Image may contain: 1 person, close-up
காலனித்துவ ஆட்சியிலும், மன்னர் காலங்களிலும் வெளிநாட்டவர்கள் இலங்கையில் பல்வேறு நோக்கங்களுக்காக குடியேறினார்கள். வரத்த்தம், பாதுகாப்பு, போன்ற நோக்கங்களுக்காக யூதர்கள் இலங்கையில் குடியேறினார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இலங்கையில் நீண்ட காலமாக வாழ்ந்த யூதர்கள் 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போது (அதாவது இஸ்ரேல் உருவாக்கப்பட்ட அதே ஆண்டில்) புதிய யூத நாட்டுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். 1950ம் ஆண்டு காலத்தில் இலங்கையில் வாழ்ந்த பெரும்பாலான யூதர்களுக்கு இஸ்ரேலில் குடியுரிமை வழங்கப்பட்டது.
கி.பி 1100 ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் மூவாயிரம் யூதர்கள் வசித்து வந்தார்கள் என்று ஸ்பெய்ன் நாட்டின் நாடுகாண் பயணி Benjamin of Tudela பதிவுசெய்துள்ளார்.
இலங்கையில் 9ம், 10 ம் நூற்றாண்டுகளில் கணிசமான யூதர்கள் இலங்கையில் வாழ்ந்தார்கள் என்று அரபு – பாரசீக நாடுகாண் பயணி அபூ ஸைத் ஹஸன் அவர்கள் கூறுகிறார்கள்.
போர்த்துக்கேயர் 1505ம் ஆண்டில் இலங்கை வந்த போது பல சந்தர்ப்பங்களில் மதம்மாறுமாறு இலங்கை யூதர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதனால் அதிகளவிலானோர் நாட்டில் இருந்து வெளியேறினார்கள் என்று இலங்கை யூதர்களின் வரலாற்றை ஆராய்ந்திருக்கும் அன்ரூ ஹரிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வாழ்ந்த யூதர்கள் பற்றி ஸ்பெய்னின் புகழ்பெற்ற பூவியியலாளரும், வரலாற்று ஆசிரியருமான முஹம்த் இத்ரிஸி அவர்கள் தனது 'கிதாப் நுஸ்ஹத் அல் முஸ்தாக் பீ ஹதீராக் அல் ஆபாக்' என்றஅ புத்தகத்தில் ஆச்சரியமான வரலாற்று சம்பவத்தை பதிவு செய்துள்ளார்கள்.
' இலங்கைக்கு 1150ம் ஆண்டு காலப் பகுதியில் இத்ரீஸி அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தார்கள். அவர்கள் இலங்கை வந்த போது 4ம் காஷியப்ப மன்னன் இலங்கையை ஆட்சி செய்துகொண்டிருந்தார். இலங்கையை ஆட்சி செய்வதற்கான 16 பேர் அடங்கிய அரசாங்கப் பேரவையை (Government Council) மன்னன் 4ம் காஷியப்ப அமைத்திருந்தாகவும் அந்தப் பேரவையில் 4 யூதர்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இத்ரிஸி அவர்கள் 'கிதாப் நுஸ்ஹத் அல் முஸ்தாக் பீ ஹதீராக் அல் ஆபாக்' என்ற நூலில் குறிப்பிட்ட இந்த விடயம் வரலாற்று ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டதாகும் என்று இலங்கையின் கல்வியலாளரும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான லெஸ்லி தேவேந்திர அவர்கள் கூறுகிறார்கள்.
இலங்கையின் துறைமுக வர்த்தகத்திலும் யூதர்கள் அதிகம் செல்வாக்குடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இலங்கையின் தேயிலையை சர்வதேசத்திற்கு அறிமுப்படுத்துவதில் யூதர்கள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள்.
கொழும்பு 07 ரொஸ்மின்ட் ப்ளேஸில் அமைந்துள்ள மியூஸியஸ் கல்லூரி யூதர்களால் அமைக்கப்பட்டதாகும். இலங்கை யூதரும், கல்வியலாளருமான மாரி மியூஸியஸ் அம்மையாரின் நினைவாக அவரது பெயர் மியூஸியஸ் கல்லூரிக்கு சூட்டப்பட்டுள்ளது.
இலங்கை பௌத்தத பதிப்பு கழகத்தை (Ceylon Buddhist Publication Society) உருவாக்கிய ஸிக்மன்ட் பெனிகர் ஒரு யூதராவார். பிற்காலத்தில் அவர் துறவு பூண்டு தனது பெயரை சங்கைக்குரிய நயனபோனிக்க மஹதேர தேரர் என்று மாற்றிக் கொண்டார். இலங்கையின் இரண்டு பிரதமநீதியரசர்களான சேர் சிட்னி ஆப்ரஹாம்ஸ் , சேர் அலன் ரோஸ் ஆகியோரும் யூதர்களாவர்.
இலங்கையின் கடைசி யூதராக இலக்கியவாதியும்,
கவிஞருமான ஆன் ரணசிங்ஹ கருதப்படுகிறார். 2016ம் ஆண்டில் அவர் கொழும்பில் காலமானார். அவரது கவிதைகள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான ஆங்கில இலக்கிய பாடவிதானமாக இணைக்கப்பட்டுள்ளது
(படம் ஆன் ரனசிங்ஹ )
பஸ்ஹான் நவாஸ்
செய்தி ஆசிரியர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.