உலகில் பல நாடுகளிலும் வாழும் சமூகங்கள் தமக்கென்று அடையாளங்களை கொண்டிருக்கின்றன.

பாரசீகர்களும் மத்திய ஆசியர்களும் ஆப்கானியர்களும் மார்ச் மாதத்தில் நவ்ரூஸ் என்ற புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.

 துருக்கியர்கள் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஒரு வகை புடினை தயாரிக்கிறார்கள். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்தஆலா பெரும் வெள்ளத்தில் இருந்து பாதுகாத்தமைக்காக நன்றி கூறும் வகையில் அவர்கள் இந்த புடினை தயாரித்து பரிமாறுவார்கள். இதனை நபி நூஹின் புடின் என்று அழைப்பர்.

கலாசாரங்களும் பாரம்பரிய அடையாளங்களும் எமது இன அடையாளத்தின் தனித்துவ அம்சங்களாகும். மார்க்கதிற்கு முரண்படாத வகையிலான கலாசாரங்களையோ பண்பாடுகளையோ இஸ்லாம் எதிர்க்கவில்லை. கலாசாரத்துடன் சமயத்தை குழப்பிக்கொண்டு சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்த வேண்டிய எந்த தேவைகளும் கிடையாது. ஹம்ஸா யூசுப் பேராசிரியர் ஆரிப் அலி நாயித்,டாக்டர் மஹதீர் முஹம்மத், மலேசியாவின் ஜோஹார் மாநிலத்தின் மன்னர் சுல்தான் இப்றாஹீம் இஸ்கந்தர் போன்றவர்களும் இதனையே  வலியுறுத்தியிருக்கிறார்கள். இஸ்லாமிய சட்டவாக்கத்தில் உர்ப் அதாவது வழக்காறுகள் என்ற தனியான பிரிவு காணப்படுகிறது. ரோம டச்சு சட்டத்தில் கூட பாரம்பரியங்களும் வழக்காறுகளும் முக்கிய சட்டப் பிரிவாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக உலகின் பெரும்பால இடங்களில் நிஸ்புஷ் ஷஃபான் அனுஷ்டிக்கப்படுகிறது. ஊர் வழக்கத்தில் இதனை பராஆத் இரவு என்கிறார்கள். இந்த இரவில் மனிதனின் செயல்கள் விஷேடமாக இறைவனால் அவதானிக்கப்படுவதாக முன்சென்ற நல்லவர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.

உஸ்மானிய கிலாபத்தில் சுல்தான் முஹம்மத் பாதிஹ், முராத் கான், ஸலீம் அல் அவ்வல், அப்துல் ஹமீத் ஸானி போன்ற இறைநேசர்களாகவும் இருந்த சுல்தான்களின் ஆட்சியின் போது நிஸ்புஷ் ஷஃபான் அல்லது பராஅத் உடைய இரவில் பள்ளிவாசல்களும் பள்ளிவாசல்களுக்கு வெளியேயும் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும்.ஸ்தான்பூல் பாதிஹ் கொன்யா இஸ்மிர் போன்ற பிரதான நகரங்களில் உள்ள வீதிகளும் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பள்ளிவாசல்கள் அதிகாலை வரை திறந்திருக்கும்.1923ம் ஆண்டி கிலாபத் ஒழிக்கப்பட்டு முஸ்தபா கமால் துருக்கியை குடியரசாக பிரகடனப்படுத்திய பின்னர் இந்த வழக்காறு இடைநிறுத்தப்பட்டது. மீண்டும் இந்த முறைமை துருக்கியில் இடம்பெறுவதைக் இப்போது காணமுடியும்.

 இலங்கையில் நிஸ்புஷ் ஷஃபான் / பராத் இரவில் வீடுகளிலிலும் பள்ளிவாசல்களிலும் ஒன்று சேர்ந்து ஆயுளை நீடிக்கவும், பலாய் முஸீபத்துக்களில் இருந்து தம்மை பாதுகாக்கவும் பிற மனிதர்களிடம் தங்கி வாழ்வதில் இருந்து தம்மை பாதுகாக்கவும் கோரி சூறா யாசீனை ஒதி துஆ செய்து ரொட்டி போன்ற உணவுகளை பரிமாறும் பழக்கம் மிக நீண்டகாலமாக பாரம்பரியமாக இலங்கையில் இருந்து வருகிறது.

இது போன்ற நல்ல பழக்கங்களும் மரபுகளும் எமது சமூகத்தில் இருந்து இன்று மிக வேகமாக மங்கி வருகின்றன. பித்அத் சிர்க்கு போன்ற சொற்களால் நல்ல பாரம்பரிய நடைமுறைகளைக் கூட நாம் இழந்துவருகிறோம். பெரும்பாலானவற்றை இழந்துவிட்டோம். இவற்றை பேசினால் இணை வைத்தவர்களாக சமூகத்தில் இனங்காட்டப்படுவோம். ஹுப்புகள் என்றும் பிற்போக்குவாதிகள் எனவும் முத்திரைகுத்தப்படுகிறோம்.

ரசூலுல்லாஹிஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது வார்த்தைகளை, சங்கை மிக்க சஹாபாக்கள் நல்லடியார்களின் வாழ்வியலை  கண்ணியம் செய்து ஏற்று நடப்பதற்குப் பதிலாக அவற்றை லஈப் என்றும் மௌலூஃ என்றும் கூறி ஒதுக்கிவிடுதில் அதிகம் கரிசனை காட்டுகிறோம். இவ்வாறான போக்குகள் தொடருமாயின்  வரட்சியான பாண்பாடுகள் அற்ற சமூகமாகவே பயணிக்க வேண்டியிருக்கும் என்ற ஆதங்கம் அதிகமாகவே காணப்படுகிறது.


Berat Gecesi Münasebetiyle Fukaraya Dağıtılmak Üzere Atiyye İtası, 1908

படம் : உஸ்மானிய பேரரசில்  வசிக்கும் ஏழை மக்களுக்கு பராத் இரவு அன்று விஷேட பணத்தொகையை வழங்கும் வழக்கம் உஸ்மானிய ஆட்சியாளர்களிடம் இருந்து வந்தது. பராத் இரவன்று ஏழைகளுக்கு விஷேட பணத்தொகையை வழங்குமாறு 1908ம் ஆண்டில் வெளியிடப்பட்ட விஷேட சுற்றுநிருபம்.

பஸ்ஹான் நவாஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.