கொரோனா தாக்கத்தினால்;
✔️தனியார் துறை பாதிக்கப்பட்டு - அங்கு பாரிய தொழில் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அதனால், வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

✔️வெளிநாட்டவர்கள் வருகை தராமையால் - உல்லாசத்துறை வருமானம் பூச்சிய நிலைக்கு சென்றுள்ளது.

✔️இலங்கையின் தேயிலையை அதிகம் கொள்வனவு செய்யும் மத்திய கிழக்கு நாடுகள், ஜேர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம் போன்ற நாடுகளிலும் கொரோனாவின் தாக்கமுள்ளதால் - தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டு - அதனூடான வருமானம் இல்லாமலாகியுள்ளது.

✔️இலங்கையின் தைத்த ஆடைகளின் பிரதான சந்தையான ஐரோப்பா, அமெரிக்கா போன்றவற்றில் கொரோனாவின் தாக்கமுள்ளதால் - தைத்த ஆடைகளுக்கான கேள்வி வீழ்ச்சியடைந்து - அதனூடாக பெறும் வருமானம் இல்லாமலாகியுள்ளது.

✔️இலங்கையர் அதிகம் தொழில் செய்யும் - மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தாக்கம் காரணமாக பொருளாதார நெருக்கடி தோன்றி - ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் தொழில்களை இழந்து நாடு திரும்பும் நிலையும் - வெளிநாட்டு வருமானமும் இழக்கப்பட்டுள்ளது / இழக்கப்படும்.

✔️சில தொழிற்துறைகள் இலங்கையில் பூரணமாக முடங்கியுள்ளது (ஆடம்பர பொருட்கள், அழகு சாதன பொருட்கள்)

✔️உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது.

✔️அதே நேரம்,  வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய வழிவகைகளும் கடினமாகியுள்ளதனால் - கிட்டிய காலத்தில் உள்நாட்டு சந்தையில் மிகப்பெரும் பொருட்  தட்டுப்பாடு நிலவும்.

✔️உலகின் இரண்டாவது பொருளாதார பலமிக்க நாடான சீனாவிலேயை 6.8% பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருப்பின - இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் (இன்னும் இந்தக் காலாண்டிற்கான மத்திய வங்கி அறிக்கை வெளிவரவில்லை)

இவ்வாறான விடயங்களால் - இன்னும் குறுகிய காலத்தில் இலங்கையில் மிக மோசமான சிக்கல்கள் ஏற்படும். அந்த சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியது அரசாங்கமாகவே இருக்கும்.

👉🏿நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும்
👉🏿பொருட்களுக்கான பெரும் தட்டுப்பாடு ஏற்படும்
👉🏿வாழ்க்கைச் செலவு வானளவு உயர்ந்து நிற்கும்
👉🏿தொழில் இல்லோதோர் எங்கிலும் நிரம்பி வழிவர்
👉🏿அரச உதவியில் தங்கி இருப்போர் அதிகரிப்பர்
👉🏿அரசிடம் மக்களுக்கான அடிப்படைத்தேவைகளை நிவர்த்திக்க கூட நிதி இல்லாத நிலை ஏற்படும்.
👉🏿கடன் பெறவும் வழிகள் இல்லாமல் இருக்கும்
👉🏿வெளிநாட்டு உதவிகள் கிடைக்காது

அதனால், அரசாங்கம் கையறு நிலைக்கு செல்லும். மக்களின் எதிர்பார்ப்பை நிவர்த்திக்க முடியாத நிலை ஏற்படும். மக்கள் அதிருப்தியடைவர். வீதிக்கு இறங்குவர். போராட்டங்கள் நடத்துவர். ஆர்ப்பாட்டங்கள் செய்வர். அரசு - மக்கள் மோதல்கள் ஏற்படலாம். உயிரிழப்புக்களை சந்திக்கலாம். அதனால், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அரசுக்கு எதிராக மாறலாம். அல்லது, எதிர்பார்த்த அடைவை அடைய முடியாமல் போகலாம்.

எனவே, இவை எல்லாவற்றிலுமிருந்து இன்றைய அரசு தப்பிக்க வேண்டுமாயின் - இப்போதே பாராளுமன்ற தேர்தலை நடாத்தி - ஆட்சியைக் கைப்பற்றிவிட்டால் - பின்னர் மக்களை சிறிது காலம் "வாயை வயிற்றைக் காட்டிக்கொண்டு"-  நாட்டைக் கட்டி எழுப்ப உதவுங்கள் என்று கூறி சமாளித்துக் கொள்ளலாம் என அரசு நினைக்கிறது. அதனால், கொரோனா வைரஸ் தாக்கம் உக்கிரமாக இருக்கின்ற பயங்கர நிலையிலும் - ஒரு தேர்தலை அவசரமாக நடாத்த முயற்சிக்கிறது.

தேர்தல் காலத்தில் தாராளமாக எந்தத்தடையுமில்லாமல் கொரோனா தொற்று இடம்பெறுகின்ற அதே நேரம் - மரணங்கள் அதிகரித்துச சென்றாலும் - சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளாலேயே கொரோனாவினால் ஏற்பட்ட இறப்புக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் - இலங்கை போன்ற சிறிய வளர்ச்சி குன்றிய நாட்டில் -  மரணங்களை தடுத்து நிறுத்த முடியுமா? என - தமது அதிகார வேட்கையால் மரணிக்கப்போகும் ஆயிரக்கணக்கான உயிர்களை கணக்கெடுக்காமல் -  தம்மை நியாயப்படுத்த அரசு தயாராகிவிட்டது.

அதாவது, இலங்கை மக்களின் உயிர்களை விட - எமக்கு அதிகாரமே முக்கியம் என்ற தெளிவான நிலைப்பாட்டிற்கு அரசு வந்து - பிணங்களின் மீது தமது சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்ப - தேர்தலை உடன் நடாத்த முயற்சிக்கின்றது. நாம் இதனை தவறு என்று கூறினால் - நம்மில் சிலர் எம்மை விமர்சிக்க முயற்சிப்பதென்பது வியப்பாக இருக்கிறது. ஏன்எனில், கொரோனா காரணமாக நிகழும் மரணங்கள் - இவ்வாறு விமர்சிப்பவர்களின் வீடுகளுக்குள்ளும்தான் நிகழும் என்பதை - அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்

 - ஏ.எல்.தவம் -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.