சனிக்கிழமை (மார்ச் 28) நண்பகல் வேளை வரை, 17,457 க்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பில் தம்மைப் பதிவு செய்துள்ளனர். இவர்களுள் 6773 பேர் மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்தும், 1892 பேர் ஐரோப்பாவிலிருந்தும், 1302 பேர் தெற்காசியாவிலிருந்தும், 1028 பேர் வட அமெரிக்காவிலிருந்தும் மற்றும் 6000 க்கும் மேற்பட்டவர்கள் உலகின் ஏனைய பகுதிகளிலிருந்தும் தம்மைப் பதிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) ஆகியன இணைந்து உருவாக்கிய இந்த இணைய முகப்பு வியாழக்கிழமை (26 மார்ச் 2020) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான வலைத்தள இணைப்பினை அமைச்சின் வலைத்தளப் பக்கமான www.mfa.gov.lk முகவரியிலும், மற்றும் www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணையத்தளத்திலும் அணுகிக் கொள்ளலாம். கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக பிரத்தியேகமான அதிகாரிகள் குழுவொன்று வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பின் மூலமாக பெற்றுக்கொள்ளப்பட்ட 700 கோரிக்கைகளில் பெரும்பாலானவை நாடு திரும்புவதற்கான சாத்தியப்பாடுகளுடன் தொடர்பானவையாகும். எவ்வாறாயினும், கோவிட்-19 வைரஸ் அபாயம் குறைவடையும் வரையிலும், மற்றும் இலங்கையிலும் இந்த நோய் காணப்படுவதன் காரணமாகவும், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தற்போது இருக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தி அரசாங்கத்தினால் நேற்று (மார்ச் 27) விடுக்கப்பட்ட விஷேடமான வேண்டுகோளுக்கு அமைய, வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் உடனடியான தேவைகளை எளிதாக்குவதற்காகவும், தீர்வு காண்பதற்காகவும் அமைச்சு தனது தூதரக வலையமைப்பினூடாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. ஏனைய பொதுவான கோரிக்கைகளில் மாணவர்களின் நலன்புரிசார் விடயங்கள், வீசாவினை நீடித்தல், வேலையற்றவர்களுக்கான நிதியுதவியின் பற்றாக்குறை, சம்பளம் வழங்கப்படாமை, வர்த்தக நிறுவனங்களை மூடுதல் மற்றும் வருகை தந்தவுடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படல் தொடர்பான கேள்விகள் ஆகியன உள்ளடங்கும்.
பயணத்திற்கான இடையூறுகள் ஏற்பட்டதிலிருந்து, கடந்த இரண்டு வாரங்களாக வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் விழிப்புடன் செயற்பட்டு வருவதுடன், குறிப்பாக மாணவர் சமூகத்தினால் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளுக்கு விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில், விடுதிகள் திறந்த நிலையில் இருப்பதனை உறுதிசெய்தல், உணவு விநியோகம் / வழங்குதல் அந்தந்த நிறுவனங்களால் பேணப்படுதல், மருத்துவ உதவிகள் தேவைப்படுபவர்களை மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அனுப்பி வைத்தல் மற்றும் சாத்தியமாயின், பல்கலைக்கழகம் / பாடசாலைக் கட்டணங்கள் நீடிக்கப்படுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியன சிலவாகும். இலங்கை மாணவர்கள் மற்றும் மாணவர் சமூகத்துடன் கூடிய கல்வி நிறுவனங்களுடன் நெருக்கமான ஈடுபாட்டைப் பேணுவதற்காகவும், அவர்களுக்கான நலன்புரி சார்ந்த விடயங்களை தொடர்ந்தும் வழங்குவதற்காகவும் தூதரகங்கள் மேலும் பணிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவிலுள்ள இலங்கை ஊழியர்களைப் பொறுத்தவரை, வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்காக முடிந்தவரை நியாயமான சிகிச்சை மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தூதரகங்கள் அந்தந்த அரசாங்கங்களுடன் இணைந்து செயற்படும். சம்பளம் வழங்குவது தொடர்பான தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் தொழில் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியன இதில் உள்ளடங்கும்.
பரந்தளவிலான இலங்கையர்களின் மக்கள் தொகை காரணமாக, சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கும், வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக உதவிகள் தேவைப்படுபவர்களுக்கும் உதவிகளை வழங்குவதற்காக, இலங்கையர்களால் நிறுவப்பட்ட சங்கங்கள், அமைப்புக்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் தூதரகங்கள் மேலும் கோரப்பட்டுள்ளன.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.