ஜூன் 2 இற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு போதுமான காலம் இருப்பதாகவே நான் நினைக்கின்றேன் - அலி சப்ரி


(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தை கூட்டுமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மாறாக வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்கு தெரிவித்துவரும் கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு தற்போதி எதிர்கொண்டுள்ள அசாதாரண நிலையில் பாராளுமன்றத்தை அவசரமாக கூட்ட வேண்டிய எந்த தேவையும் இல்லை. அவசர சட்டமூலம் எதுவும் ஏற்படுத்த வேண்டிய தேவையிருந்தாலே பாராளுமன்றத்தை அவசரமாக கூட்ட வேண்டும்.

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கின்றது. அவ்வாறான அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் ஜனாதிபதி அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பார். அத்துடன் ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை வைத்துக் கொண்டே பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

பாராளுமன்றம் ஜனாதிபதியினால் ஒத்தி வைக்கப்பட்டாலே மூன்று மாதத்துக்குள் கூட்டப்பட வேண்டும். ஆனால் தற்போது ஒத்தி வைக்கப்படவில்லை. மாறாக தேர்தலுக்காக கலைக்கப்பட்டிருக்கின்றது. தேர்தலை உரிய திகதியில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. இருந்தபோதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தி விரைவில் தேர்தலுக்கு செல்லவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.

தற்போதுள்ள நிலையில் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் பொதுத் தேலை நடத்துவதற்கு போதுமான காலம் இருப்பதாகவே நான் நினைக்கின்றேன். அத்துடன் கொரோனா வைரஸை காரணம் காட்டிக்கொண்டு தொடர்ந்து இவ்வாறு இருக்க முடியாது. நாடு சாதாரண நிலைமைக்கு திரும்பி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நிலையான அரசாங்கம் ஒன்றை விரைவாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மேற்கொண்டுவரும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. அதனை குளப்புவதற்கே பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றார்களே தவிர ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கம் அவர்களிடம் இல்லை.
அத்துடன் ஜனாதிபதி வேலைத்திட்டங்கள் காரணமாக மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் மதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்தலுக்கு சென்றால் பாதிப்பு ஏற்படும் என்ற சுயநலமே தேர்தலுக்கு செல்லாமல் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்து வருகின்றது.

தற்போதுள்ள பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் பாராளுமன்றத்தை கூட்டினால் எதிர்க்கட்சியினர் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்திக் கொண்டு எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளலாம். அதனால்தான் அவர்கள் தேர்தலுக்கு செல்லாமல் பாராளுமன்றத்தை கூட்டுமாறு தெரிவிக்கின்றனர்.
மேலும் தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அவ்வாறான நிலையில் அந்த நாடு கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்திக் கொண்டு தேர்தலையும் உரிய நேரத்தில் நடத்தி முடித்திருக்கின்றது. அதனால் கொரோனா வைரஸை பயன்படுத்திக் கொண்டு தேர்தலை பிற்படுத்தி, அதன் மூலம் அரசியல் லாபம் தேடவே எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது. மாறாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கம் அவர்களிடம் இல்லை என்றார்.

கருத்துகள்