அரசாங்கம் கொரோனாவினால் மரணித்தவர்களைக் கூட குற்றவாளிகள் போன்று பார்க்கிறது - முஜிபுர் ரஹ்மான்

Rihmy Hakeem
By -
0
(செய்தியாசிரியர் ரிஹ்மி)

"கொரோனா வைரஸால் மரணிப்பவர்களின் விடயத்தில் அரசாங்கம், அரசியல் ரீதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளது. மேலும், எக்காரணம் கொண்டும் தாம் எடுத்த தீர்மானத்தை மாற்றப்போவதில்லை என்ற பிடிவாதத்தில் இருக்கிறது" என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "கொரோனாவினால் மரணிப்பவர்களை அரசாங்கமானது குற்றவாளிகள் போன்றே பார்க்கிறது. மரணித்தவர்களுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதில்லை. ஒருவர் கொரோனாவினால் மரணித்தவுடன், அவர்களது இறுதி அபிலாசையை கூட நிறைவேற்றுவதில்லை. எவரும் தாமாக வந்து கொரோனாவினை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசாங்கம் 20 நாட்கள் விமான நிலையத்தினை திறந்து வைத்து கொரோனா நோயாளிகளை நாட்டுக்குள் வரவழைத்தது. ஆனால் அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மரணத்திற்குக் கூட இந்த அரசாங்கம் மரியாதை செய்வதில்லை" என்று மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)