எல்லா இடங்களிலும் வரட்சி, உணவு பற்றாக்குறை, நோய் பீதி என பலவிதமான சோதனைகள் காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கிப் போயுள்ளது. இதனால் மனிதர்கள் மட்டுமல்ல எல்லா உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கு யாருமில்லை. இவ்வாறான நிலைமைகளில் முடியுமான அளவில் மற்றவர்களுக்கு கரம் கொடுத்து வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. மனிதர்களுக்கு போலவே  மற்றைய ஜீவராசிகளுக்கும் உபகாரம் செய்ய வேண்டும் என்பதை இஸ்லாம் போதிக்கின்றது. பசி பட்டினி எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாகும். எனவே வாய் பேச முடியாத பல வகையான உயிரினங்கள் எம்மோடு எமது சுற்றுச் சூழலில் வாழ்கின்றன. அவைகளுடைய பசி தீர்ப்பதும் தாகம் தீர்ப்பதும் புனித இஸ்லாம் போதிக்கும் உன்னதமான ஒரு வணக்கமாகும்.

இஸ்லாத்தின் ஐந்தாவது கலீபாவாக கருதப்படும் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களுடைய காலத்தில் இப்படியான ஒரு பஞ்ச நிலை ஏற்படுகிறது, அச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுடைய பைத்துல்மால் நிதியிலிருந்து தானியம் வாங்கி மலைகளில் வைக்குமாறு கூறிவிட்டு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் :
 "முஸ்லிம்களின் பிரதேசங்களில் எந்த பறவையும் பசித்திருந்தது என்று சொல்லாத அளவிற்கு தானியங்களை மலைகளில் பரத்திவிடுங்கள்"

வாய் பேச முடியாத உயிரினங்களுக்கு உபகாரம் செய்வது பெரும் பாவங்களுக்கான பாவமன்னிப்பாகவும் அமைந்துவிடும். தாகத்தால் சாகக் கிடந்த ஒரு நாய்க்கு; நடத்தை கெட்ட ஒரு பெண்மணி தண்ணீர் கொடுத்து தாகம் தீர்க்க உதவுகின்றாள். இந்த செயலின் மூலமாக அப்பெண்ணின் பாவங்கள் மன்னிக்கப் பட்டதாக அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.(ஸஹீஹுல் புகாரீ)

இதற்கு மாறாக இந்த வாய் பேசமுடியாத உயிரினங்களுக்கு அநியாயம் செய்வது பெரும்பாவங்களில் ஒன்றாகும். அவ்வாறான இழி செயல்களினால் நரகம் சென்றவர்களின் சம்பவங்களும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன.

எனவே அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் உபகாரம் செய்து மிக முக்கியமான ஒரு வணக்கம் என்பதை விளங்கி அவைகளின் பசி, தாகம் தீர்ப்பதில் கவனம் செலுத்துவோமாக!

மௌலவி M.N.M. நஸ்ரின் அல்-பத்தாஹீ, 
அக்குறணை, 
2020/04/09.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.