வடகொரிய அதிபரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக வெளிவரும் செய்திகள் உண்மையானவையா?இனிமேல் தங்கைதான் வாரிசு என்கிறார்கள் அவதானிகள்!



வடகொரிய ஜனாதிபதி கிம் ஜங் உன்னிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்களை அடுத்து, அவரது இடத்தில் அவரது தங்கை கிம் யோ ஜங் அமர்வார் என்று தகவல்கள் வந்துள்ளன.
வடகொரிய ஜனாதிபதி ஜிம் ஜங் உன்னின் உடல்நிலை மோசமாக இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. அவர் வழக்கமாக அவரது பாட்டனின் பிறந்தநாள் விழாவிற்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை அவர் அந்த விழாவில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில்தான், அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அமெரிக்கத் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவல்களை வடகொரிய அரசு உறுதிப்படுத்தவில்லை.
வடகொரிய ஜனாதிபதி உடல்நிலை குறித்த தகவல்கள் காட்டுத் தீ போல் வேகமாக பரவி வருகின்றன. இதையடுத்து அவரது இளைய சகோதரி கிம் யோ ஜங் (31) அந்த நாட்டில் மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறார். இவருக்கு அண்ணனிடம் இருக்கும் பண்புகள் அப்படியே இருப்பதாக அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சகோதரர் கிம் ஜங் உன் எடுத்த கடுமையான முடிவுகளில் கிம் யோவின் பங்களிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
சகோதரி கிம் யோ வடகொரியாவின் முக்கியமான தலைவராகக் கருதப்படுகிறார். கிம் யோ ஜங் முக்கியமான நபராக உருவெடுத்து வருவது அந்நாட்டினரை ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனெனில் கடந்த மாதம் இராணுவப் பயிற்சியின் போது பயம் கொண்ட நாய் குரைக்கத்தான் செய்யும் என தென்கொரியாவை கிம் யோ ஜங் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து ஆய்வாளர் யங்ஷிக் பாங் கூறுகையில், தென் கொரியாவுக்கு எதிராக அத்தகைய கடுமையான கருத்தை முன்வைக்க தங்கைக்கு அனுமதி கொடுத்ததே அண்ணன் கிம் ஜங் உன்தான் எனக் குறிப்பிட்டார்.
அவருக்கு மாற்றாக தங்கை கிம் யோ ஜங் வளர்ச்சியை அவர் அனுமதித்துள்ளார். 31 வயதாகும் கிம் யோ மிகவும் புத்திசாலி. அனைத்தையும் வேகமாக கற்றுக் கொள்வார். அநேகமாக அவரது அண்ணனின் உடல்நிலை குறித்த கேள்விகள் தொடர்பாக அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் எதிர்பார்க்கிறார்கள் .
வடகொரிய நாட்டின் மூத்த பேராசிரியர் லியோனிட் பெட்ரோவ் இது பற்றிக் கூறுகையில் “கிம் ஜங் உன்னை நேரடியாக அணுகுவதற்கு தங்கைக்கு செல்வாக்கு உள்ளது. இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுடன் கிம் யோவுக்கு நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் அவருக்கு அனைத்தும் தெரியும். இவர் ஒரு நம்பகமான அரசியல்வாதியாவார். தென் கொரியர்கள் மற்றும் வெளிநாட்டினர் மத்தியில் அண்ணனின் நேர்மறையான விம்பத்தை பாதுகாக்க உதவியவர் இவர்தான்” என்றார்.
