(முன்னாள் அமைச்சர் மனோ கணேசன்)
மார்ச் 2ல் பாராளுமன்றத்தை கலைக்கும் போது, அந்த தினத்திலிருந்து சரியாக மூன்று மாதம் முடிவடைவதற்கு முன், புதிய பாராளுமன்றம் கூட வேண்டும் என்ற அரசியலமைப்பு விதிக்கு இசைவாகவே ஜனாதிபதி செயற்பட்டார். இதனாலேயே அவர் ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் என அறிவித்தார்.
ஆனால், அவர் நிர்ணயம் செய்த திகதியன்று தேர்தலை நடத்த முடியாது என்ற தேர்தல் ஆணையம் கூறிவிட்டதனாலேயே இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கோவிட்-19 கட்டுப்பாட்டுக்குள் வராமல் இருப்பதே இதற்கு மூல காரணம். தொற்றுநோயின் முடிவை பற்றி சுகாதார துறை உத்தரவாதம் தர தயங்குகிறது,
இந்நிலையில் தேர்தலுக்கு தேவையான பெருந்தொகை, அரச அதிகாரிகளை திரட்டுவது ஒரு பெரும் காரியம். இதை செய்ய போய் கை சுட்டுக்கொள்ள தேர்தல் ஆணையம் தயாரில்லை.
உண்மையில், மார்ச் 2ம் திகதியன்று பாராளுமன்றம் ஐந்து வருடம் நிறைவாகி முடிவுக்கு வரவில்லை. செப்டம்பர் மாதம் வரை இன்னமும் காலம் இருக்கிறது.
எனினும் தேர்தலை நடத்தி வெற்றி காண வேண்டும் என ஜனாதிபதி எடுத்த முடிவின் காரணமாகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது.
ஆனால், நாட்டில் பரவி வரும் கொரோனா என்ற உலகளாவிய கொடும் நோயை அவர் கவனத்தில் எடுத்து இருக்க வேண்டும்.
கடந்த வருடம் 2019 இறுதி தினம் டிசம்பர் 31 அன்றே சீனா, தம் நாட்டில் ஒரு கொடும் நோய் பரவுகிறது என உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டது.
இதன் அர்த்தம், இந்த நோய் கொடியது. அதை தம் உள்நாட்டில் முடிக்க முடியாது. மேலும் இது தம் நாட்டு கரையை கடந்து உலக நோயாக மாறி விடும் என சீனா நினைத்ததே ஆகும்.
சுமார் இரண்டரை மாதம் கழித்து, இனிமேல் பொறுக்க முடியாது என்று, மார்ச் 11 அன்று, (ஐநா சபையின்) உலக சுகாதார ஸ்தாபன (WHO) பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானொம் கேப்ரியெசுஸ், ஒரு முக்கிய அறிவிப்பை வெளிட்டார்.
அது என்ன?
“நாம் தொடர்சியாக இந்த நோயின் தொற்றும் அளவு, வீரிய அளவு ஆகிய ஆபத்துகளையும், இந்நோய் தொடர்பான எதிர் நடவடிக்கை இன்மை என்ற ஆபத்தையும் கண்காணித்ததால், கோவிட்-19 ஒரு “தொற்று நோய்” என அறிவிக்கிறோம்.”
(WHO has been assessing this outbreak around the clock and we are deeply concerned both by the alarming levels of spread and severity, and by the alarming levels of inaction, (and) We therefore made the assessment that COVID-19 can be characterized as a pandemic)
இதன் அர்த்தம், வரலாற்றில் உலகம் சந்தித்த உலகளாவிய தொற்றுநோய்களை போல், கோரோனா ஒரு “உலகளாவிய கொடும் தொற்று நோய்” என அதிகாரபூர்வமாக உலக மகா சபை அறிவித்தது.
இதற்கு முன்னரே, இலங்கையில்;
ஜனவரி 23ம் திகதி, பாராளுமன்றததில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பெரும்பான்மை எம்பிகளின் சார்பில், கொரோனா பற்றி உரை நிகழ்த்தி அரசுக்கு எச்சரிக்கை செய்தார்.
