இரு மாதங்கள் கடலில் தத்தளித்த ரோஹிங்யர்களை மீட்ட பங்களாதேஷ் ; 24 பேர் பட்டினியால் மரணம்


இரு மாதங்களாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகிலிருந்து 382 ரோகிங்யா அகதிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள பங்களாதேஸ் கரையோர காவல் படையினர் குறிப்பிட்ட படகிலிருந்த 24 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

382 ரோகிங்யா இனத்தவர்களை மீன்பிடிப்படகிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளோம் என கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் பட்டினியால் வாடிய நிலையில் காணப்பட்டனர், கடந்த 58 நாட்களாக அவர்கள் கடலில் இருந்துள்ளனர். ஏழு நாட்களாக அவர்களது படகு எங்கள் கடற்பகுதியில் இருந்துள்ளது என பங்களாதேஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மீன்பிடிப்படகொன்று நடமாடுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த படகை தேடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்களும் சிறுவர்களும் கடற்கரையில் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் தரையிறக்கப்பட்ட பகுதியை நாங்கள் சுற்றிவளைத்துள்ளோம், அவர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக அவர்களை நெருங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இது ரொகிங்யா அகதிகளின் படகு முடக்கல் காரணமாக மலேசியா தாய்லாந்து போன்ற நாடுகளிற்குள் நுழைய முடியவில்லை என மனித உரிமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்