இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் போலித் தகவல்களை பதிவிடும் முகநூல் பயனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.
முகநூல் நிறுவனத்தின் இலங்கை முகாமையாளர் செனுர அபேவர்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போலியான தகவல்களை பிரசூரிக்கின்றார் என பயனர் ஒருவரை முடக்குவதற்கு சட்ட ரீதியான உத்தரவு கிடைக்கப் பெற்றால் முகநூல் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் போலியான செய்திகள் முகநூல் வழியாக பிரச்சாரம் செய்யப்படுவதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சில சமூக ஊடகங்களில் போலியானதும், உறுதிப்படுத்தப்படாததுமான செய்திகள் வெளியாவது குறித்து அவதானிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான போலிச் செய்திகள், உண்மைக்குப் புறம்பான தகவல்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு பல்வேறு புதிய தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஓர் இன சமூகத்தை, அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பை இலக்கு வைத்து குரோத உணர்வைத் தூண்டும் பதிவுகளும் முகநூலில் பிரசூரிக்கப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
செய்தியின் உண்மைத் தன்மையை கண்டறியும் பொறிமுறைமையின் கீழ் இலங்கையில் பிரசூரமாகும் பதிவுகள் சரிபார்க்கப்படுவதாகவும் போலிச் செய்திகள் பிரசூரமாவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், போலிச் செய்தியொன்று நீக்கப்படுவதற்கான கால அவகாசம் சில நேரங்களில் மாறுபட்டதாக இருக்கும் எனவும் உண்மையான செய்தியா என்பதனை கண்டறிதல் சற்றே சிக்கல் மிகுந்த விடயம் என்பதனால் இந்த கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Kamel)
கருத்துகள்
கருத்துரையிடுக