(அப்ரா அன்ஸார்)

எல்லா திசைகளிலும் யுத்த மேகங்கள் சூழ்ந்திருக்கும் இக்கால கட்டத்தில் மனித நேயத்தை விட மனிதனை அழிக்கும் ஆயுதத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகின்றது .ஆயுதக் கலாசாரம் மேலோங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் நியாயம் காற்றில் பரந்து விட்டது.அநியாயம்  தலைவிரித்து ஆடுகிறது.முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது.முஸ்லிம்களின் இரத்தம் அநியாயக்கார நாடுகளால் பங்கு போடப்படுகிறது.கண்டாலே அரவணைத்து முத்தமிட வேண்டும் என்று நினைக்கும் குழந்தைகளைக் கூட இரத்தக்கட்டிகளாக மாற்றி விட்டார்கள்.பூங்காவனத்தில் பூக்களோடு பூக்களாய் மலர வேண்டிய பிஞ்சு குழந்தைகள் யுத்த களத்தில் இரத்த ஆற்றில் மடிந்து கொண்டு இருக்கிறார்கள்.இது கதையல்ல நிஜம்!

நியாயமல்ல அநியாயம்.இதற்கெல்லாம் மாபெரும் பின்னனி இருக்கிறது.உலகின் பல வகையான ஆயுதங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன அவ் ஆயுதங்கள் எண்ணிலடங்காதவை...அதிலும் இந்த மனித வேட்டைக்காக அவர்கள் பயன்படுத்திய அதி பயங்கரமான ஆயுதம் மீடியாவாகத்தான் இருக்கிறது.அந்த வகையில்  முஸ்லிம்களி்ன் கையில் தவழாத ஆயுதமும் மீடியா தான்.மீடியா உலகையே ஆட்டிப்படைக்கிறது.மக்கள் மனங்களில் மீடியா ஆட்சி செய்கின்றது.மீடியாவின் பலத்தை உற்று நோக்கினால் மீடியா இல்லாத இடமே இல்லை என்றாகி விட்டது.மனிதர்களுக்கு மகிழ்ச்சி வேண்டுமென்றால் மீடியாவையே தொடர்பு கொள்கிறார்கள்.மீடீயாவை கத்திக்கு ஒப்பாக கூறலாம்.கத்தியைக் கொண்டு காய்கறி வெட்டி உணவு சமைத்துக் கொண்டு மக்களுக்கு நன்மைகள் செய்யலாம்.அவ்வாறே குத்தி இன்னொருவரை கொலையும் செய்யலாம்.அவ்வாறே மீடியாவில் நன்மைகள் காணப்படுவதை போல் தீகைளும் குவிந்து கிடக்கின்றன.மீடியாவில் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடிந்த போதிலும் இன்றைய கால மக்கள் மீடியா மூலம் ஆபாசத்திலும் ,ஆட்டத்திலும் மூழ்கி வாழ்வையும் சீரழித்துக் கொள்கிறார்கள்.மக்கள் மன்றத்தில் உடனுக்குடன் செய்திகளை எத்திவைக்கும் மீடியா முஸ்லிம்கள் பற்றிய நச்சுக் கருத்தையும் மக்கள் மனங்களில் போடப்பட்ட அந்த விஷக்கருத்துக்கள் காரணமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகள் ,அநியாயக்காரர்கள் ,மிகக் கெட்டவர்கள் ,இழிபிறவிகள் என்று நினைக்கும் அளவிற்கு மீடியா முஸ்லிம்களின் மீது சாயம் பூசி விட்டது.

முஸ்லிமை 'முஸ்லிம்' என்று கூறிய காலம் மலையேறி போய் முஸ்லிமானவன் "முஸ்லிம்  தீவிரவாதி"என்று பெயர் சூட்டும் காலத்தை மீடியா ஏற்படுத்தி வெற்றியும் கண்டு விட்டது. இதனால் ஈராக்கில் இலட்சக்கணக்கணக்கான உயிர்கள் அநியாயமாக கொலை செய்யப்பட்ட போதும், பலஸ்தீனில் தெருவெல்லாம் சடலங்களின் மீது நடக்கும் நிலை ஏற்பட்ட போதும், சிறுவர்கள் விளையாடும் தெருவெல்லாம் இரத்த ஆறு ஓடுகின்ற போதும், யமனில் குழந்தைகள் பட்டினியால் இறக்கின்ற போதும், இலங்கையில் முஸ்லிம்களி்ன் உடமைளுக்கும், உயிர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை இவ்வாறான அட்டூழியங்கள் இடம்பெறுகின்ற போதிலும் ஏன் இந்த அநியாயத்தை செய்கிறாய் என்று தட்டிக் கேட்க ஒரு மனிதனும் இல்லை, அமைப்புக்களும் மறைந்துவிட்டது.

