மின்னல் தாக்கியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு



மின்னல் தாக்கி சிறுமியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த பெருந்துயர் சம்பவமொன்று பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செலயகத்துக்குட்பட்ட ஊவா மாளிகா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மோகன்ராஜ் ருக்‌ஷி (வயது -10) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வறுமையின் கோரப்பிடியால் ருக்‌ஷியின் குடும்பம் மண்குடிசையொன்றிலேயே வாழ்ந்து வந்தது. மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகள் கூட அதில் இல்லை.

இராட்சத மரமொன்றுக்கு கீழ்தான் அந்த குடிசை அமைந்துள்ளது. நாட்டில் பலபகுதிகளிலும் தற்போது மாலை வேளைகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது.

இவ்வாறு பெய்யும்போது, மரத்தடியில் ஒதுங்கியபோதே மின்னல் தாக்கி சிறுமி உயிரிழந்துள்ளார் என விசாரணைகளை மேற்கொண்ட கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் வெல்லவாய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என கொஸ்லந்த பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

-கிரிஷாந்தன்-

கருத்துகள்