நான்காவது தொடர்.........................

இஸ்ரேலின் பலமும், வெளிநாடுகளில் மொசாட்டின் செயல்பாடுகளும், நவீன கொலைகளும். 

இஸ்ரேலின் பலம் அவர்களது புலனாய்வுத்துறையாகும். 1949 இல் தங்களது புலனாய்வு துறையின் பெயர் “மொசாட்” என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தாலும், யூதர்கள் இஸ்ரேலை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை மேற்கொள்ளும்போதே புலனாய்வு துறையையும், “அகநா” என்னும் இராணுவ கட்டமைப்பையும் சர்வதேசரீதியில் உருவாக்கிவிட்டார்கள்.

எவராலும் முடியாத புலனாய்வு தகவல்களை திரட்டுவதில் கைதேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக எதிரியை ஆழ ஊடுருவி அவர்களது பலம் பலயீனங்களை துல்லியமாக மதிப்பிட்டு எதிரியை கொலை செய்வதில் வல்லவர்கள்.

மொசாட் அமைப்பானது வெறும் புலனாய்வு தகவல்களை திரட்டுவது மட்டும் அவர்களது பணியல்ல.

அதில் “கிடோன்” என்னும் பிரிவானது வெளிநாடுகளுக்கு சென்று ஆட்கடத்துதல், இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் குழப்பங்களை உருவாக்குதல் மற்றும் துப்பாக்கியால் சுடுதல், நஞ்சூட்டுதல், விஷ ஊசி ஏற்றுதல், ரசாயனம் பாய்ச்சுதல் போன்ற நவீன முறைகளில் கொலை செய்வதற்கு “கிடோன்” பிரிவினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது உலகமகா யுத்தத்தில் ஜேர்மன் வீழ்ந்ததன்பின்பு, அங்கு பல படுகொலைகள் நடைபெற்றது. அதாவது ஹிட்லரின் ஆட்சியில் யூதர்களை கொலை செய்தவர்களின் தகவல்களை திரட்டி அவர்களை பழிவாங்கினார்கள். அதில் பல ஜேர்மனியர்கள் உணவில் விஷம் கலக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.

இங்கே மொசாட்டின் ஓர் சிறப்பம்சம் என்னவென்றால், அவர்கள் செய்கின்ற கொலைகளுக்கு எந்தவித ஆதாரமோ, தடயமோ இருக்காது. காரியத்தை மிகவும் துல்லியமாக செய்து முடிப்பார்கள்.

ஆனாலும் ஒருசில வசமாக மாட்டிக்கொண்ட சம்பவங்களும் உண்டு. அந்தவகையில் ஜோர்தானில் இருந்து செயல்பட்டுவந்த பாலஸ்தீன விடுதலை அமைப்பான “ஹமாஸ்” இயக்கத்தின் தலைவரை கொலை செய்வதற்கு ரசாயனம் பாய்ச்சப்பட்டது. அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விடயம் ஜோர்தானிய மன்னர் ஹுசைனின் கவனத்துக்கு சென்றது. விழித்துக்கொண்ட மன்னர் உடனடியாக இஸ்ரேல் பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ““இந்த நுற்பமான கொலை முயற்சியை இந்த உலகில் உங்களைத்தவிர வேறு யாராலும் செய்யமுடியாது. இதனை எங்களது நாட்டில் வைத்து செய்துள்ளீர்கள். இந்த பயங்கரவாத செயலானது எமது நாடுகளுக்கிடையில் வளர்ந்துவரும் உறவில் விரிசலை ஏற்படுத்தும். எனவே உடனடியாக இதற்கான மாற்று மருந்தினை நீங்கள்தான் வழங்க வேண்டும்”” என்று ஜோர்தான் மன்னர் ஹுசைன் கூறினார்.

மன்னரின் அழுத்தமான வார்த்தைகளினால் அதிர்ந்துபோன இஸ்ரேலிய பிரதமர், வேறுவழியின்றி விசேட விமானம் மூலம் மாற்று மருந்தை ஜோர்தானுக்கு உடனடியாக அனுப்பிவைத்தார். அந்த மாற்று மருந்து மூலமாக ஹமாஸ் இயக்க தலைவரின் உயிர் காப்பற்றப்பட்டது.

“கிடோன்” உறுப்பினர்கள் ஒபரேசன் ஒன்றுக்காக வெளிநாட்டுக்கு செல்வதென்றால், அவர்கள் எந்த நாட்டுக்கு பயனிக்கின்ரார்களோ அந்த நாட்டின் கடவுச்சீட்டில் போலிப் பெயருடனேயே பயணிப்பார்கள். அதற்கான அத்தனை ஆவணங்களையும் மொசாட் தயார்செய்து வழங்கும்.

இவர்கள் தங்களது எதிரிகளை மட்டுமல்லாது அமெரிக்காவின் எதிரிகளையும் வெளிநாடுகளில் கொலை செய்துள்ளார்கள்.

குறிப்பாக இவர்கள் இலக்கு வைப்பது இஸ்லாமிய நாடுகளின் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் இஸ்லாமிய இயக்க உறுப்பினர்கள் ஆகியோர்களாகும்.   

இவ்வாறு மொசாட்டினால் இதுவரை கொலை செய்யப்பட்ட பிரமுகர்கள் மற்றும் ஏனைய நாடுகளின் புலனாய்வு அதிகாரிகளின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டும் என்று அறிக்கைகள் கூறுகின்றன.

அத்துடன் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா போன்ற பெரும் வல்லரசு நாடுகளின் புலனாய்வுத்துறைகளை விட, சின்னஞ்சிறிய தேசமான இஸ்ரேலின் புலனாய்வுத்துறையான “மொசாட்” மிகவும் சக்திவாய்ந்ததும் ஆபத்தானதுமாகும்.

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

நாளை தொடரும்.................................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.