எமது இலங்கை நாடானது பல்லின மக்கள் செழிந்து வாழ்கின்ற பௌத சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு சனத் தொகை அடிப்படையில் மூன்றாம் சாராராகவே இங்கு முஸ்லிம்களாகிய நாம் வாழ்ந்து வருகின்றோம். இலங்கை தேசத்தின் அரசியல்,கல்வி,பொருளாதாரம்,அபிவிருத்தி போன்ற இன்னொறன்ன பொது சேவைகளில் முஸ்லிம்களின் பங்களிப்பானது இன்றியமையாதது.
இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்த 1948 க்கு பிற்பட்ட காலப்பகுதியில் தான் இலங்கை நாட்டில் முதல் முறையாக கட்சி அரசியல் உதயமாகின்றது கட்சி அரசியல் ஆரம்பமாகி ஏறத்தாள முப்பத்தி மூன்று வருடகாலம் வரை முஸ்லிம் சிறுபான்மை அரசியல் தலைவர்கள் பெரும்பான்மை கட்சிகளுடன் ஒன்றினைந்துதான் தங்கள் சமூகத்தினுடைய அபிலாசைகளை வென்றெடுக்க முயற்சித்து வந்துள்ளார்கள்.
இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களை தனித்துவப்படுத்தி காட்ட முஸ்லிம்களின் உரிமைக் கலாச்சாரத்தை வென்றெடுக்க 1981 க்கு பிற்பட்ட காலப்பகுதியில்தான் ஒரு கட்சி உதயமாகின்றது. அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் விடா முயற்சியினாலும் அன்றைய இக்கட்டான காலகட்டத்தில் இக்கட்சிக்காக தங்களது உயிரை கூட துச்சமென நினைத்து போராடிய போராளிகளின் வியர்வைத் துளியினாலும் பல தாய்மார்கள் நோன்பிருந்து அழுதழுது கேட்ட பிரார்த்தனையினாலும் தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி முஸ்லிம்களுக்குனெ்று ஒரு தனித்துவத்தை தேசியத்திலும்,சர்வதேசத்திலும் எடுத்துக்காட்டி முஸ்லிம்களின் உரிமைக் கலாச்சாரத்தை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்டது.
1981ம் ஆண்டு செம்டம்பர் மாதம் 11ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இக் கட்சி 1986 ம் ஆண்டு முஸ்லிம்களின் தேசிய கட்சியாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது. சுமார் பதினான்கு வருடங்கள் முஸ்லிம்களின் கல்வி,அபிவிருத்தி உரிமைக் கலாச்சாரம் போன்றவற்றுக்காக தனி ஒரு நபராக நின்று போராடிய பெருந் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மரணமே இச் சமூகத்தின் மிகப் பெரும் இழப்பாகும்.
அதன் பிற்பாடு 2000ம் ஆண்டு மர்ஹூம் அஷ்ரபின் மரணத்தின் பிற்பாடு தலைமைப் பதவி ஏற்றுக் கொண்ட ரவூப் ஹக்கிமீன் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸானது கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் பாரிய சவாலுக்குட்படுத்தப்பட்டிருப்பதோடு முஸ்லிம்களின் உரிமைக் கலாச்சாரமும் வெவ்வேறு ஆட்சியாளர்களின் அரசாங்கத்தினாலும் கேள்விற்குற்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.
தற்போதய அரசாங்கம் மாத்திம் அதற்கு விதிவிலக்கல்ல என்றளவுக்கு நிலமை மோசமடைந்து சென்று கொண்டிருக்கின்றது.இன்னும் அமைதியாக இருந்தால் முஸ்லிம்களாகிய நாம் ஐவேளைத் தொழுகைக்காக எமது இறையில்லங்களில் ஒலிக்கப்படுகின்ற பாங்கு சத்தத்தை கூட சொல்ல விடாமல் முஅத்தின்களின் குரல் வலைகள் நசுக்கப்படும் அளவுக்கு நிலமை தலைக்கேறி விடலாம்.
