இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்று காரணம் கூறி கொரோனா வைரசின் தாக்கத்தினால் மரணிக்கின்ற அனைவரது உடல்களும் எரிக்கப்படும் என்று வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான மதமான பௌத்த மதத்தை பின்பற்றல் வேண்டும் என்று எதிர்காலங்களில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டாலும் கோழை சமூகமான எங்களால் எதுவும் செய்ய முடியாது. 

அவ்வாறு வர்த்தமானி வந்தாலும் எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊடகங்களில் அறிக்கையை மட்டும் வெளியிட்டுவிட்டு தனது கடமை முடிந்துவிட்டது என்று போர்த்திக்கொண்டு தூங்கிவிடுவார்கள். 

ஓர் தனித்துவ சமயத்தினை பின்பற்றி வருகின்ற இஸ்லாமியர்களின் மத உணர்வுக்கு சவால்விடும் வகையில் அவர்களது மரணச்சடங்கினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தீர்மானிக்கின்ற நிலை காணப்படுவதானது எதிர்காலம் குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை முஸ்லிம்களின் ஆன்மாவில் கைவைப்பது போன்று முஸ்லிம்களின் விருப்பத்துக்கு மாறாக இந்த வர்த்தமானியை வெளியிட்டதன் மூலம் ஆட்சியாளர்கள் தங்களது சர்வாதிகாரத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

இந்த அரசாங்கத்தை ஆதரிக்கின்ற முஸ்லிம் பிரமுகர்கள் இந்த விடயத்தில் என்ன செய்தார்கள் ? தனது சார்பு அரசாங்கத்துக்கு ஏன் அவர்களால் அழுத்தம் வழங்க முடியவில்லை ?

மறுபுறத்தில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் கட்சிகள் என்ன செய்கிறது ?

தனது சகோதரர் என்று வாய் நிறைய முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களை புகழ்ந்து பேசிவருபவர் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள். அப்படியிருந்தும் தனது சகோதரரின் கோரிக்கையையாவது நிறைவேற்ற முடியாதது ஏன் ? 

தென்னிலங்கையில் அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கெதிராக இனவாத பிரச்சாரத்தை முன்னிறுத்தியே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பேற்றியது.

அத்துடன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்வதற்காக இனவாதிகளால் தென்னிலங்கையில் விதைக்கப்பட்ட இனவாதத் தீ அணைந்துவிடாமல் ஆட்சியாளர்கள் மிகவும் கவனமாக பாதுகாத்து வருகின்றார்கள். என்பது மொட்டுவின் பாராளுமன்ற வேட்பாளர் பட்டியலைக்கொண்டே எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. 

முஸ்லிம்களுக்காக ஏதாவது சிறப்பு சலுகைகளை ஆட்சியாளர்கள் வழங்குகின்றார்களா என்று தென்னிலங்கை இனவாத சக்திகள் கழுகுக்கண் பார்வை கொண்டுள்ளார்கள்.

இப்படியான நிலையில் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமான அதாவுல்லாஹ் போன்றவர்களின் கோரிக்கையை ஏற்பதா ? தன்னால் வளர்க்கப்பட்ட தென்னிலங்கை இனவாத சக்திகளை திருப்திப்படுத்துவதா ? 

இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கினால் இனவாத குழுக்கள் ஒன்று சேர்ந்து வீதிக்கு வந்துவிடுவார்கள்.

அப்படி வந்தால் அது எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற ஆசனம் என்ற இலக்குக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதனால் ஆட்சியாளர்கள் தென்னிலங்கை இனவாதிகளை திருப்திப்படுத்தியுள்ளார்கள்.   

உலக சுகாதார ஒன்றியத்தின் அறிக்கையை காரணம் காட்டி தங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இனவாதிகளை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் ஆட்சியாளர்கள் தங்களது தேர்தல் வெற்றிக்காக முஸ்லிம்களின் ஜனாஸாவில் அரசியல் செய்துள்ளார்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.