90 கோடி எங்கே? முஸம்மிலின் பதில்


உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக உலக முஸ்லிம் லீக் இலங்கைக்கு வழங்கப்பட்ட 90 கோடி ரூபா பணத்துக்கு என்ன நடந்தது என்று இப்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உலக முஸ்லிம் லீக்கின் மாநாட்டின் போது உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் இலங்கைக்கு 90 கோடி ரூபாயை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு அன்பளிப்புச் செய்வதாக பகிரங்கமாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது அறிவித்திருந்தார்.

இப்போது பிரபல தேரரான ஓமல்பே சோபித தேரர் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த மாநாட்டில் சோபித தேரர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 90 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது? ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட இந்தப்பணம் பகிர்ந்தளிக்கப்பட்டதா? அது எங்கே இருக்கிறது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது இப்போது உயிர்த்த ஞாயிறு ஓரண்டு நிறைவை அனுஷ்டிக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்திலே இது எல்லோராலும் எழுப்பப்படும் ஒரு கேள்வியாக மாறி இருக்கின்றது.

இது தொடர்பாக இலங்கையிலே இந்த மாநாட்டை நடாத்துவதற்கு அனுசரணையாளராகச் செயற்பட்ட வடமேல் மாகாண ஆளுனர் ஏ.ஜே. முஸம்மிலிடம் கேட்கப்பட்ட போது அவர் தெரிவித்ததாவது,
இந்தப் பணம் கையளிக்கப்படுவதாக அந்தக் கூட்டத்திலே அறிவிக்கப்பட்டது.

 இந்த மாநாட்டின் இணைப்புப் பணியை மேற்கொண்ட அப்துல்காதர் மஷுர் மௌலானாதான் இதற்குப் பொறுப்பாக இருந்தார். இது தொடர்பாக தான் உலக முஸ்லிம் லீக்கின் செயலாளருக்கும் அதேபோன்று இலங்கையில் உள்ள சவூதி அரேபிய தூதுவருக்கும் விளக்கம் கோரி கடிதம் ஒன்றை அனுப்ப இருப்பதாகவும் ஆளுனர் முஸம்மில் தெரிவித்தார்.

மஷுர் மௌலானா தற்போது நாட்டில் இல்லாததால் இது பற்றி அவரிடமே கேட்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துகள்