கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை சமூக வலைத்தளங்களில் முன்னுரிமைப்படுத்துங்கள் - முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வேண்டுகோள்!


தற்போதைய சூழ்நிலைமையை கவனத்தில் கொண்டு முகநூல் பிரச்சாரங்கள் ஏனைய அரசியல் சார்ந்த பிரச்சாரக் கூட்டங்கள் போன்றவற்றை தவிர்த்து எங்களுடைய மக்களுக்கு நோயின் தாக்கம் சம்பந்தமாகவும் இந்நோயிலிருந்து விடுபடுவது சம்பந்தமாகவும்  உரிய ஆலோசனைகளை வழங்குவதற்கு நாங்கள் அனைவரும்  முன்வர வேண்டும்  என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (20) வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அன்றாடம் கூலி தொழில் செய்து வரும் தொழிலாளர்களுக்கு இந்த கட்டத்தில் அரசாங்கம்  பருப்பு மற்றும் ரின்மீன் விலையை குறைப்பதால்  அவர்களுடைய கஷ்டங்களை தீர்க்க முடியாது. எனவே இந்த சுய தடுப்பு முறை அமுலில் இருக்கும் வரை அவர்களுக்கான உணவுப் பொதிகளை அரசாங்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி பிரதமர் ஆகியோர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக ஒரு அவசர கால சூழ்நிலையில் அவர்களுக்கான அன்றாட உணவுத்தேவையை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை அவசரமாகவும் தீவிரமாகும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்ற போது அனாவசியமாக பொது இடங்களில் கூட்டமாக கூடி நிற்காமல  தங்களுடைய நலன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் அதற்கு பொதுமக்கள்  பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கு ஊடகவியலாளர்கள் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளாக இந்த நாட்டில் 225 பேர் இருந்தார்கள்.  இன்று அதிகார ரீதியாக கலைக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில்  பாராளுமன்றம் இல்லாததால் இந்த  விடயங்களை விவாதித்து ஒரு நிலைப்படுத்துவதற்காக ஒரு பொறிமுறை இல்லாதது குறைபாடாக இருந்து வருகின்றது எனவே ஜனாதிபதி  தன்னுடைய சட்ட ரீதியாக அதிகாரத்தை பயன்படுத்தி  அவசர கால சூழ்நிலையில் அவர் மீண்டும் அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டி இந்த பொதுமக்களுடைய நலனை கவனத்தில்  கொண்டு  உரிய நடவடிக்கைகளை சகல பிரதேசங்களுக்கும் குறைபாடின்றி  விரிவுபடுத்துவதற்காக சகல மக்கள் பிரதிநிதிகளையும் சகல அரசியல் கட்சிகளை உள்ளடக்கி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு பொறிமுறை ஊடாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை  தீர்க்க  அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.