- எம்.மனோசித்ரா -

தொழிநுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பலம் பொருந்திய நாடுகளில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்பதற்காக இலங்கையிலும் தேர்தல் நடத்த முடியாது. நாட்டில் முழுமையாக வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் தேர்தலை நடத்துவதே பொறுத்தமானமதாக இருக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நேரம் ஒதுக்குமாறு கோரியுள்ளோம். தேர்தல் என்பது நாட்டுக்கு அத்தியாவசியமானதாகும். ஆனால் இது தேர்தலை நடத்துவதற்கு உகந்த சூழல் அல்ல.

தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் தொழிநுட்ப ரீதியில் எம்மை விட பன்மடங்கு வளர்ச்சியடைந்த நாடுகளாகும். எனினும் அவை தற்போது மீண்டும் அவதான நிலைக்குச் சென்றுள்ளன. தென் கொரியாவில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலும் எதிர்வரும் இரு வாரங்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டிய காலமாகும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே நாமும் இவ்விடயம் தொடர்பில் அவதானமாகவே இருக்க வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு அந்நாடு பல மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. எனினும் பலம் பொருந்திய நாடுகளில் தேர்தல் நடத்தப்பட்டால் நாமும் நடத்தலாம் என்பதோ, தேர்தல் நடத்தப்படா விட்டால் நாமும் தேர்தலை நடத்த தேவையில்லை என்பதோ இங்கு முக்கியமல்ல. நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள துறைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்ததன் பின்னர் தேர்தலுக்குச் செல்ல முடியும்.

அரசாங்கத்தின் நிவாரணம் சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அதற்குள் உள்ளடங்காத பல்வேறு தரப்பினர் உள்ளனர். முச்சக்கர வண்டி சாரதிகள், முடி வெட்டும் தொழில் செய்வோர், வியாபாரிகள் என சமுர்த்தி பயனாளிகளில் உள்ளடங்காத பலர் உள்ளனர். சமூர்த்தி பயனாளிகளும் இவ்வாறான பிரிவினருக்கும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தெரிவு செய்யப்படும் முறைமை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சமுர்த்தி கொடுப்பனவை பெற விண்ணப்பிப்பவர்களின் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது.

 எந்த அரசியல் கட்சி இவ்வருடத்துக்கான வாக்காளர் பெயர் பட்டியலைப் பெற்றுள்ளது என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வினவ விரும்புகின்றோம். இவ்வாறான சிக்கல்களுக்கிடையில் கிராம சேவர்களும் தாம் சேவையிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஒரு மாத காலம் நிறைவடையவுள்ள சந்தர்ப்பத்திலும் சமூர்த்தி கொடுப்பனவை வழங்குவதற்கு தற்போதும் விண்ணப்பங்கள் தான் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கை என்பது வைரஸைக் கட்டுப்படுத்துவது மாத்திரமல்ல. பாதிக்கப்பட்டுள்ள அனைத்து துறைகளையும் மீள கட்டியெழுப்புவதுமாகும்.

தொலைக்காட்சி செய்திகளில் காட்டப்படும் கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் நிவாரணங்கள் உண்மையில் நாட்டில் முன்னெடுக்கப்படுவதில்லை. காரணம் முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு எவ்வித உதவியும் வழங்கப்படவில்லை என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.