COVID-19 இன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மக்கள் குழம்பியும், மன உளைச்சலிலும் அவஸ்தைப்பட்டு நிற்பதோடு, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு எப்போது திரும்புவோம் என்று ஏங்கிக் கிடக்கின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் இறப்பு வீதம் நூறு மடங்காக அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை விதைத்திருக்கிறது என்றாலும் ஒரு சாரார் இன்னும் அதன் தாத்பரியத்தை உணராமல் பாதுகாப்பு ஆலோசனைகளை அசட்டை செய்யும் நிலையும் காணப்படுகிறது.
இந்த நிலையில் இதுவரை உலகில் எத்தனை பேர் நோயுற்றார்கள், எத்தனை பேர் குணமடைந்தார்கள், எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என்பது (28.03.2020 வரை) படம் 01 இல் காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ஏப்ரல் முதலாம் திகதிய புள்ளிவிபரங்களின் படி, இதுவரை உலகில் எத்தனை பேர் நோயுற்றார்கள், எத்தனை பேர் குணமடைந்தார்கள், எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என்பதை ஒப்பிடும்போது, நோயுற்றவர்களில் 4.96% ஆனவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதேபோல 21.14% ஆனவர்கள் குணமடைந்துள்ளனர். மிகுதி 73.9% ஆனவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இலங்கையை பொறுத்தவரை இந்தக்கட்டுரை எழுதப்படும்போது மூன்றாவது மரணம் சம்பவித்துள்ளமையையும் சேர்த்து உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையான 146 பேரில் 14.38% வீதமானோர் குணமடைந்துள்ள நிலையில் 2.05% வீதமானோர் மரணமடைந்துள்ளனர். இது சிலவேளைகளில் குறைந்த எண்ணிக்கைகளாகத் தெரிந்தாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயிர் என்பதை மனதிற்கொள்ள மறக்க வேண்டாம். அத்தோடு, கடந்த எட்டு நாட்களில் உலகளாவிய ரீதியில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் 100 மடங்கு அதிகரிப்பு நிகழ்ந்திருப்பதை அத்தனை எளிதில் உதாசீனம் செய்து விட முடியாது. கடந்த எட்டு நாட்களில் COVID-19 தொற்றினால் இறந்தவர்களின் விபரம்,வரைபடம் 02 இல் காட்டப்படுகிறது.
மேற்படி விபரங்களை அவதானிக்கும்போது எதிர்வரும் நாட்கள் குறித்த ஒரு அச்ச நிலை தோன்றுவது தவிர்க்கமுடியாதது. அத்தகைய நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட பல அமைப்புகளும் மிகுந்த பிரயத்தனங்கள் எடுத்து வரும் நிலையில் இலங்கை அரச மருத்துவ உத்தியோகத்தினர் சங்கம் (The Government Medical Officers’ Association) The Hammer and the Dance கோட்பாட்டை முன்மொழிந்துள்ளது.

The Hammer and the Dance கோட்பாடு
இந்தக்கோட்பாடு குறித்து விரிவான ஆய்வுகளை Tomas Pueyo என்பவர் மேற்கொண்டிருக்கிறார். இதுபற்றி ஆழமாக எழுதவேண்டியதில்லை. இந்தக்கோட்பாட்டை ஒரு வரைபடத்தில் இலகுவாக விளக்கிவிட முடியும். (வரைபடம் 03).

The Hammer and the Dance கோட்பாட்டை அவதானிக்கும்போது அது மூன்று காலகட்டமாக பிரிக்கப்படுகிறது. இன்று எனும் கட்டம், 3 – 7 வாரங்கள் எனும் கட்டம் மற்றும் தொடர்ச்சியான கட்டம் என்பனவே அவை. இந்தக்கட்டங்களை உற்றுநோக்கினால் இலங்கை இதில் 3 – 7 வாரங்களின் கட்டத்தை கடந்து தொடர்ச்சியான கட்டத்தை அடைந்திருப்பது போல தென்படுகிறது. ஆனால், இரண்டாவது கட்டத்தின் பல நியமங்கள் சரியாகப் பின்பற்றப்படாத நிலையை அவதானிக்கிறோம். The Hammer and the Dance கோட்பாடு குறித்த GMOA வின் பரிந்துரைகளை ஏப்ரல் முதலாம் திகதிய DailyMirror இணைய இதழில் (இணைப்பு : http://www.dailymirror.lk/…/GMOA-proposes-Hammer…/155-186014) வாசிக்க முடியும். அவர்கள் பத்து வகையான படிமறைகளை மிக இறுக்கமாக கடைப்பிடிக்கும்படி வலியுறுத்துகிறார்கள். அவை, குறித்த பத்திரிகை செய்தியில் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அவை வரைபடம் நான்கில்..

