எதிர்காலம்? 


வை எல் எஸ் ஹமீட்

கொரோனாவால் மரணித்தவர்களை  மருத்தவத்துறையில் வானளாவ வளர்ந்த நாடுகளே அடக்கம் செய்ய அனுமதிக்கின்றன. உலக சுகாதார இஸ்தாபனம் அடக்கலாம்; என்கிறது. ஆனால் இலங்கை அரசு மட்டும் எரிக்கவே வேண்டும்; என்ற தனது விடாப்பிடியான நிலைப்பாட்டை வர்த்தமானியிலும் பிரசுரித்துவிட்டார்கள்.

இது முஸ்லிம்கள் தொடர்பாக அரசின் தீர்க்கமான ஒரு நிலைப்பாட்டை பறைசாற்றுகிறது. முஸ்லிம்களின் எதிர்காலம் தொடர்பாக ஒரு பாரிய கேள்விக்குறியைத் தோற்றுவித்திருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் மீறப்படுகின்றபோது இந்துக்களும் அவர்களுடன் பெருமளவில் இணைந்து போராடுகிறார்கள். ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை.

இது தீர்க்கமான சந்தர்ப்பம். முஸ்லிம் அரசியல், சமய மற்றும் சிவில் சமூகத்தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் தொடர்பாக ஆழமாக சிந்திக்க வேண்டும். பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் இருக்கின்ற நடுநிலையாக சிந்திக்கக்கூடிய, இனவேறுபாடுகளுக்கப்பால் நியாயங்களுக்காக குரல்கொடுக்கக்கூடியவர்களை அணுக வேண்டும்.

சகல சமூகங்களையும் உள்ளடக்கிய இனவாதத்திற்கெதிராக போராடக்கூடிய நல்லுள்ளங்களை இணைத்து ஒரு பாரிய கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டும்.

சிறுபான்மைகளுக்காக குரல்கொடுக்கக்கூடிய பௌத்த மதகுருமார் நிறைய இருக்கிறார்கள். அதேபோன்று படித்த புத்திஜீவிகள் இருக்கின்றார்கள். அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். அதேபோன்று அவ்வாறானவர்கள் ஏனைய சமூகங்களுக்குள்ளும் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒன்றிணைத்து இனவாதத்தை இந்நாட்டில் இருந்து ஒழிக்கும் போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டும். இல்லையெனில் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். பெரும்பான்மை சமூகம் வெளிப்படையாக இனவாதத்திற்கெதிராக பேச ஆரம்பித்தால், சிறுபான்மையினரை அரவணைக்கும் அவசியத்தை வெளிப்படையாகப் பேசினால் ஆட்சியாளர்களும் சிந்திக்க ஆரம்பிப்பார்கள்.

ஒரு நாட்டில் வாழுகின்ற அனைத்துப் பிரஜைகளும் சம உரிமை உடையவர்கள். ஆனாலும் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ளவர்களுக்குள்ளிருந்தே ஆட்சியாளர்கள் எப்போதும் தீர்மானிக்கப்படுகிறார்கள். அதை சிறுபான்மைகள் எதிர்ப்பதும் இல்லை. தாங்களும் ஆட்சியாளர்களாக வரவேண்டும்; என்று அவர்கள் கோருவதுமில்லை.

சிறுபான்மைகளும் பெரும்பான்மையைச் சேர்ந்த ஒருவரையே ஆட்சியளாராக தெரிவுசெய்ய முற்படுகிறார்கள். ஆனால் சிறுபான்மையே இல்லாமல் பெரும்பான்மையே சுயமாக ஆட்சியாளரைத் தெரிவுசெய்யவேண்டும்; என்கின்ற மனோநிலை இன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

பெரும்பான்மை மக்களுக்களுக்காக, பெரும்பான்மை மக்களால் செய்யப்படும் பெரும்பான்மை ஆட்சி என்ற கோட்பாடு இன்று உருவாகிக்கொண்டிருக்கின்றது. அதனால்தான் இன்று ஒரே நாடு ஒரே சட்டம்; என்கிறார்கள்.

இந்த நாட்டில் அன்றிருந்து இன்றுவரை ஒரே சட்டம்தான் இருக்கிறது. இரு சட்டங்கள் இல்லை. அதே நேரம் இந்த நாட்டில் ஒரே மதமோ, ஒரே கலாச்சாரமோ இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட மதங்களும் கலாச்சாரங்களும் உள்ளன. அவை அனைத்தையும்  ஒன்றாக மாற்றமுடியாது. அவரவர் மத, கலாச்சாரங்களுக்கேற்ற விதத்தில்தான் அவர்கள் திருமணமுடிக்கலாம், விவாகரத்து செய்யலாம். அது அவர்களது அடிப்படை உரிமை.

இது UDHR, ICCPR மற்றும் இங்கை அரசியல்யாப்பு ஆகியவற்றில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில்தான் தனியார் சட்டங்கள் இருக்கின்றன. ஒரு சமூகத்தின் மத, கலாச்சார விழுமியங்கள் அடுத்த சமூகத்தைப் பாதிக்காதவரை அடுத்த சமூகம் அதற்குள் தலையிடுவது நியாயமில்லை.

அந்தவகையில் மரணித்தவர்களை அடக்கம் செய்வது என்பது முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களது மார்க்கத்தின் அடிப்படையோடு சம்பந்தப்பட்டது. அவ்வாறு அடக்கம் செய்வது அடுத்தவர்களுக்குப் பாதிப்பானால் அரசின் தடையில் நியாயமிருக்கும்.

இன்று இந்த கொரோனா என்பது முழு உலகையும் ஆட்கொண்டுள்ளது. உலகம் பூராகவும் பெருமளவிலான மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஏனைய நாடுகளின் விஞ்ஞான, மருத்துவ அறிவிற்கு “ அடக்கம்” செய்வது ஆபத்தாக தெரியவில்லை. இலங்கையில் மட்டும் ஆபத்தாகத் தெரிகிறது; என்றால் இது அவர்களின் அறிவு கூறவில்லை. அவர்களின் மன இறுக்கம் கூறுகிறது.

அறிவுதான் அடிப்படையென்றால் ஆகக்குறைந்தது நிபுணர்கள் குழுவை அமைத்து இது தொடர்பாக ஆராய உடன்பட்டிருக்க வேண்டும். அரச மருத்துவர் சங்கமும் நிபுணர் குழுவை அமைக்கக் கோரியிருந்தது. ஆனாலும் அதற்கெல்லாம் அரசு தயாராக இல்லை. இந்த நிலையில்தான் முஸ்லிம் சமூகம் அறிவுபூர்வமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களிடம் செல்லவேண்டும். சிறுபான்மை பற்றிய அவர்களது பார்வையை மாற்றவேண்டும். அதற்கு மேலே கூறியவாறு பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் உள்ள நடுநிலைச் சிந்தனையாளர்களை ஒன்று திரட்டவேண்டும். பாரிய பணி முஸ்லிம் தலைமைகள்மீது இருக்கின்றது.

அதேபோன்று முஸ்லிம்களின் பிரச்சினைகள் சாத்தியமான சகல முன்னரங்குகளிலும் தெட்டத்தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும். உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் மிகவும் நிதானமாகவும் தீர்க்கமாகவும் எதிர்காலத்தை கையாளவேண்டும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.