2020 மார்ச் மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், குறித்த காலத்துக்கு முன்னதாகவே அரசியலமப்புச் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட மறுநாள் தொடக்கம் நாடளாவிய ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. உலகளாவிய கோவிட்19 வைரசின் தாக்கத்திலிருந்து தத்தமது பிரஜைகளை பாதுகாத்துக் கொள்வதோடு பேரழிவொன்றிலிருந்து முழு உலகத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் போராட்டத்தில் அனைத்து உலக நாடுகளும் ஈடுபட்டுள்ளன.


நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வீடுகளில் அனத்து மக்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கப்பட வேண்டியதொரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படுமாயின் தம்மால் குறிப்பிட்ட தினத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலொன்றை நடாத்த முடியாதுபோகலாம் என்பதனை முன்கூட்டியே அறிந்துகொண்ட தேர்தல் ஆனைக்குழு மார்ச் 21 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல் சட்ட விதிகளுக்கமைய ஏப்ரல் 30ஆம் திகதி தொடக்கம் 14 நாட்களுக்கு பிற்பட்ட தினமொன்றுக்கு, திகதி பின்னர் அறிவிக்கப்படும் வகையில், வாக்கெடுப்பை பின்போட்டது. கோவிட்19 பரவலிருந்து முற்றாக நாடு விடுபட இன்னும் எவ்வளவு காலம் செல்லுமென அரசாங்கம் உறுதிபடக் கூறாதவிடத்து எந்த விதத்திலும் தேர்தலொன்றை நடாத்த முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.
தேர்தல் ஆணக்குழுவின் அதிகாரத்தையும் மீறி இன்னும் சில காலத்துக்கு தேர்தலை பிற்போட வேண்டுமாயின் ஜனாதிபதி அரசியலமப்புச் சட்டத்தின் பிரகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி கலைக்கப்பட்டுள்ள பாரளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதைத் தவிர வேறு எந்த வழிகளும் கிடையாது. ஜனாதிபதி நாட்டின் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அவசரகாலச் சட்டத்தை பிரகடனப் படுத்தி அதற்காக பாரளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவ்வாறு கலைந்த பாரளுமன்றத்தைக் மீண்டும் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் அரசியலமப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதே அதிகாரத்தை பயன்படுத்தித்தான் 2000ஆம் ஆண்டு இறுதியில் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவால் மீண்டும் கூட்டப்பட்டதை அனேகமானோர் அறிந்திருக்கலாம். இந்த அடிப்படையில் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க்கட்சியினர் வேண்டியதற்கு ஜனாதிபதி தனது மறுப்பை தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி உறுப்பினர்களும் அதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். அவ்வாறு கூட்டப்படுகின்ற பாராளுமன்றத்துக்கு அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விடயத்தில் மாத்திரமே தீர்மானங்களை மேற்கொள்ளலாம் என அரச தரப்பினர் கூறினாலும் எதிர்த் தரப்பை சேர்ந்த சில உறுப்பினர்கள் அதனை மறுத்துவருகின்றனர்.
கலைந்த பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு எதிராக அரசாங்கம் என்ன காரணங்களைக் கூறினாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதனால் நாட்டின் தற்போதைய அசாதாரண நிலமையை தமக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் வைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்ற வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பதாகவே கருதத் தோன்றுகிறது.
இந்த நிலைமையில் தேர்தல் சட்டவிதிகளுக்கு அமைய ஜூன் மாதத்துக்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கு ஏதுவாக தேர்தலை நடாதவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ள தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் இது விடயத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனயை பெற்றுத் தருமாறு கோரி ஏப்ரல் முதலாம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறுகின்ற அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தின் 129 வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரம் இருப்பதுவே தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் இவ்வாறு கடிதம் எழுத காரணமாகும். அதற்கு கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி பதில் கடிதம் அனுப்பியுள்ள ஜனாதிபதியின் செயலாளர் இது விடயத்தில் ஜனாதிபதி தலையிட முடியாது என்றும் தேர்தல் ஆணைக்குழு தேர்தலை பிற்போட்டு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, உரிய திகதிக்குள் வாக்கெடுப்பை நடாத்துவதற்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கே இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு செலவினத்தைச் செய்வதாக இருந்தாலும் அதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு இருக்கிறது. எனவே பாராளுமன்றத்தைக் கூட்டி வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பித்து அங்கீகாரதைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றபோதும் ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை‘ என்பதுபோல தேர்தலை நடாத்தி பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதன் மூலம் மாத்திரம் தமக்கு ஏற்றாற்போல அதனை சாதித்துக்கொள்ளவே தற்போதைய அரசாங்கம் விரும்புகிறது. இந்நிலையில் ஏப்ரல் 19ஆம் திகதிக்குள் கோவிட்19 தொற்றினை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். அவரது அவ் அறிவித்தலானது ஒருவகையில் நாட்டு மக்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தரக்கூடிய செய்தியாகும். அது சாத்தியப்பட வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையுமாகும்.
