தற்போது நிலவும் இலங்கையின் சூழ்நிலை குறித்தான பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவாதிப்பதற்கும் கலந்துரையாடுவதற்கும் அனைத்து கட்சி செயலாளர்கள் கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,
இலங்கையின் கொவிட்-19 பாதிப்பு ஆரம்பித்தவுடன், ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்தப்படவிருந்த பொதுத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, “வாக்கெடுப்புக்கான அறிவிப்பை  தேர்தல் ஆணையகத்தால்  வெளியிட முடியாமல் உள்ளமையானது, தற்போதைய பிரச்சினையைக் குறைத்துவிடவோ அல்லது சாதாரண நிலைக்கு கொண்டுவரவோ மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுகாதார, பொலிஸ் உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினரும் தற்போது நாட்டில் பரவிவரும் இந்நோய் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்ற அறிவிப்பை விடுத்த பின்னர், தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணையகம் விடுத்து திகதி குறிப்பதே பொறுத்தமானது என்பதையும், மு.கா. அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
புதியதொரு நாடாளுமன்றத்தை அமைப்பதற்கு, மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்த இயலாமை குறித்து உச்சநீதிமன்றத்தினூடாக ஜனாதிபதியிடம் ஆணையகம் கோரியிருந்தமைக்கும் முடிவு கிடைக்கவில்லை என்பதையும் அக்கடிதத்தில் மு.கா. குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு, தற்போதைய சூழ்நிலை வழிவகுக்காது என்பதால், வாக்கெடுப்பு  தொடர்பான அறிவிப்பை வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையகம் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடக்கூடாது என்றும் அக்கடிதத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.