ஒட்டு மொத்த உலகையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொவிட் -19 கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாளுக்கு நாள் இலட்சக்கணக்கான மக்கள் உலகளவில் பாதிக்கப்பட்டு கொண்டு ஆயிரக்கணக்கில் உயிர் துறந்தும் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஷாக்களை எம் மார்க்க சம்பிரதாயத்தின் படி அடக்குவதற்கு இவ்வரசாங்கம் தடைவிதித்து மாறாக பெரும்பான்மை சமூகத்தின் சம்பிரதாயத்தின் படி எரிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமாணியில் சுற்று நிரூபம் வெளியகாகியுள்ளதானது இவ்வரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் வைத்திருந்த நம்பிக்கையை சற்று வழுவிலக்கச் செய்துள்ளது.
ஒட்டு மொத்த உலக நாடுகளும் இக் கொடிய வைரஸினால் இறக்கும் உடல்களை புதைக்கும் போது, அவ்வாறு புதைப்பதால் எவ்வித எதிர் திசை தாக்கங்களும் மனிதர்களுக்கு ஏற்படப் போவதில்லை என உலக சுகாதார ஸ்தாபனமும் அறிவித்துள்ள நிலையில் அறிவார்ந்த ஒரு அராங்கம் இவ்வாறு முர்க்கத்தனமாக முடிவெடுத்துள்ளதானது இனவாதிகளை திருப்பதி படுத்தவா என்று சந்தேகிக்க தோன்றுகின்றது.
இன, மத, மொழிக்கப்பாற்பட்டு முழு இலங்கை மக்களின் நலனுக்காகவும் பாடுபட்ட மாபெரும் தலைவர் அஷ்ரபின் வளர்ச்சியும் அவரின் சேவையும் பிடிக்காததன் காரணமாகவே அவரின் சகாக்களே காலப் போக்கில் அவருக்கு எதிரியாக மாறினார்கள், இருந்தும் அவர் மனம் தளர்ந்து விட வில்லை, முழு மூச்சாக நின்று முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தே வந்தார். அதன் காரணமாக அன்றைய கால அரசாங்கமே இவரைப் பார்த்து வியப்படைந்தது.
இன்றைய தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்களும் முஸ்லிம்களின் உரிமை கலாச்சார இவ்விடயத்தை வெறும் அறிக்கையோடு நிறுத்தி விடாமல் எமது ஒட்டு மொத்த அரசியல்,ஆன்மீக,பொது சேவை அமைப்பு தலைவர்களையும் ஒன்று திரட்டி இவ்வரசாங்கத்தின் தலைவர்களோடு சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தி தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டியது கட்டயத் தேவையாகும்.அதுவும் தோல்வியுறும் பட்சத்தில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைையை சர்வதேச மயப்படுத்த வேண்டியதே மாற்று வழியாகும்.
பெருந் தலைவர் போராடி பெற்றுத் தந்த எமது அரசியல் உரிமைக் கலாச்சாரங்களை வெற்றுக் கோசங்களோடு மட்டுப்படுத்தி இக் கட்சியினூடாக அரசியல் முகவரி வெற்ற தலைவர்கள் கடந்த கால அரசாங்கத்தில் ரணில் என்ற மோசாட் முகவரை காப்பாற்றுவதற்காக போராடியதே இக் கட்சியின் வீழ்ச்சியையும், முஸ்லிம்களின் உரிமைகளையும் இக்கால அரசாங்கத்தில் கேள்விற்குட்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த கால அரசாங்கத்தில் எமது நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த இனக் களவரங்களை சர்வதேச மயப்படுத்தி அல்லது நாட்டின் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வை இக் கட்சியும்,தலைமையும் பெற்றுக் கொடுத்துள்ளதா என்ற கேள்வியும் இங்கு தொங்கி நிற்க்கத்தான் செய்கின்றது.
பல கட்சிகளாக பிரிந்து சென்றுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒரே குடையின் கீழ் ஒன்றினைத்து செயற்படுவதே இக் கட்சியை தேசியத்திலும்,சர்வதேசத்திலும் பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுக்க வழி வகுப்பதோடு அதுவே முஸ்லிம்களின் உரிமைக் கலாச்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கும் வழிவகுக்க கூடும்.
வை.எம்.பைரூஸ்
வாழைச்சேனை