முதலில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மருந்து வழங்க வேண்டும் - விமல்


கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளர்களைக் கொண்டு அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கு கிடையாது. நாட்டில் பாரதூரமானதொரு நிலைமை ஏற்பட்டுள்ள இது போன்ற சந்தர்ப்பத்தில் மக்களுக்கான சேவையில் ஈடுபடுவது எமது கடமையாகும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கும் பிரிவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தேர்தல்கள் ஆணைக்குழு தான் இதற்குள் அரசியல் செய்கிறது. ஆணைக்குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இலங்கை ஏகாதிபத்தியத்தை நோக்கிச் செல்வதாகக் கூறுகின்றார். அத்தோடு ஆணைக்குழுவின் தலைவர் தூக்கத்திலிருந்து திடீரென எழுந்ததைப் போன்று அரசியல் செய்யக் கூடாதெனக் கூறுகின்றார்.

இங்கு நாம் அரசியல் செய்யவில்லை. கொரோனா நோயாளர்களைக் கொண்டு அரசியல் செய்ய தேவை எமக்கு கிடையாது. இன்று அரசாங்கத்தை சார்ந்த கட்சிகளாகட்டும் எதிர் தரப்பிலிருக்கும் கட்சிகளாகட்டும் யாராக இருந்தாலும் கட்சி பேதமின்றி சமூகத்துக்கு தலைமைத்துவம் வழங்க வேண்டும்.

அரச அதிகாரிகளால் மாத்திரம் தனியாக இந்த பாரத்தை சுமக்க முடியாது. இதனை அரசியல் செய்வதாக தேர்தலை ஆணைக்குழு பார்க்குமானால் முதலில் தேர்தல் ஆணைக்குழுவுக்கே மருந்து வழங்க வேண்டும். இங்கு நாம் அரசியல் செய்யவில்லை. சமூக பொறுப்பை  நிறைவேற்றுகின்றோம்.

கட்சி பேதம் எம்மிடமில்லை. எனவே தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் செய்யவதை நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணைக்குழுவின் மறைமுக அரசியல் எமக்கு நன்றாகத் தெரியும். ஆணைக்குழுவின் தலைவர் ஆட்சி மாற்றித்திற்கு முன்னர் செயற்பட்ட விதமும் தற்போது செயற்படுகின்ற விதமும் எமக்கு தெரியும்.

எனவே ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்கள் செய்யும் அரசியலை நிறுத்துமாறு கோருகின்றோம். இவ்வாறு பாரதூரமானதொரு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு முன்வருவதற்கு எமக்கு சந்தர்ப்பம் இல்லை என்றால் அது சாதாரண நிலைமை அல்ல. அவ்வாறு செயற்படுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றார்.

(மெட்ரோ நியூஸ்)

கருத்துகள்