கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது போனால் தேர்தல் திகதியில் மாற்றங்கள் வரலாம்



(ஆர்.யசி)

ஜூன் மாதம் 20 ஆம் திகதியை பொதுத் தேர்தலுக்கான திகதியாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் திகதியை மீள் பரிசீலனை செய்யுமாறு அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளன.

அதற்கமைய தேர்தல் திகதியை மீள் பரிசீலனை செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிகளிடம் இணக்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் கூடி மீண்டும் ஆராயவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் கட்சி செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இன்று காலை 10.30 மணிக்கு ஒரு கூட்டமும் பிற்பகல் 1.30 மணிக்கு இரண்டாம் கூட்டமுமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளன.

அத்துடன் இப்போது தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு தினத்தை தேர்தல் நடத்த அறிவித்துள்ள போதிலும் இது உறுதியான நிலைப்பாடு அல்ல. தேர்தல் திகதி ஒன்றினை அறிவிக்காது இருக்க முடியாது. திகதி அறிவிக்கப்பட வேண்டியது கடமையாகும். ஆகவேதான் நாம் திகதி ஒன்றினை இப்போது அறிவித்துள்ளோம்.

மே மாதம் 4 ஆம் திகதியில் இருந்து அதிகபட்சம் 49 நாட்களுக்குள் வரும் திகதியொன்றை நாம் கூறியுள்ள போதிலும், நாட்டின் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாது போனால் இந்த திகதியிலும் மாற்றங்களை செய்ய நேரிடும். மே மாதம் 30 ஆம் திகதி தேர்தலை நடத்த வேண்டும் என ஒரு சிலர் கூறுகின்றனர்.

அரசியல் அமைப்பினை காரணம் காட்டி சிலர் பேசுகின்றனர். ஆனால் அரசியல் அமைப்பிற்கு நாம் பொறுப்புக்கூற வேண்டும் என்பது உண்மையே, ஆனால் அதனையும் தாண்டி மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும் என்றார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்.

கருத்துகள்