்திய கடை நிலை ஊழியர் தொடக்கம் மேல் மட்டம் வரை ஒவ்வொருவருக்குப் பின்னாலும் நிறைந்துள்ள சவால்களை தனித்தனியாக விவரிக்கலாம்.
யாரைப்பற்றி யார் பரிதாபப்படுவது எனத் தெரியாமல் வேலையில் மூழ்கிக் கிடக்கிறது மருத்துவ உலகம்.

‘எங்களால் முடியும், கட்டுப்படுத்தலாம். பொது மக்கள் கூட்டமாய் சேர்வதை தவிர்த்தால் பெறுபேறு சிறப்பாக இருக்கும். அதை தவிர வேறு வழியில்லை’ என்பதே யாரைக் கேட்டாலும் திருப்பிச் சொல்லும் பதிலாக இருக்கிறது.

ஆக, என் மரியாதைக்குரிய மக்களே..!
இந்த சவாலை விட பெரிய பொறுப்பு இப்போதைக்கு உங்களிடம் இல்லை என்பதை சற்று மானசீகமாக உணருங்கள்.
எங்கள் கடமையை நாம் சரியாக செய்வோம். அசிரத்தை கொள்ளாதிருப்போம். நாமும் எம் வீட்டிலுள்ளவர்களும் வெளிச்செல்லாமல் இருப்பதே இப்போதைக்கு மிகப்பெரும் உபயம். உதவி. அந்த தார்மீக கடமையை மனமுவந்து ‘எனது நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காவும்’ செயற்படுத்துவோம்.

இச்செயற்பாட்டை குலைக்கவும், தம் இலாபங்களை அடைந்து கொள்ளவுமென பதுங்கியிருக்கும் பல கறுப்பாடுகள் பற்றி தெளிவாக இருப்போம்.வைரஸை விட கொடுமையான அக்கறுப்பாடுகள் சந்தர்ப்பம் பார்த்து கழுத்தறுக்கும்.  அவை பற்றி இன்னுமொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

Dr.Izzathun Nisa

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.