அப்பாஸியா கலீஃபாக்களில் ஐந்தாவது கலீஃபா ஹாரூன் ரஷீது என்பவர்.

அப்பாஸியாக்களின் ஆட்சி நீண்ட நெடிய காலம் இருந்திருந்தாலும், அவர்களில் கலீஃபா ஹாரூன் ரஷீத் மட்டுமே மிகவும்  பிரபலமாக திகழ்ந்தார் எனலாம்.

இவருடைய ஆட்சி காலத்தில் ஒரு தடவை மிகப்பெரிய பஞ்சம் வந்தது. இந்த பஞ்சத்தின் விளைவுகள் சமர்கந்திலிருந்து பக்தாது வரையிலும், கூஃபாவிலிருந்து   மராகிஷ் வரையிலும் கடும் நெருக்கடியை உண்டாக்கியது.

ஹாரூன் ரஷீத் அவர்கள் இந்த நிலைமைகளை சமாளிக்க பலவித திட்டங்களை செயல்படுத்தினார்.

மக்களுக்காக அரசாங்க உணவுக்கிடங்குகளை திறந்து விட்டார். வரிகளை மன்னித்தார். நாடு முழுவதும் இலவச உணவுப் பந்தல்களை உண்டாக்கினார்.

அதிகாரிகள், தலைவர்கள், வியாபாரிகள் எல்லோரையும் மக்கள் சேவையில் ஈடுபடச் செய்தார். எத்தனை முயற்சிகள் செய்தும் நிலைமையை சரிபடுத்த இயலவில்லை.

இந்த பிரச்சினைகளின் காரணமாக ஒருநாள் இரவு ஹாரூன் ரஷீத் கடும் மன உளைச்சலில் இருந்தார். அவரால் உறங்க முடியவில்லை.

எனவே, நிலைமை குறித்து ஆலோசனை செய்ய தலைமை அமைச்சர் "யஹ்யா பின் காலித்" அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இவர் கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்களுக்கு ஆசிரியரும் கூட. கலீஃபா சிறு வயது முதலே அவரிடம் பாடம் படித்துள்ளார்.

ஹாரூன் ரஷீத், தனது ஆசிரியரும் தலைமை ஆசிரியருமான யஹ்யா அவர்களிடம் கேட்டார், "ஆசிரியர் அவர்களே! எனது  மன உளைச்சலை போக்கி, நிம்மதி தருகின்ற வகையில் ஏதாவது ஒரு கதையோ, வரலாறோ சொல்லுங்களேன்."

இதைக் கேட்ட யஹ்யா புன்னகைத்தவாறே கூறினார்: "மன்னர் அவர்களே! ஏதோ ஒரு நபியின் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நான்  படித்துள்ளேன். அல்லாஹ்வின் தக்தீர் (விதி) மற்றும் திருப்தி போன்ற விவரங்களை அழகாக விளக்கும் கதை அது. நீங்கள் விரும்பினால் கூறுகிறேன்."

ஹாரூன் ரஷீத் கூறினார்: "முதலில் அதை சொல்லுங்கள்.  மன உளைச்சலின் காரணமாக எனக்கு மூச்சு முட்டுகிறது." யஹ்யா கதையை சொல்ல ஆரம்பித்தார்.

ஏதோ ஒரு காட்டில் ஒரு பெண் குரங்கு தனது குட்டியுடன் வசித்து வந்தது. ஒரு நாள் அது எங்கோ தூர பயணம் போக வேண்டி இருந்தது. ஆனால் குட்டியை உடன் கொண்டு போக முடியாத சூழ்நிலை. எனவே காட்டுக்கு ராஜாவாக இருந்த சிங்கத்திடம் வந்து,  அரசே! நான் வெளியூர் பயணம் போகிறேன். நீங்கள் காட்டுக்கே ராஜா. அதனால் உங்கள் பாதுகாப்பில் எனது குட்டியை விட்டு செல்கிறேன். பார்த்து கொள்வீர்களா? என கேட்டது. சிங்கமும் ஏற்றுக் கொண்டது. குரங்கும் பயணம் போய் விட்டது.

அதன் பிறகு சிங்கம் வெளியே போகும் போதெல்லாம் குரங்கு குட்டியை தனது தோளில் ஏற்றிக்கொண்டு காட்டை வலம் வரத்தொடங்கியது. தினமும் இதே வழக்கம். குட்டியும் பாதுகாப்பாக இருந்தது.

ஒரு நாள் சிங்கம் இப்படி குரங்கு குட்டியை தோளில் வைத்தவாறு  போய்க்கொண்டு இருந்த போது எங்கிருந்தோ திடீரென வந்த கழுகு பறவை ஒன்று, குட்டியை தூக்கிக் கொண்டு பறந்து விட்டது. சிங்கம் அங்கே இங்கே ஓடி, தேடி அலைந்தாலும் கழுகையும் காண முடியவில்லை; குரங்கு குட்டியையும் மீட்க முடியவில்லை. சிங்கம் பெரிய கவலையில் ஆழ்ந்தது.

சில நாட்களுக்கு பிறகு வந்த தாய்க்குரங்கு, சிங்கத்திடம் தனது குட்டியை திரும்ப கேட்டது. சிங்கம் வெட்கத்தோடு நடந்ததை கூறியது. அதைக் கேட்ட குரங்கு, சிங்கத்தை தாறுமாறாக திட்டியது.

"உனக்கு வெட்கமாக இல்லையா? நீ காட்டுக்கே அரசன் என்கிறாய். ஒரு குட்டியை, அமானிதத்தை பாதுகாக்க முடியவில்லையே. முழு காட்டையும் எப்படி ஆளப்போகிறாய்?"

சிங்கம் வெட்கத்தோடு பதில் சொன்னது, "நான் நிலத்தில் தான் ராஜா. தரைவழியாக எந்தவித ஆபத்து வந்து இருந்தாலும் நான் உனது குட்டியை காப்பாற்றி இருப்பேன். ஆனால் இந்த ஆபத்து வானத்திலிருந்து வந்தது. அதை வானத்தில் உள்ளவன் காக்க முடியும். நான் என்ன செய்ய!"

யஹ்யா பின் காலித் இந்த கதையை கூறிவிட்டு,
"அரசர் அவர்களே! இந்த பஞ்சமும் நிலத்திலிருந்து உண்டாகி இருந்தால், நீங்கள் அரசராக நின்று, கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆனால் இது வானத்திலிருந்து இறங்கிய வேதனை. அதை இறக்கிய அல்லாஹ் தான் போக்க முடியும்.

எனவே, நீங்கள் அரசராக இல்லாமல், ஒரு யாசகனாக அல்லாஹ்விடம் மண்டியிட்டு உதவி கேளுங்கள். நிச்சயம் அல்லாஹ் இந்த பஞ்சத்தைப் போக்கி விடுவான்."

"ஆபத்துகள் இரண்டு வகையில் வரலாம். நிலத்திலிருந்து உண்டாகும் ஆபத்துகளை மக்கள் இக்லாசான முறையில் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் உதவியோடு போராடினாலே, தீர்த்து விடலாம்.

வானத்திலிருந்து வரும் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டுமானால்... அல்லாஹ்வை திருப்தி படுத்தாத வரை முடியாது. அல்லாஹ்வை திருப்தி படுத்த நீங்கள் அரசராக அல்ல ; யாசகனாக மாற வேண்டும். அவனிடம் தவ்பா செய்து உதவி தேடுங்கள். நிச்சயம் கிடைக்கும்.

எல்லா பிரச்சினைகளுக்கும், அதன் தீர்வுகளுக்கும் மத்தியில் உள்ள இடைவெளி, நெற்றிக்கும், ஸஜ்தா செய்யும் இடத்திற்கும் உள்ள தூரம் தான்.

நமது பிரச்சனைகளுக்கு தீர்வை தேடி ஏழு கடல்களையும் தாண்டி போக முயல்கிறோம். ஆனால் நமது நெற்றியை தரையில் வைத்து அல்லாஹ்விடம் உதவி கேட்க மறக்கிறோம்.

கதையின் நீதி:
இப்போது நம்மை சூழ்ந்து கொண்டுள்ள எல்லா வித ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பு பெற, அல்லாஹ்விடமே சரணடைவோம், உதவி பெறுவோம்.


(உருதுவிலிருந்து)

- சென்னை ஜியாவுதீன் பாகவி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.