‘கோவிட் -19’ கொரோனா வைரஸ் சமூகத்தை தாக்கும் அச்சுறுத்தல் கட்டத்தை கடந்துள்ளது. இப்போதுள்ள நிலையில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அச்சுறுத்தல் இல்லாத பிரதேசங்களின் தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
‘கோவிட் -19’ கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்.
‘கோவிட் -19′ வைரஸ் தொற்றுநோய் நாட்டில் பரவ ஆரம்பமான நிலையில் மிகப்பெரிய அச்சுறுத்தல் காணப்பட்டது.

உலகில் ஏனைய நாடுகளில் இன்றுவரை ‘கோவிட் -19’ வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படும்போது  நாமும் அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடுமோ என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது.

எனினும் எமது சுகாதார கட்டமைப்பு மற்றும் மக்களின் ஒத்துழைப்புக் காரணமாக எம்மால் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளது. இப்போது நாட்டில் கொரோனா  வைரஸ் பரவலானது சமூகத்தை மோசமாக தாக்கும் என்ற அச்சுறுத்தல் நிலைமைகளை  கடந்து  வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஆனால் தற்போது வரையில் நாம் முன்னெடுத்துள்ள சுகாதார கட்டமைப்பைத்  தொடர்ந்தும் முன்னெடுக்க தவறினால் மீண்டும் மோசமான வகையில் சமூகத்தைப் பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

எனவே கூட்டம் கூடுவதைத்  தடுக்க வேண்டும். ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் நிலையில் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியும். ஆனால் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டால் சமூக செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது கடினமாகும். ஆகவே நாம் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதில் தான் அடுத்தகட்ட தீர்மானங்கள் அமையும்.

மேலும் அச்சுறுத்தல் குறைந்த மாவட்டங்களின் அன்றாட செயற்பாடுகளில் மக்களை ஈடுபடுத்தும் வேலைத்திட்டங்கள் குறித்த பரிந்துரைகளை நாம் அரசாங்கத்துக்கு வழங்கி வருகின்றோம். குறிப்பாக, வெளிமாவட்டங்களில் தொழிற்சாலைகளின் இயக்கத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் குறித்தும் கவனம் செலுத்தி சுகாதார ஆலோசனைகளுடன் மக்களை செயற்பட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தொழில்களில் மக்களை ஈடுபடுத்தும் சந்தர்ப்பங்களில் மக்கள் எவ்வாறான சுகாதார கட்டமைப்பை பின்பற்ற வேண்டும், நிறுவனங்களில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், கூட்டம் கூடுவதை எவ்வாறு தடுக்க முடியும் என்பது குறித்து சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை படிவம் ஒன்றும் சகல தரப்பினருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.