(ஆர்.யசி)

கடந்த காலங்களில் டெங்குநோய் காரணமாக 500 தொடக்கம் 600 பேர் வரை உயிரிழந்த நிலையிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக இப்போது வரையில் ஏழுபேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இறுதி நபர் குணமடையும் வரையில் தேர்தலை நடத்தக்கூடாதென்றால் இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு தேர்தலை நடத்த முடியாது எனவும் கூறுகின்றார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று (30) அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் நெருக்கடி நிலைமைகளில் மக்கள் கொரோனா வைரஸ் தாக்கங்களில் அச்சமுற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கூறுவதை விடவும் புத்திசாதுரியமான மட்டத்தில் அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

இறுதி நோயாளி குணமடையும் வரையில் நாட்டில் எந்தவொரு தீர்மானமும் எடுக்காது, தேர்தல் நடத்தாது இருக்க வேண்டும் என்றால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் முற்றுமுழுதாக நீங்க இன்னமும் ஒன்றரை ஆண்டுகாலம் எடுக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது, ஆகவே அவர்களின் கருத்துக்கமைய நடவடிக்கை எடுத்தால் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் நாட்டில் தேர்தலை நடத்த முடியாது.

கடந்த காலங்களில் நாட்டில் ஆண்டுதோறும் 500,600, பேர் டெங்கு நோயினால் உயிரிழந்த சந்தர்ப்பங்களில் தான் நாட்டில் சகல தேர்தல்களும் நடத்தப்பட்டன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இப்போது வரையில் எழு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் தேர்தல் நடத்தப்படுவது குறித்து தீர்மானங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவே முன்னெடுக்க வேண்டும். தேர்தல்கள் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் தீர்மானம் எடுப்பதும் இந்த நாட்டின் சுகாதார தன்மைகள் மக்களின் பாதுகாப்பு குறித்து சுகாதார அதிகாரிகள், வைத்தியர்கள் கூறும் தீர்மானங்களுக்கு அமையவேயாகும்.

ஆகவே இது குறித்து ஜனாதிபதி, பிரதமருக்கோ அல்லது அமைச்சரவைக்கோ தனித் தீர்மானம் எடுக்கவோ அல்லது தீர்மானங்களை அறிவிக்கவோ முடியாது. எமது எதிர்பார்ப்பும் நாளைய தினமே அனைத்து மக்களும் பாதுகாக்கப்பட்டு இந்த நோய் இல்லாது போய் வழமையான நிலைமைகள் உருவாக வேண்டும் என்றே வேண்டிக்கொள்கிறோம்.

அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக முன்னெடுக்க முடியும் என நம்புகின்றோம். இப்போது தேர்தலை நடத்துவது அல்ல எமது நோக்கம், முதலில் மக்களை பாதுகாக்க அரசாங்கம் முழுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தேர்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் கூறும் நிலைப்பாட்டிற்கு அமைய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்கும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.