அவருடைய அல்ஹம்துலில்லாஹ் என் கண்களை ஈரமாக்கியது...



ஆறு ஏழு மாதத்திற்கு முன்பு எனது வீடு தேடிவந்த சகோதரர் “அஸ்ஸலாமு அலைக்கும் சேர் இன்று பகல் சாப்பாட்டிற்கு கூட வீட்டில் ஒன்றும் இல்லை எனக்கு ஒரு தையல் இயந்திரம் பெற்றுக் கொடுங்க நான் எதையாவது தைத்து என்ட காலத்த ஓட்டுவன்”.

நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்ட அதே சகோதரர் அல்லாஹ் உங்களுக்கு றஹ்மத்து செய்யனும் என்று தொடங்கியவர் நீண்ட உரையாடலை 20 நிமிடம் அளவில் பேசி முடித்தார்.

மாகாண சபை காலத்தின் போது பலநூறுபேருக்கு வாழ்வாதார உதவிகளை அல்லாஹ்வின் உதவியோடு செய்திருக்கிறேன்.

என்னிடம் வருபவர்கள் எந்தக்கட்சியை சேர்ந்தவர்? என்னுடைய ஆதரவாளரா? எதிர்காலத்தில் எனக்கு அரசியலில் ஆதரவளிப்பார? என்று ஒரு கணம்கூட நினைப்பது கிடையாது.

உதவிதேடி வருபவர்களில் பலர் என்னுடைய ஆதரவாளர்கள் இல்லை என்று உதவிகளைப் பெற்றுச் செல்பவர்களை குறித்துக்காட்டி உதவிகளை கையளிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் ஏனையவர்கள் என்னிடம் சொல்லும் போது நான் அவர்களைப் பார்த்து சொல்வது “நாம் உதவிசெய்வது நமது ஆதரவாளர்களுக்கல்ல தேவையுடையவர்களுக்கு இது நமது ஆதரவாளர் என்றாலும் சரி, இல்லை என்றாலும் சரி இந்த விடயம் நமது அமானிதத்தை நிறைவேற்றுகின்ற விடயம்” என்பேன்.

மாகாண சபை காலம் முடிவுற்றதற்குப் பிறகு ஒரு சகோதரர் என்னிடம் வந்தார் தான் ஒரு தையல் வேலை செய்பவர் எனக்கு தைப்பதர்க்கு ஓர் தையல் இயந்திரம் ஒன்றை பெற்றுத்தாருங்கள் என்றார் ஆனால் அரசாங்கத்தின் உதவியுடன் அவருக்கு உதவிசெய்ய முடியவில்லை. அதே நேரம் என்னிடமும் பொருளாதார சிக்கல் காரணமாக உதவிசெய்ய முடியாதிருந்தது.

அப்போது அந்த சகோதரர் என்னிடம் சொன்னார் எனக்கு புது இயந்திரம் வேண்டாம் ஓர் பாவித்த JUKI இயந்திரம் ஒன்றை பெற்றுத்தாருங்கள் அது 22,000.00 ரூபாய் அளவில் வரும் என்றார் இருந்தும் அந்த சூழலில் 1,000.00 கூட மிகப்பெரும் பணமாகவே இருந்தது.

அப்படி இருந்தும் தையல் இயந்திரம் விற்பனைசெய்யும் குறித்த கடைக்காறரை தொடர்பு கொண்டு அந்த தையல் இயந்திரத்திற்குரிய தொகையை நான் தருகிறேன் அந்த இயந்திரத்தை வருகின்ற இன்னாரிற்கு கொடுங்கள் என்று சொன்னேன். அது அப்படியே நடந்தது.

தன்னுடைய ஒரு நேர சாப்பாட்டைக்கூட தன்னால் பெற்றுக்கொள்ள முடியாத சூழலில் அல்லாஹ்வின் உதவியுடன் என்னிடம் உதவிதேடி வந்த அவர் என்னிடம் நேற்று தொலைபேசியில் இப்படிச் சொன்னார். “ சேர் நீங்கள் தந்த மெசினினூடாக இந்த கொரோனா காலத்தில் முகமூடி (Mask) தைத்தேன் முதற்கட்டமாக 200,000.00 அளவில் சம்பாதிக்க கிடைத்தது இதனைவைத்து இரண்டு மூன்று தையல் இயந்திரங்களை வாங்கி வீடுகளில் இருந்து தைக்கக்கூடிய பெண்களுக்கு கொடுத்து Mask தைத்தேன் இப்படியாக இன்றுவரை 1,600,000 பதினாறு இலட்சம் Mask தைத்து நாட்டில் பல பிரதேசங்களுக்கு அதனை விற்பனை செய்துள்ளேன்.

இன்றுவரை 42 தையல் எந்திரங்களை கொள்வனவு செய்துள்ளேன், அதனை 42 பெண்கள் வீடுகளில் இருந்து என்னிடம் வேலைசெய்கின்றார்கள், எனக்கும் எனக்குக்கீழ் வேலைசெய்யும் ஒருவருக்கும் 2 மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளேன், என்னுடைய வீடு கட்டும் வேலையை தொடங்கியுள்ளேன், நோன்பு முதல் அன்று 40 பேரிற்கு உணவுப் பொருட்களை பெற்றுக்கொடுத்தேன் இன்று 100 குடும்பங்களுக்கு  இப்தார் ஏற்பாட்டை செய்து கொடுக்கவுள்ளேன் அல்ஹம்துலில்லாஹ் எனக்கு பாடசாலை மாணவர்களுக்கான Mask தைக்கும் ஓடர் ஒன்று NGO ஒன்றினூடாக கிடைத்துள்ளது என்றார்.

நான் அல்லாஹவிற்கு சுகுர் செய்தேன் என்னை அறியாமலேயே அந்த சந்தோசம் எனது கண்களை ஈரப்படுத்தியது.

ஷிப்லி பாரூக்
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

கருத்துகள்