(ஆர்.ராம்)

கலைக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டுமாறு கோருவது ஜனாதிபதியை தற்கொலைக்கு அழைப்பதற்கு சமனாகும். கடந்த கால ஜனாதிபதியிடத்தில் இத்தகைய மாயைகள் பலித்திருந்தாலும் தற்போதைய ஜனாதிபதியிடத்தில் இவ்வாறான சூழ்ச்சிகள் ஒருபோதும் பலிக்காது என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

அரசியலமைப்பு நெருக்கடியொன்று தோற்றம் பெறுவதற்கான அதிக சாத்தியப்பாடுகள் இருக்கின்ற நிலைமையில் பிரத்தியேக செவ்வியின்போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ள நிலையில் மீண்டும் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தினை கூட்டினால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் வறிதாகிவிடும். இதனால் எதிர்க்கட்சிகள் மீண்டும் பலமாவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதால் தனது அரசியல் நலனுக்காக பாரளுமன்றத்தினை கூட்டுவதற்கு ஜனாதிபதி தயங்கி வருகின்றார் என்று முன்வைக்கப்படும் விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நாட்டில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபமடைவதற்கு திட்டமிடுகின்றன.

அவர்களைப் பொறுத்தவரையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் தமது தோல்விகளை முன்கூட்டியே உணர்ந்துள்ளார்கள். ஆகவே தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை.
அடுத்து, தற்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை வைத்து பார்க்கின்றபோது அவர்களிடையே பிளவுகள் காணப்படுகின்றன. ஆகவே அந்தப் பிளவுகளை போக்கி மீண்டும் ஒன்றிணைவதற்கு சந்தர்ப்பத்தினை தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
அத்துடன், எட்டாவது பாராளுமன்றம் எதிர்க்கட்சிகளின் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதாக இருக்கின்றது. அது கலைக்கப்பட்டாகிவிட்டது. ஆகவே உயிரிழந்த பாராளுமன்றுக்கு மீண்டும் உயிர்கொடுப்பதற்கு விளைகின்றார்கள்.

அதேநேரம், மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படுகின்றபோது ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்படும் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு முட்டுக்கட்டைகளை இடுவதற்கு விளைகின்றார்கள். இந்த விடயங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டே கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தினை மீளவும் கூட்டுமாறு கோரிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதாவது, ஜனாதிபதிக்கும், ஆளும் தரப்புக்கும் எதிராக எதிர்க்கட்சிகளாகிய அவர்கள் செயற்படுவதற்கு பாராளுமன்றத்தினை கூட்டித்தாருங்கள் என்று கோருகின்றார்கள். பழைய பாராளுமன்றை கூட்டி தற்கொலை செய்யுங்களென்று அழைத்தால் ஜனாதிபதி இசைந்து வருவாரா? இப்படியான கோரிக்கைகளை கடந்த ஜனாதிபதி ஏற்றிருக்கலாம். ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவே மாட்டார்.

மேலும் தற்போதைய சூழலில் கொரோனா ஒழிப்புக்காக பாராளுமன்றத்தினைக் கூட்டி தீர்மானங்களை எடுக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை. ஆகவே பாராளுமன்றைக் கூட்டுவதால் எவ்விதமான பயனுமில்லை என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.