ஜனவரி 27ம் திகதி, இலங்கை வந்த சீன சுற்றுலா பயணி ஒருவர், இலங்கையில் முதல் கொரோனா நோயாளியாக கொரோனா தொற்றினால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெப்ரவரி 5ம் திகதி, பாராளுமன்றத்தில், மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பெரும்பான்மை எம்பிகளின் சார்பில், கொரோனா பற்றி உரை நிகழ்த்தி, சபையில் கேள்வி நேரத்தை பயன்படுத்தி கொரோனா பற்றிய ஏழு கேள்விகளை சுகாதார அமைச்சரிடம் கேட்டார்.
இந்நிலையில்தான், மார்ச் 2ம் திகதி, பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு, தேர்தல் திகதி குறிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் பின்னர்தான், மார்ச் 11ம் திகதி உலக சுகாதார ஸ்தாபன எச்சரிக்கை.
தேர்தல் நடவடிக்கைகளை இடை நிறுத்தி, விமான நிலையங்களை மூடி, அவசர நடவடிக்கைகளை எடுக்கும்படி இந்நாட்டு சிவில், அரசியல் சமூகம் அரசாங்கத்தை கோரியது.
இவை எதையும் அரசு கணக்கில் எடுக்கவில்லை.
இலங்கையில் விமான நிலையங்கள் மூடப்படவில்லை. சுற்றுலா பயணிகள் தடையின்றி வந்தனர். ஊரடங்கு அமுலுக்கு கொண்டு வரப்படவில்லை.
இலங்கையில் மிகபெரிய இரண்டு கல்லூரிகளின் இறுதிப்போட்டிகள், (ஆனந்தா-நாலாந்தா, ரோயல்-தோமியன்) பெரும்தொகையானோரின் பங்குபற்றலுடன் கொழும்பில் நடந்தன.
இந்நாட்டு அரசியல் தலைவர்கள் இந்நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு நாட்டுக்கு பிழையான முன்னுதாரணத்தை கொடுத்தார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மார்ச் 19 வரை நாட்டில் தேர்தல் வேட்பு மனு கடை திறந்து வைக்கப்பட்டது. தலைநகரிலும், நாட்டின் பல்வேறு நகரங்கள், கிராமங்களிலும், கட்சி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், இலட்சக்கணக்கில், வேறு வழியின்றி கூடுகிறார்கள்.
இன்னும் சொல்லாம். பிறகு சொல்வோம்.
இந்த பின்னணிகளில்தான் இன்று, கொரோனா சோதனைகளை குறைவாக நடத்தி, கொரோனா நோயாளர்களின் தொகையை குறைத்துக்காட்டி, பாடசாலைகளை திறந்து, பல்கலைக்கழகங்களை திறந்து, அலுவலகங்களை திறந்து, நாட்டை செயற்கையாக இயல்பு நிலைக்கு கொண்டு வந்து காட்ட அரசு திட்டமிட்டது.
இதெல்லாம் ஏன்???
மே மாத முடிவுக்குள் எப்படியும் தேர்தலை நடத்தி விடுவது என்பதே ஒரே காரணம். இன்று அரசின் இந்த திட்டம் பிழைத்து விட்டதாக அதிகாரபூர்வமற்ற உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார ஸ்தாபனம், எதிர்கட்சிகள், சிவில் சமூகம் ஆகியவற்றின் எச்சரிக்கைகளை உதாசீனம் செய்யாமல், உரிய வேளையில் நாட்டில் முழு அடைப்பை அமுல் செய்து, திட்டமிட்டு செயற்பட தவறியதால், இன்று ஒரு புறம் நோய் கொடுமை. மறுபுறம் எத்தனையோ பேர் வாழ்வாதார கொடுமைகளை சந்தித்துள்ளனர்.
இவை பற்றி பிறகு பேசுவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக