இந்தியாவில் கொரோனா கிருமி தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 863ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இன்று (27-3-2020) ஒரு நாளில் புதிதாக 136 பேருக்கு கொரோனா கிருமி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் கொரோனா கிருமி தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 863ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அடுத்த ஓரிரு மாதங்களில் 30,000 கூடுதல் வெண்டிலேட்டர்களை வாங்க பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 10,000 வெண்டிலேட்டர்களைத் தயாரிக்க பொதுத்துறை நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன” என்று கூறினார்.

தமிழகத்தை பொறுத்தவரை, இதுவரை 35 பேருக்கு கொரோனா கிருமி தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஆறு பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு தொற்று இருப்பது சோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது என தேசிய சுகாதார அமைப்பு (தமிழகம்) தெரிவித்துள்ளது.

ஈரோடு மற்றும் கோவையில் உள்ள போத்தனூர் ரயில்வே மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்த மருத்துவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதால் இம்மருத்துவமனைகள் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளன. 23ஆம் தேதி முதல் இம்மருத்துவமனைகளுக்கு வந்து சென்ற நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும், கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்திருந்த நபர்களுடன் தொடர்பில் இருந்த இரண்டு நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கும் கொரோனா பாதிப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் அரியலூரில் இருப்பதால், அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இதுவரை கொரோனா தாக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்களாக இருப்பதால், 2020 பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 96,663 பேரை கண்டறிய வேண்டியுள்ளது என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தனிமைப்படுத்திக்கொள்ளுதல் மட்டுமே தற்போதைய தீர்வாக இருப்பதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோதியிடம் தெரிவித்துள்ளார். சமூக விலகலை பொது இடங்களில் உறுதிப்படுத்த சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை மற்றும் காவல்துறையினரோடு ஆலோசனை செய்துவருவதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா கிருமி பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் மற்ற இன்றியமையாத தொழில்களை செய்பவர்களுக்கு ரோஜா பூக்களை கொடுத்த காவல்துறையினர் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.”கொரோனா கிருமி தாக்கத்திலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ் வங்கி மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த அறிவிப்புகள் பணப்புழக்கத்தை மேம்படுத்தும், செலவினத்தை குறைக்கும், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கும் வணிகங்களுக்கும் உதவும்” என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, கேரளாவுக்கு அடுத்து இந்தியாவில் கொரோனா கிருமி தொற்று அதிகம் ஏற்பட்டவர்களை கொண்ட மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

இந்திய தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையால் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் சூழ்நிலை இன்றும் தொடர்கிறது. இதுதொடர்பாக, ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய ஒருவர், “எங்களிடம் இருந்த மொத்த பணமும் தீர்ந்தவிட்டது. ராஜஸ்தானை சேர்ந்த நாங்கள் டெல்லியிலுள்ள பூங்காவில் தங்கி பணிபுரிந்து வந்தோம். இப்போது பணத்திற்கு வழியில்லை என்பதால், நாங்கள் மூன்று நாட்கள் நடந்தே எங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்று கூறினார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.