- எமது பூமியை பாதுகாப்போம் -
---------------------------------------
நாம் வாழும் இந்த புவி அனைத்து உயிரிணங்களுக்கும் பல நன்மைகளையும் ஆரோக்கியத்தையும் அள்ளித் தருகிறது. எமது உடல் ஆரோக்கியத்திற்குப் போன்று மனஆரோக்கியத்திற்கும் பெரும் பாத்திரம் ஏற்று தன் பணியை செய்கிறது.

புவி என்பது நாம் வாழும் பரந்த மேடை. அது இன்றி எமது எந்த பாத்திரத்தையும் அரங்கேற்ற முடியாது. எமக்கென்றே இறைவன் படைத்துத் தந்திருக்கின்ற அற்புதமான மேடையே அது. அதை பாதுகாக்கும் பொறுப்பு வளப்படுத்தும் பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் உண்டு. எமது நல்வாழ்வில் முக்கிய தீர்மானமாக இருப்பது இந்த பூமி என்பது எமக்குத் தெரியும். அதை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் நாம் ஆரோக்கியம் அடைவோம் என்பதுவும் எமக்குத் தெரியும்.

இந்த அழகான பூமியில் உள்ள வளங்கள் அழிந்து ஒழிந்து நாசமாகி போவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மனிதன். அப்படியானால் இந்த பூமியை அழகாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டிய முறைகளை முன்வைக்கக்கூடியவனும் முன்வைக்க வேண்டியவனும் மனிதனேயாவான்.

இந்த பூமி நாம் வாழ எவ்வளவு முக்கியம் என்றும் அது எப்படி அசிங்கப்பட்டு அசந்துபோய் இருக்கின்றது என்பதை நினைவு படுத்துவதற்கும்இ பூமியை பாதுகாப்பதன் தேவையை ஊக்குவிப்பதற்கும் மனிதர்களாகிய எம்மால் அதை பாதுகாக்க முடியும் என்று உணர்த்துவதற்கும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ம் திகதி புவிதினம் கொண்டாடப்படுகின்றது.

நானும் நீங்களும் இந்தப் பூமியை பாதுகாக்க துணைபுரியும் நல்லவர்களாக இருக்கலாம்.
ஓர் உறுதிமொழியை இன்றே உருவாக்கிக்கொள்வோம். பிள்ளைகளுக்கும் இதுபற்றி எடுத்துச் சொல்லுவோம்.

வீட்டில் அல்லது தோட்டத்தில் ஒரு சிறிய மரக்கன்றை நடுவோம்
நீரை சிக்கனமாக செலவிடுவோம்
பிலாஸ்டிக் பொருட்கள் எதையும் தீயிட்டு கொளுத்தாது இருப்போம்
மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை பயன்படுத்துவோம்
எதையும் தூக்கி எறியாதிருப்போம்
பூமிக்கு எதிராக செயற்படும் மனிதராக நாம் ஆகாதிருப்போம்

இப்படி ஏதாவது உறுதியை எடுத்து நாம் வாழும் இந்த புவிக்கு பயன்மிக்க ஒரு சேவையை இன்று செய்வோம். இன்றிலிருந்தும் செய்வோம். சிறியவிடயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த பூமி வழமையை விட அதிகமான ஆரோக்கியத்தைஇ நன்மைகளை மக்களுக்கு தரும் இடமாக அமையட்டும் என்று பிரார்த்திப்போம்.
........................................
அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.