(எஸ்.றொசேரியன் லெம்பேட்)
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் இன்று (08) புதன்கிழமை அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்துக்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்குத் கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு புத்தளத்துக்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு நோய் ஏற்பட்டும் அவர் வைத்தியசாலைக்குச் செல்லவில்லை. அவர் கடந்த மாதம் 15 ஆம் திகதி இந்தோனேஷியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார். அதற்கு பின்னர் 18 ஆம் திகதி மன்னார் தாராபுரம் கிராமத்துக்கு வந்து மரணச் சடங்கில் கலந்து கொண்டு பின் மீண்டும் புத்தளத்துக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபர் புத்தளத்தில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருநத அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது அவர் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் இது தொடர்பில் உடனடியாக மன்னாரில் உள்ள உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
உடனடியாக மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினரும் குறித்த கிராமத்துக்குச் சென்று தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் எதிர்வரும் ஒரு வாரத்துக்கு முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கிராம மக்களுக்கு ஏதுவும் நோய் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதனை அவதானிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குறித்த நபர் இங்கு வந்து தங்கிய இரண்டு நாட்களில் அவருடன் நெருங்கிப் பழகிய இரண்டு குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சமூக நோய் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எங்களின் நடவடிக்கைகளுக்கு தாராபுரம் கிராம மக்களும்,பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.
முழுமையாக முடக்கப்பட்ட தாராபுரம் கிராமத்தில் உள்ள மக்களுக்குத் தேவையான உலர் உணவு பொருட்களை வினியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் மாவட்டச் செயலக அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளோம்.
அத்துடன் தாராபுரம் மக்கள் அச்சமடையவும் தேவையில்லை.
மேலும், குறித்த கிராமத்திலிருந்து எவரும் வெளியே செல்லவும் உள்ளே நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுமார் 500 குடும்பங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக