கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலை காரணமாக வறியவர்கள், கூலி வேலை செய்வோர், சுய தொழிலில் ஈடுபடுவோர், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்காமல் அத்தியாவசியப் பொருட்களை முற்றிலும் இலவசமாக பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்நின்று செயற்படும் மருத்துவ சுகாதார சேவையாளர்களுக்கும் பாதுகாப்புப் பிரிவினருக்கும் ஏனைய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் எவ்வித கட்சிபேதமுமின்றி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.

அதேவேளை தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின் அதனைச் சுட்டிக்காட்டி திருத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பும் எமக்கிருக்கிறது.
அந்த வகையில் இன்றளவில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் வருமான இழப்பு என்பவற்றின் காரணமாக பெருமளவான மக்கள் பாரிய நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்திருக்கின்றனர். வறியவர்கள், கூலி வேலை செய்வோர், சுய தொழிலில் ஈடுபடுவோர், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் தற்போதைய சூழ்நிலையில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய துன்பங்களை நாம் அனைவரும் புரிந்துகொள்வது அவசியமாகும். நாம் எவ்வித சுயநல எண்ணமுமின்றி பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்து உதவுவதற்கு முன்வர வேண்டும். அவர்களது கைகளில் குறித்தளவு நிதியைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு வேலைத்திட்டத்தை உடனடியாக செயற்படுத்துவது அவசியமாகும்.

இந்த நெருக்கடி நிலையில் மனிதாபிமான அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும். எனவே இப்போது மக்களுக்கான நிவாரண உதவி என்ற பெயரில் அதற்காக அவர்களிடமிருந்து பணம் வசூலிக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன். மக்களுக்கான நிவாரணப் பொருட்களை முற்றிலும் இலவசமாகவே பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா என்ற பரிசோதனையை மேற்கொள்ளும் எண்ணிக்கையும் வேகமும் அதிகரிக்கப்பட வேண்டும்.

அந்த வசதிகள் அமெரிக்காவில் இருக்கின்ற காரணத்தினால் அந்நாட்டு சுகாதார அமைச்சரிடமிருந்து இது குறித்த ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.