3.7 லட்சம் இலங்கையர்களை கொன்ற வைரஸ்: மட்டக்களப்பில் பேரழிவு: 100 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த பேரவலம்


3.7 லட்சம் இலங்கையர்களை கொன்ற வைரஸ்:
மட்டக்களப்பில் பேரழிவு:
100 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த பேரவலம்

....................................................................
முழு உலகும் ஸ்தம்பித்துவிட்டது இந்த கொரோனாவால்...

ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது மரணம்..15 லட்சத்தைத் தாண்டிவிட்டது தொற்று .

இத்தோடு முடிந்துவிடுமா அல்லது இன்னும் தொடருமா?

எதுவும் புரியவில்லை.திகைத்துப் போய்நிற்கிறது உலகம்.

இவ்வாறான வைரஸ்களால் ஏற்பட்ட அனர்த்தங்கள் உலகிற்குப் புதிதல்ல.வரலாறு கூறும் ஆதாரங்கள் அதிகம்.

பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லுங்கள்.உயிர் அழிவுகளை எடுத்துப் பாருங்கள்.கொரோனா ஒரு மேட்டரே இல்லை.அவற்றுடன் ஒப்பிடுகையில்...

எமது நாடும் தப்பவில்லை அந்த அழிவுகளில் இருந்து...எம்மில் அதிகமானோருக்குத் தெரியாத உண்மை அது.அதைச் சொல்வதற்கே இந்தக் கட்டுரை....

கொரோனாவால் வெறும் 7 பேர் மாத்திரமே மரணம்..ஆனால்,100 வருடங்களுக்கு முன் பரவிய ஸ்பெயின் வைரஸ் காய்ச்சலால் எமது நாடு இழந்த உயிர்கள் எத்தனை தெரியுமா? 3 லட்சத்து 70 ஆயிரம்.

சரியான பதிவுகள் இல்லை.இதனால் இறப்புகள் இன்னும் அதிகம் என்றே சொல்லப்படுகிறது.

20 ஆம் நூற்றாண்டில் உலகம் எதிர்கொண்ட பேராபத்துத்தான் இந்த ஸ்பெய்ன் காய்ச்சல் [spanish Flu ] .

1918 முதல் 1919 வரை முழு உலகையும் ஆட்டிப் படைத்தது இந்த வைரஸ்.

50 கோடிப் பேருக்குத் தொற்று.5 கோடிக்கு மேற்பட்டோர் மரணம்.அமெரிக்காவில் மட்டும் 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் பலி.

அமெரிக்க படையினருக்கே முதல் தொற்று.அவர்களிடமிருந்துதான் பரவுகிறது உலகிற்கு.

முதலாவது உலக மகா யுத்த காலம் அது.அதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுகிறார்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்க இராணுவத்தினர்.

அந்த வைத்தியசாலையில் இருந்தே கண்டுபிடிக்கப்படுகிறார் முதலாவது நோயாளி.

இந்த நோய் பற்றிய உண்மைகளை மறைக்கின்றன உலக மகா யுத்தத்தில் கலந்துகொண்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்.

காரணம்? யுத்தம் ஒருபுறம்..வைரஸ் மறுபுறம்..

இதனால் மக்கள் கலவரமடையக்கூடும்.இதனால்தான் மூடிமறைக்கப்படுகிறது இது.

இதனால் இப்போது பதியப்பட்டுள்ள உயிரிழப்பு பற்றிய எண்ணிக்கை ஓர் ஊகம்தான் என்கிறது வரலாறு.

கொரோனாவின் பிறப்பிடம் சீனாவின் வூஹான்.ஆனால்,இந்த ஸ்பெய்ன் வைரஸின் பிறப்பிடம் சரியாகத் தெரியவில்லை.

அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியா போன்ற இடங்களில் இருந்து உருவாகி இருக்கலாம் என்று ஓர் ஊகம்.

இது ஸ்பெயின் காய்ச்சல் என்று அழைக்கப்படுவதால் ஸ்பெயின் நாட்டில் உருவானது என்று அர்த்தமல்ல.

அமெரிக்கா,பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்த் ஆகிய நாடுகளில் பரவிய பின்தான் இந்த நோய் ஸ்பெயினுக்கே சென்றது.

அந்த நாடுகளில் இந்த நோய் பரவிய செய்தி அப்போது மறைக்கப்பட்டிருந்தது.

