காத்தான்குடி தள வைத்தியசாலையின் சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்து மக்களின் சுகாதார பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திய பின்னர் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கவும் – காத்தான்குடி நகரசபை, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி தள வைத்தியசாலை அபிவிருத்திக்குழு கூட்டாக கோரிக்கை


ஆதிப் அஹமட்

காத்தான்குடி தள வைத்தியசாலையானது கொரோனா நோயாளர்களுக்கான சிகிச்சைக்குரிய வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது.அந்த வகையில் அங்கிருந்த வைத்தியசாலை தற்போது காத்தான்குடி நகரசபையின் தற்காலிக கட்டடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் காத்தான்குடி தள வைத்தியசாலையானது ஒரு தனிமைபடுத்தல் நிலையமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த போதும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் குறித்த வைத்தியசாலை கொரோனா நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையாளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ள காத்தான்குடி தள வைத்தியசாலையில் சில சுகாதார சீர்கேடுகள் காணப்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இன்று(16) இடம்பெற்றது.இந்த ஊடகவியலாலாளர் மாநாட்டில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார்,செயலாளர் ஏ.சீ.எம்.சபீழ்(நளீமி) மற்றும் காத்தான்குடி தள வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் சார்பில் பொறியியலாளர் ஏ.எம்.தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந் நிலையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு இங்கு சிகிச்சை அளிப்பதில் எந்தவித ஆட்சேபனைகளும் இல்லாத போதும் இந்த வைத்தியசாலையிலுள்ள வைத்திய கழிவுகளை எரிக்கின்ற இயந்திரம் முற்றுமுழுதாக பழுதடைந்திருப்பதோடு முறையான கழிவகற்றல் தொகுதியானது திறந்த முறையிலே அமைந்துள்ளது.இந்த சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்யாது கொரோனா நோயாளர்களுக்கு சிக்கிச்சை அளிக்க ஆரம்பிக்கப்பட்டால் இந்த வைத்தியசாலையினை அண்மித்த பகுதிகளில் வசிக்கின்ற சுமார் 600 குடும்பங்களோடு ஒட்டுமொத்த ஊர் மக்களும்  பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.நீரினால் இந்த தொற்றுக் கிருமி பரவ வாய்ப்புள்ளதாகக்கூறியே கொரொனாவினால் மரணித்தவர்களின் உடல்களே அடக்கம் செய்ய மறுக்கப்படுகின்ற நிலையில் குறித்த தொற்றுக்குள்ளான நோயாளி பயன்படுத்டுகின்ற நீர் பரவலால் ஏனைய மக்களுக்கு இது பரவ வாய்ப்புள்ளது என்ற விடயங்கள் குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதுதொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டி இந்த சுகாதார சீர்கேடுகளை சீர்செய்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் சிகிச்சையளிக்க ஆரம்பிக்குமாறு  காத்தான்குடி நகரசபையின் தவிசாளரினால் கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆழுநருக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்த போதும் இதுவரையில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.இந்த கழிவுகளை எரிக்கின்ற இயந்திரம் முற்றுமுழுதாக பழுதடைந்திருப்பது தொடர்பாகவும்  முறையான கழிவகற்றல் தொகுதியானது திறந்த முறையிலே அமைந்துள்ளது தொடர்பாகவும் கடந்த ஒருவருடமாக பல்வேறு தரப்பினருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகாவும் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் இதன்போது தெரிவித்தார்.

காத்தான்குடியினை பொறுத்தவரையில் மிக குறுகிய நிலப்பரப்புக்குள் கூடியளவான மக்கள் வசித்து வருகின்றனர். இதுவரை எந்த கொரோனா நோயாளர்களும் குறித்த இந்த பகுதியில் அடையாளம் காணப்படாத நிலையில் குறித்த சிகிச்சை நிலையத்தில் முறையான சுகாதார சீர்கேடுகள் சீர்செய்யப்படாது சிகிச்சையளிக்க ஆரம்பிக்கப்பட்டதன் பின்னராக இதன் காரணமாக எவரேனும் குறித்த தொற்று நோய்க்கு இலக்காகினால் குறித்த வைத்தியசாலையினை முறையாக கண்காணிக்காது சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்யாது இவ்வைத்தியசாலையினை சிபாரிசு செய்தவர்களே இதற்குரிய பொறுப்புக்களை ஏற்க வேண்டுமென்று கூட்டாக இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி,மட்டக்களப்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான இராணுவ கட்டளைத்தளபதி ஆகிய உயர்மட்ட அதிகாரிகளோடு காத்தான்குடி நகரசபை தவிசாளர் ,பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி தள வைத்தியசாலை அபிவிருத்திக்குழு ஆகியன தொடரான பல கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளது.இதன்போது இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதோடு இந்த வைத்தியசாலையில் இயங்கி வந்த 40 சிகிச்சை பிரிவுகளூடாக வைத்திய சேவையினை பெற்று வந்த  மக்களுக்கு மாற்றீட்டு திட்டங்கள் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.