ஜனாதிபதி சர்வாதிகாரமாக செயற்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உறுதுணையளிப்பது போல எங்களுக்கு தெரிகிறது - ரவூப் ஹக்கீம்
"தேர்தல்கள் ஆணைக்குழு பாராளுமன்றத் தேர்தலுக்கு புதியதொரு திகதியை குறித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருக்கிறது. வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்ட மறுநாள் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடன் ஒரு கூட்டத்தை தேர்தல்கள் ஆணைக்குழு நடாத்தியது. ஜூன்
மாதம் 02 ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலுக்கான தினமொன்று நிர்ணயிக்கப்பட்டதன் மூலம் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது என்பதனை நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம்" என்று ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்றைய தினம் (23) கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "ஏற்கனவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் கொவிட் - 19 அச்சுறுத்தல் அதிகமாகி இருந்த காரணத்தினால் தேர்தலை தற்காலிகமாக பிற்போடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. பின்னர் ஜூன் 2 இற்கு முன்னர் தேர்தலை நடாத்த முடியாது என்றும் அதனால் ஏற்படவிருக்கும் அரசியலமைப்பு சிக்கல்கள் காரணமாக உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்டு ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் எழுதியிருந்தது. ஆனால் ஜனாதிபதி, தேர்தலுக்கான திகதி ஒன்றை அறிவிக்க வேண்டும் என்று ஆணைக்குழுவுக்கு பதில் அனுப்பியிருந்தார். பிரதமரும் ஒரு சில நாட்களுக்கு முன்னர், தேர்தல் திகதியை அறிவிக்காது தேர்தலை பிற்போட்டது தவறு என்று பதில் அனுப்பியிருந்தார். அவர் ஒரு மாத காலமாக நித்திரையில் இருந்து விட்டு விழித்தது போன்று இதனை செய்திருக்கிறார்."
"இது வேண்டுமென்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு தமது அதிகாரத்தைப் பிரயோகித்து சட்டத்திற்கு விரோதமாக செயற்பட வைக்கும் நடவடிக்கையாக நாங்கள் பார்க்கிறோம். அதேபோன்று ஜனாதிபதியின் பிறந்த நாளான ஜூன் 20 இனை தேர்தல் திகதியாக அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம், ஏற்கனவே இருந்த பாராளுமன்றம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்தப்பாராளுமன்றம் மீண்டும் கூடலாம் என்பதனை நாம் தேர்தல் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியிருக்கிறோம். பாராளுமன்றம் இல்லாமல் ஜனாதிபதி சர்வாதிகாரமாக செயற்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உறுதுணையளிப்பது போல எங்களுக்கு தெரிகிறது".
"மே முதல் வாரத்தில் மீண்டும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, நிலைமை மோசம் என்றால் தேர்தலை மறுபடியும் பிற்போடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் கூறியிருக்கிறார். அதன் மூலம் தொடர்ந்தும் அரசியலமைப்பு மீறப்படும் என்று நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவரிடம் கூறியிருக்கிறோம்" என்றும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ரிஹ்மி ஹக்கீம்
ஆசிரியர் - siyanenews.com
கருத்துகள்
கருத்துரையிடுக