கொரோனா தொற்றாளர்களை பரிசோதிப்பதனை போன்று எஸ்பியின் தலையையும் பரிசோதிக்க வேண்டும் - மனோ



கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பில், நேற்று முன்தினம் தெரிவித்த தனது கருத்தை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க திரித்துப் பேசுவதாகவம் அதைப் பிடித்துக்கொண்டு ஒரு தேரர் தன்னைக் கைது செய்ய வேண்டும் என சீஐடியில் சென்றுமுறையீடு செய்வதாகவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குறைபட்டுள்ளார். 
மனோ கணேசனின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன,
“கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பில், நேற்று முன்தினம் நான் தெரிவித்த கருத்தை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க திரித்துப் பேசுகிறார். அதைப் பிடித்துக்கொண்டு ஒரு தேரர் என்னைக் கைது செய்ய வேண்டும் என சீஐடியில் சென்றுமுறையீடு செய்கிறார். இவர்களைப் பொறுத்தவரையில் தேசிய பிரச்சினைகள் தொடர்பாக் “நாங்கள்” எதுவும் பேசக்கூடாது என நினைக்கிறார்கள்.
“இந்நாட்டில் 40,000 கொரொனா நோயாளிகள் (Corona Positive) இருப்பதாக நான் கூறவேயில்லை. 40,000 “முதல் தொடர்பாளர்கள்” (First Contact Persons) இருக்கின்றார்கள் என்​றே நான் கூறினேன். “முதல் தொடர்பாளர்கள்” என அறியப்பட்டவர்கள், கொரொனா நோயாளிகளுடன், தம் நாளாந்த வாழ்வில் நேரடியாக சம்பந்தப்பட்டு ஒன்றாக, வாழ்ந்து, இருந்து, உண்டு வாழ்ந்தவர்களாகும். “முதல் தொடர்பாளர்கள்” என்றுதான் இவர்களை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
“இந்த, “முதல் தொடர்பாளர்கள்” பற்றி எங்களுக்கு யார் சொன்னது? மார்ச் 24ஆம் திகதியன்று அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாதான் தனது உரையில், இதைக் கூறினார். இராணுவ, பொலிஸ் புலனாய்வாளர்கள் வீடு வீடாகப் போய், தெருத்தெருவாக போய், கொரொனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரென அடையாளம் கண்டுள்ளார்கள் என அவர் மேலும் கூறினார்.
“இது முக்கியமான ஒரு பணி. இதையிட்டு நான் பாதுகாப்புத் துறையைப் பாராட்டுகிறேன். சில அரசாங்க அரசியல்வாதிகள், மனோ கணேசனுக்கு எப்படி இந்த அரசாங்க இரகசியத் தகவல்கள் கிடைக்கின்றன எனக் கேட்கிறார்கள். கடவுளே, இவை இரகசிய தகவல்கள் இல்லை. கட்சித் தலைவர் கூட்டத்தில் பகிரங்கமாக இராணுவ தளபதி கூறியதாகும்.
“நான் கூட்டங்களுக்குப் போனால், அங்கு தூங்குவதில்லை. கூட்டங்களில் பேசப்படுவது அனைத்தையும் காது கொடுத்துக் கேட்கிறேன். என்னிடம் கேள்வி கேட்கும், இந்த அரசாங்க அரசியல்வாதிகள், கட்சித் தலைவர்கள் அல்ல. இதனால், இவர்கள் இந்தக் கூட்டங்களுக்கு வருவதில்லை. இதற்கு நான் என்ன செய்ய முடியும்?
“சீன அரசு, 40,000 பரிசோதனை கருவிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக அறிந்துள்ளேன். இந்த முதல் தொடர்பாளர்களை, இந்த பரிசோதனை கருவிகளை பயன்படுத்தி பரிசோதிக்கும்படி நான் அரசாங்கத்தை கோருகிறேன்.
“கொரொனா நோயாளர்கள் இருந்தால், அவர்கள் இந்த பிரிவுக்குள்தான் அதிகமாக இருக்க முடியும். ஆகவே அவர்களை முதலில் சோதியுங்கள் என கூறுகிறேன். சோதனை வேகத்தை அதிகரியுங்கள் எனவும் கூறுகிறேன். இதை நான் மட்டும் கோரவில்லை. GMOA உட்பட முழு வைத்திய சமூகமே இதைதான் சொல்கிறது.
“தொடர்ந்து இப்படி முகத்தை மூடிக்கொண்டு வீடுகளுக்குள் இருக்க முடியாது. நாட்டை திறந்து விட வேண்டும். ஆனால், அதற்கு முன் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். ஆகவே சோதனைகளை அதிகரியுங்கள்.
“நான் சொல்வதை சரியாக புரிந்துக்கொள்ள முடியாத அமைச்சர் திசாநாயக்க, நான் சொல்லாததைச் சொன்னதாகக் கூறுகிறார். பொய் சொல்கிறார். கொரொனா நோயாளர்கள் பரிசோதிக்கப்படுவதைப் போன்று, அமைச்சர் திசாநாயக்கவின் தலையையும் சோதனை செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்” என்று மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார்.
(தமிழ் மிரர்)

கருத்துகள்