இந்த மீடியா முஸ்லிம்களை பெயரளவில் மாத்திரம் வைத்து விட்டு,அவர்களுடைய ஈமானிய உணர்வுகளைப் பிடுங்கி ஜடமாக்கி விட்டது.அதனால் கூத்து கும்மாளங்களை விரும்பும் ஒரு முஸ்லிம் ஈமானை நாவினால் உச்சரிக்கும் சில எழுத்துக்களாக்கி விட்டான்.முழு உடலையும் மறைத்துச் செல்லும் முஸ்லிம் பெண்ணை இன்னாரெு அந்நிய பெண் கேவலமாக நினைககும் அளவிற்கு நியாயமான ஆடையை அநியாய மீடியா சந்தையில் ஏலம் போட்டு விற்கிறார்கள்.இவையெல்லாம் மாற வேண்டும் அல்லது மாற்ற வேண்டும்.இதற்கு நாம் கையிலே எடுக்க வேண்டியது இன்னும் ஒரு மீடியாவைதான் .இமாம் மஹ்தி அவர்கள் உலகத்தை ஆளும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே நம்புகிறோம்.அல்லாஹ் நாடினால் அக்காலத்தில் நம் பக்கம் திரும்பலாம் அதுவரைக்கும் முஸ்லிம்களின் உரிமைக் குரலை உரத்துச் சொல்வதற்கு நமக்குள் பல மீடியாக்கள் உதயமாக வேண்டும் இல்லாவிட்டால் நியாயம் அநியாயமாகி விடும் அநியாயம் நியாயமாகி விடும்.இன்று இந்நிலையை நாம் கண்ணூடாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

"யாருடைய கரங்களில் கப்பல் படை இருந்ததோ அவர்கள் தான் 19ம் நூற்றாண்டின் பலம் வாய்ந்தவர்கள்,யாரின் கரங்களில் விமானப் படை இருந்ததோ அவர்கள் தான் 20ம் நூற்றாண்டின் பலசாளிகள் ,யாரிடம் ஊடகப் பலம் இருக்கிறதோ அவர்கள் தான் 21ம் நூற்றாண்டின் சக்தி வாய்ந்தவர்கள்" என்ற  மகாதீர் முஹம்மதின் கூற்றுக்கிணங்க 21ம் நூற்றாண்டில் கால் பதித்துள்ள நாம் இ்ன்னும் எமக்கான ஊடகம் ஒன்று உருவாக்கப்படாமல் இருப்பது கவலைக்குறிய விடயமாகும்.

ஊடகம் ஒன்று உருவாக்கப்டுவதனால் ஒட்டு மொத்த சமூகப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்குமா?என்ற கேள்வி நம்முள் எழுகின்றது...ஆம் இது தனிப்பட்ட கேள்வியல்ல ஒட்டுமொத்த சமூகக் கேள்வியும் இதுதான்.அதாவது ஊடகம் ஒன்று உருவாக்கப்படுவதனால் அனைத்து பிரச்சினைக்கும் முழுமையான தீர்வு காணமுடியாது ஆனால் ஒரளவு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும்.இன்று நாம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஆணி வேர் இந்த ஊடகங்கள் தான் இனவாத ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்தாக வேண்டும் இல்லையேல் நாம் மேலும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.இவ்வாறான இனவாத ஊடகங்களுக்கு இன்னொரு ஊடகத்தினாலேயே பதிலடி கொடுக்க முடியும் .அது முஸ்லிம்களின் முதலீட்டில் ,முஸ்லிம்கள் இயக்குகின்ற தேசிய ஊடகமாக அமைதல் வேண்டும்.அவை இலத்திரனியல்  ஊடகமாக இருந்தாலும் அல்லது அச்சு ஊடகமாக இருந்தாலும் கூட சமூகத்துக்காக குரல் கொடுக்கக் கூடியவாறு இயங்குதல் வேண்டும்.முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மாத்திரம் அல்லாது பிற இனத்தின் உரிமைகளையும் கருத்திற் கொண்டு ஊடக தர்மத்தை  வென்றெடுக்கக் கூடிய ஊடகம் ஒன்றை முஸ்லிம்கள் உருவாக்க வேண்டும்.இதற்காக முஸ்லிம் தலைவர்கள் ,தனவந்தர்கள்,அரசியல்வாதிகள் ,இளைஞர் படை,ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும்.
நமக்கான ஊடகத்தின் தேவை கடந்த காலங்களாக பேசப்பட்டு  வந்தாலும்கூட பிரச்சினைகள் தனிந்தவுடன் மறந்து விடுகின்றனர்.இவ்வாறான அசமந்தப் போக்கினாலேயே நம் உரிமைகள் ஒவ்வொன்றாக இழந்து வருகின்றோம்.நமது சமூகம் கல்வியை உலகக் கல்வி ,மார்க்க் கல்வி என வகைப்படுத்தியவாறு சமூக நற்பணிகளையும் உலகம் சார்ந்தவை ,மார்க்கம் சார்ந்தவை என பிரித்து விட்டனர் .இதனாலேயே கடந்தகாலங்களாக முஸ்லிம் சமூகம் நொருக்கப்பட்டு வந்த போதும் இன்னும் முஸ்லிம் மீடியாவிற்கான அடித்தளங்கள் இடப்படவில்லை.

அதாவது கலாநிதி யூசுப் அல் கர்ழாவியின் கருத்தானது "முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் மீடியா ஒன்று உருவாக்கப்படுவதானது ஜிஹாத் செய்வதை விட நன்மை தரும்"எனவே,முஸ்லிம்களின் முதலீட்டில் பிரத்தியேக முஸ்லிம் ஊடகமொன்று உருவாக்கப்படல் வேண்டும் அவை பக்கச்சார்பின்றி ஊடக தர்மத்தை வென்றெடுக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.இதில் முஸ்லிம்களும் ,முஸ்லிம் அல்லாத நீதியான ஊடகவியலாளர்களும் பயிற்றுவிக்கப்பட்டு செயல்படல் சிறந்தது.

இத் தேவை தனிப்பட்ட குழுவின் தேவையல்ல  சமூகத்திற்குமான தேவை எனவே  சமூகத்தில் உள்ள அனைவரும் முன்வருதல் காலத்தின் தேவையாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.