எவ்வாறிருப்பினும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சரின் கருத்துக்கு மாற்றமான கருத்தை தெரிவித்துள்ளது. மே மாதம் வைரஸ் பரவல் மேலும் உக்கிரமடையலாம் என்பதே அவர்களது அபிப்பிராயமாகும். இந்த முரண்பாடான அறிவித்தல்கள் தேர்தல் விடயத்தில் கோவிட்19 தொற்றுவதில் உள்ள அபாயத்தையும் மறைத்து ஆட்சியாளர்கள் தமது காரியத்தை சாதித்துக்கொள்ள எத்தனிக்கிறார்களா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பராளுமன்றத்தை மீண்டும் கூட்டுகின்ற விடயத்தில் ஜனாதிபதி தனது முடிவை மாற்றிக்கொள்ளாது தொடர்ந்தும் விடாப்பிடியாக இருப்பாரேயானால் இவ் இக்கட்டான சூழ்நிலையிலும் தேர்தலை நடத்தியேயாக வேண்டியதும் சாத்தியப்பாடற்றதுமான திரிசங்கு நிலைக்கு தேர்தல் ஆணைக்குழு தள்ளப்ப்டலாம்.
பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவோர் மூலம் நோய் காவப்படுவதை எவ்வாறு தடுக்கலாம்?
அஞ்சல் திணைக்களம், மாவட்ட செயலகங்கள், தேர்தல் காரியாலயங்கள் போன்ற அத்தியாவசிய அரச நிறுவனங்களில் பணிபுரிகின்ற மற்றும் தேர்தல் பணிக்காக பல்வேறு நிறுவனங்களிலிருந்து விடுவிக்கப்படுகின்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு அமையப்போகின்றன?
சமூக இடைவெளியையும் கடைப்பிடித்து மிக நீண்ட வரிசைகளில் காத்து நின்று வாக்களிக்க பொதுமக்கள் தயாராயிருப்பார்களா?
விரலிலே மை பூசுபவர்கள், வாக்கு சீட்டை கிழித்துக் கொடுப்பவர்கள், வாக்கு பதியும் பென்சில்கள் மற்றும் வாக்குப் பெட்டிகள் மூலம் வைரஸ் தொற்று ஏற்படாது என்கிற உத்தரவாதம் வழங்கப்படுமா?
எந்தவிதமான உத்தரவாதம் வழங்கப்பட்டாலும் அவற்றையெல்லாம் நம்பி மக்கள் வாக்களிக்க செல்கின்ற மன நிலையில் இருப்பார்களா?
வாக்கெண்ணும் நிலையங்களில் அதிகாரிகள், வாக்கு எண்ணும் முகவர்கள் என வழமையாகவே நிறைந்து அடைபட்டு காணப்படுகின்ற அறைகளுக்குள்ளே எவ்வாறு சமூக இடைவெளி பேணப்படப்போகிறது?
என்பன போன்றதும் இன்னும் இங்கு சொல்லப்படாததுமான இன்னோரன்ன காரணங்களோடு நோக்குமிடத்து தேர்தலொன்றை நடாத்துவதென்பது நடைமுறை சாத்தியமற்றதாகவே தோன்றுகின்றது.
அப்படியானதொரு நிலைமை ஏற்பட்டால் அரசியலமப்பை மீறி நடக்கவேண்டியதொரு இக்கட்டான நிலைமைக்கு தேர்தல் ஆணைக்குழு தள்ளப்படலாம். இது நாட்டில் அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட புதியதொரு சர்ச்சையையும் உருவாக்கலாம்.
(மஸீஹுத்தீன் நயீமுல்லாஹ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.