கிம் ஜங் உன்னைவிட 4 ஆண்டுகள் இளையவரான இவர் தனது சகோதரருடன் சேர்ந்து சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்றனர். உன்னுக்கு மிகவும் நெருங்கியவர். இவர் வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் பிரசாரத் துறையின் இணை இயக்குநராக உள்ளார். இவர் பிரசாரத் துறையில் மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளார். எனவே வடகொரியாவில் பதவியில் இவர் அமருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் உள்ளார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உளவுத்துறை இந்த தகவல்களை கண்காணித்து வருவதாக, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கிம் ஜாங் உன் பாட்டனின் பிறந்தநாள் ஏப்ரல் 15 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. வழக்கமாக இதில் கிம் பங்கேற்பார். ஆனால் இந்த ஆண்டு பிறந்த நாள் விழாவில் கிம் பங்கேற்கவில்லை. இது கிம் உடல் நிலை பற்றிய ஊகங்களை எழுப்பியது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் அரசு நடத்திய கூட்டத்தில் தோன்றினார். அப்போதுதான், மக்கள், கடைசியாக அவரை பொது நிகழ்வில் பார்த்தனர்.
மற்றொரு அமெரிக்க அதிகாரி சி.என்.என் ஊடகத்திடம் இதுகுறித்து பேசிய போது, “கிம்மின் உடல் நலம் குறித்த செய்திகள் நம்பகமானவை, ஆனால் அதன் தீவிரத்தை மதிப்பிடுவதுதான் இப்போதைக்கு கடினம்” என்று கூறினார்.அமெரிக்க செய்தித்தாள் ஒன்று கிம் ஜாங் உன், ஏப்ரல் 12 ஆம் திகதி இருதய அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாகியதாகக் கூறியுள்ளது.
"அதிகப்படியான புகைப்பிடித்தல், உடல் பருமன் மற்றும் அதிக வேலைப் பழு காரணமாக கிம் இருதய சிகிச்சைக்கு உள்ளானார். மேலும் இப்போது அவர் ஹியாங்சன் கவுண்டியில் உள்ள ஒரு இடத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று அமெரிக்க செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது.
கிம்மின் நிலைமை மேம்பட்டுள்ளதாக உறுதி செய்த பிறகு, அவருக்கு சிகிச்சையளித்த பெரும்பாலான மருத்துவக் குழு ஏப்ரல் 19 அன்று தலைநகர் பியோங்யாங்கிற்குத் திரும்பியது. அவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே கிம்முடன் உள்ளனர் என்று அந்த செய்தித் தளம் மேலும் தெரிவித்துள்ளது.
ஆனால் உண்மை நிலையைக் கண்டறிவது அமெரிக்க உளவுத்துறைக்கே கடினம் என்பது தெரிந்த விடயம். வட கொரியாவிலிருந்து உளவுத்துறையைச் சேகரிப்பது மிகவும் கடினம். ஏனெனில், ஏறக்குறைய கடவுளைப் போல கிம் அந்த நாட்டால் பார்க்கப்படுகிறார். கிம்மை சுற்றியுள்ள எந்தவொரு தகவலையும் கசிய விடாமல் வட கொரியா கடுமையாக கட்டுப்படுத்தி வைப்பது வழக்கம்.
“கிம்மின் உடல்நலம் (புகைபிடித்தல், இதயம் மற்றும் மூளை) பற்றி சமீபத்தில் பல வதந்திகள் வந்துள்ளன. கிம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால்தான், ஏப்ரல் 15 கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை என சந்தேகம் வருகிறது" என்று மூத்த ஆராய்ச்சியாளரான புஷரூஸ் கிளிங்கர் கூறியுள்ளார். இவர் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனில் நிர்வாகி மற்றும் வட கொரியா தொடர்பான முன்னாள் சி.ஐ.ஏ துணை பிரிவுத் தலைவர்.
ஆனால், பல ஆண்டுகளாக, கிம் ஜாங்-உன் பற்றி பல வதந்திகள் வந்துள்ளன. நாம் காத்திருந்துதான் அதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார் அவர்.
சர்வாதிகாரியாக அறியப்படக் கூடிய கிம் உடல்நிலை பற்றி உலகில் உள்ள அத்தனை நாடுகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. அதிலும் முக்கியமாக அதன் எதிரி நாடான தென் கொரியா இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறது.
இதுபற்றி தென் கொரியாவின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அமெரிக்க ஊடகத்தின் செய்தி பற்றி உடனடியாக எதையும் உறுதி செய்ய முடியவில்லை. தொடர்ந்து நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” என்று கூறினார்.
