சோவியத் யூனியனின் பிளவுக்கு பின்பு தன்னை உலக சண்டியனாக கான்பித்துக் கொண்டிருந்த அமெரிக்காவானது கொரோனா வைரசினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதனால் பல தசாப்த காலமாக நிழல் யுத்தம் நடாத்திவந்த எதிரி நாடான ரஷ்யாவிடம் உதவி கோரியது.
இக்கோரிக்கையை ஏற்று ரஷ்யா தனது விசேட மருத்துவ குழுவினர்களை அமெரிக்காவுக்கு அனுப்பியது. இதனை உலகம் வியந்து பார்க்கிறது. இங்கேதான் ரஷ்யாவின் அரசியல் உள்ளது.
இரண்டாவது உலகமகா யுத்தத்தில் ஜேர்மனிய படைகளால் அழிவுகளை சந்தித்து ரஷ்யா படைகள் பின்வாங்கிக் கொண்டிருந்தபோது, ரஷ்யாவுக்கு அமெரிக்கா உதவி செய்தது.
அதுபோல் இன்று மூன்றாவது உலக யுத்தம் என்று வர்ணிக்கப்படுகின்ற கொரோனா தாக்கத்தில் பாதிக்கப்பட்டு முற்றாக நிலைகுலைந்துள்ள அமெரிக்காவுக்கு ரஷ்யா உதவி செய்வதை உலகம் ஏன் வியந்து பார்க்கிறது ?
இரண்டாவது உலகமகா யுத்தத்தின் ஆரம்பத்தில் ரஷ்யாவின் முக்கிய நகரங்களை ஜேர்மனிய படைகள் கைப்பேற்றியதுடன், இலட்சக்கணக்கான ரஷ்ய படைகள் உயிரிழந்தும், சரணடைந்தும், காணாமலும் போனார்கள்.
களமுனையில் ரஷ்யா தோல்விகளை சந்தித்துக் கொண்டிருகின்றது என்ற செய்திகள் அதிபர் ஸ்டாலினை நாளாந்தம் சென்றுகொண்டிருக்க, ஜெர்மனின் வெற்றிச் செய்திகள் அதிபர் ஹிட்லரை அடைந்துகொண்டிருந்தது.
இந்த நிலையிலேயே ஜேர்மன் வெற்றி பெற்றால் ஏற்படப்போகும் ஆபத்தினை உணர்ந்த அமெரிக்கா, அதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் இறுதி நேரத்தில் ரஷ்யாவை வெற்றிபெற செய்வதற்காக பெருமளவில் யுத்த விமானங்கள் மற்றும் கனரக ஆயுதங்களை ரஷ்யாவுக்கு அமெரிக்கா அவசர அவசரமாக வழங்கியதுடன் நிதியுதவியும் செய்தது.
இறுதியில் களமுனையில் மாற்றம் ஏற்பட்டு ஜேர்மன் தோல்வியடைந்து ரஷ்யா வெற்றிபெற்றது. அவ்வாறு உதவி செய்திருந்தும் இரு வேறுபட்ட கொள்கைகளினால் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் யார் உலகின் முதன்மை சண்டியன் என்ற நிழல் யுத்தம் நடந்துகொண்டே வந்தது.
அப்போது ரஷ்யா பலமுள்ள சோவியத் யூனியனாக இருந்ததனால் இன்று இருப்பதுபோன்று உலகின் தனிப்பெரும் சக்தியாக அமெரிக்காவால் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை.
இதனால் சோவியத் யூனியனை பல கூறுகளாக பிரிக்கும் முயற்சியில் அமெரிக்கா வெற்றிபெற்றது.
அதன் பின்பே கடந்த மூன்று தசாப்த காலமாக அமெரிக்கா தன்னை தனிப்பெரும் உலக சண்டியனாக நிலைநிறுத்தி வருகின்றது.
பலம்பொருந்திய சோவியத் யூனியன் என்ற நாடு பலகூறுகளாக பிரிந்து ரஷ்யாவாக தோற்றம் பெற்றாலும், அது எந்தவகையிலும் அமெரிக்காவுக்கு சவாலாகவே இருந்துவருவதுடன், இரு நாடுகளுக்குமிடையில் திரைமறைவிலான புலனாய்வு யுத்தம் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது.
அண்மைக்காலங்களில் ஏனைய நாடுகளில் செய்ததுபோன்று சிரியாவிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா கடும் முயற்சி செய்தபோது, சிரியாவுக்குள் ரஷ்ய படைகள் சென்றதனால் அமெரிக்காவால் தனது இலக்கை அடைய முடியவில்லை.
இன்று யாரும் எதிர்பாராத கொரோனா வைரஸ் உலகை ஆட்டம்காண செய்ததுடன், அமெரிக்காவின் அனைத்து இயந்திரங்களையும் நிலைகுலைய செய்துள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது உலக யுத்தத்தில் ரஷ்யாவுக்கு உதவி செய்து அமெரிக்கா தன்னை வல்லரசாக கான்பித்ததுபோல், இன்று மூன்றாவது உலக யுத்தத்தில் அமெரிக்காவுக்கு உதவி செய்து ரஷ்யா தன்னை முதன்மை வல்லரசாக நிலை நிறுத்த முயல்கிறது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
கருத்துகள்
கருத்துரையிடுக