(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனையைச் சேர்ந்த ஒரு குடும்பஸ்தர் திடீரென நோய்வாய்ப்பட்டு, மயக்கமுற்றிருந்த நிலையில் கல்முனை மாநகர சபையின் கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையத்தின் அவசர நடவடிக்கையினால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சற்றுமுன் நடந்த இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது;

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் கல்முனை நகர மண்டப வீதியை சேர்ந்த ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு, மயக்கமுற்றுள்ளார். இதையடுத்து அவரது மனைவி, பிள்ளைகள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக போக்குவரத்து வசதியின்றி நிர்க்கதியான ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தனர். அக்குடும்பத்தினருக்கு உதவ எவரும் வரவில்லை.

இது பற்றி கல்முனை மாநகர சபையின் கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அவரது குடும்பத்தினரால் தகவல் வழங்கப்பட்டது.

இதையடுத்து மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் மற்றும் மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் ஆகியோர் துரிதமாக செயற்பட்டு, கல்முனை பொலிஸ் நிலையத்தில் இருந்து அவசர அம்பியூலன்ஸ் வண்டியைப் பெற்று, குறித்த நோயாளியின் ஸ்தலத்திற்கு சென்று, மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் உதவியுடன்அங்கிருந்து, அந்நோயாளி அந்த அம்பியூலன்ஸ் மூலம் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் கொரோனா பீதியும் மக்களை ஆட்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் யாராவது நோய்வாய்ப்பட்டால் அவருக்கு உதவுவதற்கு எவரும் முன்போகாத ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. அவ்வாறான ஒரு சம்பவமே இன்று கல்முனையிலும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கல்முனை மாநகர சபையின் கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையத்தின் அவசர நடவடிக்கையினால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு குடும்பஸ்தர் காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை இத்தகவல் மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டு, அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்கும் தெரிவிப்பதற்கும் நீங்களும் அழைக்கலாம்.

# 0672059999
# 0767839995

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.