இதனிடையே தென் கொரிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் “சி.என்.என் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் சரியானது என்று கூறி விட முடியாது” என்று கூறியுள்ளது.
கிங் உன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான் என்ற போதிலும், அமெரிக்கா கூறுவதைப் போல மிக மோசமான நிலையில் அவரது உடல்நிலை இல்லை என்று தென் கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.
கிம் ஜாங் உன் உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் ஒரு விடுதியில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தென் கொரிய ஊடகம் 'டெய்லி என்.கே' கூறியுள்ளது. கடந்த 12ஆம் திகதி கிம் ஜான் உன் இதய அறுவைச் சிகிச்சைக்கு உள்ளானதாகவும், அதன் பிறகு அவர் ஓய்வில் இருந்து வருவதாகவும் அந்த ஊடகம் கூறியுள்ளது.அவர் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது உறுதியான தகவல் அல்ல என்றும் அந்த ஊடகம் தெரிவிக்கிறது.
சியோலை தலைமையிடமாகக் கொண்ட வெப்சைட் டெய்லி என்.கே. சில உளவு அமைப்புகளை மேற்கோள் காட்டி, “கிம் உன், வட கொரியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஹியாங்சனின் மவுண்ட் கும்காங் ரிசார்ட் கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவில் ஓய்வெடுத்து வருகிறார்” என்று கூறுகிறது. ஆனால், கிம் மோசமான உடல்நிலை பிரச்சினையில் இருப்பதாக சி.என்.என் தெரிவித்துள்ளது. வட கொரியாவில் உளவுத் தகவல்கள் சேகரிப்பது சிரமம் என்பதால், இதில் எந்தத் தகவல் சரியானது என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதுஒருபுறமிருக்க, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அரசாங்க அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்துள்ளனர்.
“36 வயதான கிம் ஜாங்-உன் மிக மோசமான நிலையில் இருக்கிறார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அப்படியான எந்த அறிகுறிகளும் வட கொரியாவில் நிலவவில்லை” என தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது. அதில் அவர் கலந்து கொண்டதாக தெரியவில்லை. அப்படியான தகவல்களையும் வட கொரிய அரசு ஊடகம் வெளியிடவில்லை. வட கொரியாவில் ஊடகப் பணியை மேற்கொள்வது மிகவும் கடினமான ஒன்று. ஏராளமான நெருக்கடிகள் அங்கு உள்ளன. இப்படியான சூழலில் வட கொரியாவிலிருந்து வெளியேறிய சிலர் நடத்தும் இணையத்தளத்தில்தான் கிம் ஜாங்-உன் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தி வெளியாகியிருந்தது.
கிம் ஜாங்-உன் இதய நோயால் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் அவதியுறுவதாகவும், அடிக்கடி பாக்து மலைக்கு சென்ற பின்னர் இந்த நோய் அதிகரித்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் என்.கே டெய்லி நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பல்வேறு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டன. அமெரிக்க ஊடகங்களில் இது தலைப்புச் செய்தியானது.
தென் கொரிய அரசாங்க அதிகாரிகளும், சீன உளவுத்துறை அதிகாரிகளும் கிம் உடல்நிலை குறித்து வரும் அனைத்து தகவல்களையும் மறுத்துள்ளனர்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
2014ஆம் ஆண்டு ஏறத்தாழ 40 நாட்கள் அவர் பொது நிகழ்ச்சிகளில் எங்கும் தோன்றாமல் இருந்தார். ஆட்சிக் கவிழ்ப்பால் அவர் வெளியேற்றப்பட்டார் என்ற வதந்திகளும் அப்போது உலவின. பின்னர் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் நலக் கோளாறு காரணமாக அவர் 40 நாட்கள் ஓய்வில் இருந்தார் என கூறிய வட கொரிய அரசு ஊடகம், அவருக்கு முடக்குவாதம் என்று அப்போது பரவிய வதந்தி தொடர்பாக கருத்து கூற மறுத்திருந்தது.
நன்றி - தினகரன்

கருத்துகள்