ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் பொறுமையை கடைபிடிப்பது இன்றியமையாததாகும்.
வாழ்வின் எல்லாவிதமான கஷ்டங்களையும், இழப்புகளையும்,
தோல்விகளையும் சகித்துப் பொறுத்துக் கொள்ள ஒரு முஸ்லிம் கற்றுக் கொள்ள வேண்டும்.
பொறுமை இழந்து தன்னுடைய குழியை தானே பறித்துக் கொள்ளக்கூடாது. 

அல்லாஹ்வை விசுவாசித்தவன்
துன்ப-துயரங்களைக் கண்டு விரண்டோடி விடக் கூடாது.
தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில், வாழ்க்கையின் யதார்த்தத்தை எதிர் கொள்வதில் எற்படும் ஐயங்கள், தோல்வியைப் பற்றிய பயம் இவை ஒருபோதும் அவனுடைய பொறுமையை அழித்து அவனை நடைப்பிணமாக ஆக்கிவிடக்கூடாது. 

வாழ்க்கை என்ற திறந்த, பரந்த வெளியில் சுற்றி வரும் கருமை நிற மேகங்களைக் கண்டு அவன் அஞ்சிப் பதுங்கிவிடாது, இறைநம்பிக்கை நிறைந்தவனாக இருக்க வேண்டும்.
 
ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் கஷ்டங்களும், கடுமையான இழப்புகளும் ஏற்படவே செய்யும். ஈமானிய வாழ்வில் துன்பமும், துயரமும், சோதனைகளும் ஏற்படவே  செய்யும் என்ற எதிர்பார்புடனே அவன் தனது இஸ்லாமிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும்.   

  நம்பிக்கை கொண்டோரே! 
பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
(அல் குர்ஆன் 2:153)

காலத்தின் மீது சத்தியமாக! 
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்!
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை) 
(அல் குர்ஆன் 103:1-3)

எத்தகைய சூழலையும் பொறுமையோடு சிந்தித்து செயல்பட்டால் இறைவன்  வெற்றியைத் தருவான். 
ஆதலால்,
"இறைவா!
நாம் அறியாமல் கோபப்படும் சமயத்தில் கூட ஷைத்தானை விரட்டியடித்து நீ கூறிய அருட்கொடையாம் பொறுமையை எமக்குத் தந்தருள்வாயாக!"
என்று நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம். அதற்கான பலன்களை ஈருலகத்திலும் அடைவோம்!
இன்ஷா அல்லாஹ்!
                         
          🌻🌻🌻🌻

_Writer :_
Sasna Baanu Nawas
  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.