இவற்றில் பல விடயங்களை நாம் ஏற்கனவே பின்பற்றி வருகிற போதிலும், இவை முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டே. அந்தபவகையில் நாம் Hammer இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மிக விரைவாகக் கடைப்பிடித்து Dance பகுதியை அடைவது மிக முக்கியமானதாகும்.

The Hammer and the Dance கோட்பாட்டை மிகக்கடுமையாக கடைபிடித்த வூஹான் நகரமும், தென்கொரியாவும் எத்தகைய மாற்றங்களை சந்தித்தன என்பதை வரைபடம் 05 இல் காணலாம்.

எப்போது முடியும் இந்தக் கொடூர COVID-19?
உண்மையில் COVID-19 தொடர்பில் நம் அனைவரினதும் ஒரே ஒரு கேள்வி எப்போது முடியும் இந்தக் கொடூர COVID-19 என்பதே. அது எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஆனபோதிலும் சில ஆராய்ச்சியாளர்கள் தங்களது கணிப்புகளை பலவாறும் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
கோவிட் 19 தொடர்பில் ஆக்கபூர்வமான ஆய்வுகளை வெளியிட்டு இதுவரை 40 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஒரே வாரத்தில் வாசித்த கட்டுரைக்கு சொந்தக்காரரும், கோவிட் 19 தொடர்பில் தொடர்ச்சியாக மக்களை விழிப்பூட்டி வருபவருமான Tomas Pueyo, 2021 ஜனவரி மாதத்துடன் கோவிட் 19 ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று குறிப்பிடுகிறார். அதற்கு Hammer காலமானது மாதங்களாக அன்றி சில வாரங்களுக்குள் அமைய வேண்டும் என்பது அவரது ஆதங்கம். (வரைபடம் 06)

அதேபோல The Emergency Operation Centre மூன்று வகை எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளது. அவை,
01. மெதுவான பரிமாற்றம் (transmission is slowed)
COVID-19ஐ வெற்றி கொள்ளும் செயற்பாடுகள் மெதுவாக இடம்பெற்றால் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது ஃபெப்ரவரியில் உக்கிரமாக இருக்கும் என்றும் 2020 முடிவில் 7.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட நேரும் என்றும் 2021 இறுதியில் 9.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயினும், மருத்துவ நடவடிக்கைகள் வேகமாக இடம்பெற்று வருவதால் மெதுவான பரிமாற்றம் இடம்பெற வாய்ப்புகள் குறைவு என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
02. வினைத்திறனான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் (Control measures are effective)
அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதமளவில் பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எதிர்பார்க்கப்படுவதோடு செப்டம்டர் அல்லது ஒக்டோபரில் பெருமளவு பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கின்றனர்.
03. மிக மோசமான நிலை (the worst case)
இது குறித்து எதிர்மறையான எதிர்வுகூறல்கள் காணப்படுவதால் அவற்றை எழுதி பொதுமக்களை அச்சமூட்டுவது இன்றைய சூழலில் பொருத்தமற்றது என்பதோடு எல்லாம் வல்ல இறைவன் மிக மோசமான நிலையை விட்டும் நம்மை பாதுகாக்க பிரார்த்திப்போம்.
முடிவில், கோவிட் 19 எனும் வைரசினால் ஏனைய நாடுகள் பாதிக்கப்படுவதைப்போல இலங்கை இன்னும் தீவிரமாக பாதிக்கப்படவில்லை ஆயினும் இலங்கையில் அது வேகமாக பரவக்கூடிய சாத்தியங்கள் இல்லாமல் இல்லை. பொதுமக்கள் இந்த விடயத்தில் பொடுபோக்காக இல்லாமல் இதன் பாதகங்களை நன்கு உணர்ந்து நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பதை தலையாய கடமையாகக் கருதி Social Distancing எனப்படும் விலகி இருத்தலை உரிய முறையில் கடைப்பிடித்து, அரசின் சட்ட திட்டங்களைப் பேணி நடந்து, நமது பெறுமதியான வாழ்வை பாதுகாப்போம்.

கட்டுரையாசிரியர்
எஃப்.எச்.ஏ. ஷிப்லி
சிரேஷ்ட விரிவுரையாளர்
இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்க்ழகம்
ஒலுவில்
shiblyfh@seu.ac.lk
01.04.2020
நேரம் : 02 AM

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.