பணம் படைத்தவர்களை, ஆட்சி அதிகாரத்தோடு இருந்தவர்களை, பெருமைவாதம் பேசியவர்களை எல்லாம் கதிகலங்க வைத்து ஆயிரக்கணக்கான மனித உயிர்களை மிகவும் இலேசாக பிடிங்கி வீசிய கொரோனா இன்னும் அதன் சேட்டையை கைவிடவில்லை. அது இந்த உலகிற்கு தந்த பாதிப்பு எவ்வளவு காலம் நீடிக்குமோ என்று எமக்கு இலகுவாக சொல்லிவிட முடியாது.

இருந்தாலும் மனித உணர்வுகளுடன் போராடி வெற்றிபெறக்கூடிய சக்தி கொரோனவிற்கு இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக பலர் பல வழிகளில் அர்ப்பணித்து பணியாற்றிக்கொண்டிருப்பதை கண்டுகொள்ள முடியும். எமது நாட்டின் அரசாங்கம், பாதுகாப்புப்படையினர், காவல்துறை, சுகாதார பணியாளர்கள் என்று பலதரப்பட்டவர்கள் எமது நாட்டைப் பாதுகாக்க பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இதில் சுகாதார பணியாள்களின் சேவையை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் முன்வரிசையில் இருந்து செய்யும் சேவை சாதாரண சேவையல்ல. எதிர்பார்ப்பு இழந்து, மனமுடைந்து வாழ்வா? சாவா? என்று ஏங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளுடனும், நோய் தொற்றுகளுடனும் இரவு பகல் பார்க்காமல் பணியாறும் நல்ல மனம் படைத்தவர்களே இந்த சுகாதார பணியாளர்கள்.

அவர்கள் வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் அவர்களது வாழ்க்கையை கேள்விக்குறியாக வைத்து, என்ன நடக்குமோ? என்ற மனநிலையுடன் ஒவ்வொரு நாளையும் சந்திக்கும் அவர்களது உணர்வுகளை நாம் புரிய வேண்டும். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த கொரோனா வைரஸை நான் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறேனா? என்ற கேள்வியும் அவர்களுக்குள் ஏற்படலாம். இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் சுகாதாரத் தொழிலில் நுழைந்தபோது எடுத்துக்கொண்ட தொழில்முறை சத்தியத்தையும் தாண்டி மக்கள் உயிர்களை காக்க போராடுகிறார்கள்.

எமது நாட்டில் வைத்தியர்கள் உட்பட சுகாதாரப்பணியாளர்கள் இதற்கு முன்பு பார்த்திராத, ஒருபோதும் சந்தித்தில்லாத மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வழக்கத்திற்கு மாற்றமாக நீண்ட நேரம் அயராது உழைத்து பணியாற்றுகிறார்கள்.
கொரோனா மிகவும் மோசமான, ஆபத்தான, கொடிய தொற்று என்று தெரிந்தும், தொற்று உள்ளவர்களை குணப்படுத்தவும், தொற்றுக்கு உள்ளாகாமல் மக்களை காப்பாற்றவும் செய்கின்ற இந்த மகத்தான பணிக்காக எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம். உங்கள் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று மனம் திறந்து பிரார்த்திக்கிறோம்.

புதியதொரு சவாலை சந்தித்து, புதிய அனுபவங்களை பெற்று, மனம் சோர்வாகாமல் கடும் போராட்டத்துக்கு மத்தியில் மக்களை காக்க போராடிக்கொண்டிருக்கும் இலங்கை அரசு, பாதுகாப்புப்படையினர், காவல்துறை, சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் ‘தர்மதீபம்’ எனும் எம் திருநாட்டின் சார்பாக மீன்டும் எமது நன்றிகளை திறந்த இதயங்களிலிருந்து வெளிப்படுத்துகிறோம்.
……………………
அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.