ஆனால்,ஸ்பெயின் உலக மகா யுத்தத்தில் கலந்துகொள்ளவில்லை.நடுநிலை வகித்தது.இதனால் இந்த நோய் பற்றிய தகவலை மறைக்க வேண்டிய தேவை ஸ்பெயினுக்கு இருக்கவில்லை.

உள்ளதை உள்ளபடி வெளியிட்டது.இதனால் இந்தக் காய்ச்சல் ஸ்பெயினில் இருந்து உருவானது என்றே அப்போது பலரும் நம்பினர்.

இதனால்தான் ஸ்பெய்ன் காய்ச்சல் என்று அழைக்கப்பட்டது.

ஸ்பெய்ன் காய்ச்சல் என்று ஐரோப்பிய நாடுகள் அழைக்க பிரான்ஸ் காய்ச்சல் என்று ஸ்பெயின் அழைத்தது.

உலகம் பூராகவும் சுற்றி வந்த இந்த வைரஸ் இலங்கையையும் விட்டுவைக்கவில்லை.

கொழும்பு துறைமுகம்- தலைமன்னார் ஊடாக நுழைகிறது இலங்கைக்குள் .1918 ஆண்டு ஜூன் மாதம்...

கரையோரங்களில்தான் முதல் தாக்குதல்...பின்னர் நுழைகிறது நாட்டின் ஏனைய பகுதிகளுக்குள்.

புரட்டிப் போடுகிறது மட்டக்களப்பு மாவட்டத்தை....

முதல் கட்டம் குறைந்தளவிலேயே பாதிப்பு...குறைகிறது வைரஸின் தாக்கம்.

இரண்டாம் கட்டம் ஒக்டோபர் மாதம்..விஸ்வரூபமெடுக்கிறது.தாக்குப் பிடிக்க முடியவில்லை மக்களால்...

பறிக்கிறது அதிக உயிர்களை...மடிகின்றன உயிர்கள் கொத்துக் கொத்தாக.

1918 ஜூன் முதல் டிசம்பர் வரை 91,600 பேர் பலி.அசுர தாக்குதல்.

1919 வரை நீள்கிறது அதன் தாக்குதல்.காவுகொள்கிறது 3.7 லட்சம் உயிர்களை...

நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவு.

அதுவாகவே ஒழிவதைத் தவிர அதை ஒழிக்கும் வழி தெரியவில்லை மக்களுக்கு.

மிகவும் பின் தங்கிய நிலையில் அன்று எமது நாடு.தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மாவட்டங்கள்-ஊர்கள்.படிப்பறிவு குறைந்த நிலையில் மக்கள்.

இதனால் மரணம் பற்றிய சரியான பதிவு இல்லை.

இருந்தாலும்,இந்த வைரஸால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 3.7 லட்சம் என்கிறது பிரித்தானிய தகவல்.

இந்தியாவில் 1.8 கோடி பேர் பலி.மஹாத்மா காந்திக்கும் தொற்றுகிறது.பின்னர் சுகமடைந்துவிட்டார்.

இதுவும் கொரோனாவைப்போல்தான்..மருந்து இல்லை...தனிமைப்படுத்தல்...சுத்தம்...சமூக இடைவெளி.

இவற்றின் மூலம்தான் கட்டுப்படுத்தப்படுகிறது.அதற்குள் 5 கோடிக்கு மேற்பட்டோரைக் கொன்றுவிட்டது.

ஸ்பெயின் வைரஸின் இந்தச் சாதனையை முறியடிக்குமா கொரோனா?அல்லது இத்தோடு ஒழிந்து போகுமா?

எமது கைகளில்தான் உள்ளது விடை.

100 வருடங்களுக்கு முன் இருந்த இலங்கை இல்லை இப்போது..

அன்று படிப்பறிவு குறைவு.ஊடகங்கள் குறைவு.தகவல்கள் கிடைப்பது குறைவு.

இவைதான் அன்று 3.7 லட்சம் மரணம் ஏற்படுவதற்குக் காரணம்.

ஆனால்,இன்று எமது நிலை வேறு.முன்னேறிவிட்டோம்.எல்லோர் கைகளிலும் ஊடகங்கள்.விழிப்புணர்வு அதிகம்.

இந்தச் சந்தர்ப்பத்தைத் மிஸ் பண்ணினால் எப்படியான அழிவை எதிர்கொள்வோம்?

சொல்ல முடியாது.

மீண்டும் அதே அழிவு-ஸ்பெயின் காய்ச்சலால் ஏற்பட்ட அழிவு ஏற்படாதிருக்க விழிப்புடன் இருப்போம்.சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவோம்.

[ ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக் ]

கருத்துகள்