இறுதிச் சடங்குகள் குறித்த உரிமைகளை மதிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்விடுத்துள்ள ஐ.நா முஸ்லீம்களுக்கு எதிரான குரோத பேச்சுக்களை கட்டுப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஐ.நாவின் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் அஹமட் சஹீட் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மார்ச் 31 ஆம் திகதி இலங்கையின் சுகாதார அமைச்சு கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடலை எந்த காரணத்திற்காகவும் கழுவக்கூடாது, மூடப்பட்ட பையினுள் வைத்து அதனை பிரேதப் பெட்டிக்குள் வைக்க வேண்டும், உடல்களை எரிக்க வேண்டும், என தெரிவிக்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கையின் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட நான்காவது திருத்தங்கள், மார்ச் 31 ஆம் திகதி 2020 நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்டவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட நபரின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராகவே அவரது உடல் எரியூட்டப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள முக்கிய பரிந்துரைகளை கருத்தில் எடுத்து, இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் உள்ள விதிமுறைகளை மீள் பரிசீலனை செய்யவேண்டும், அதற்கேற்றபடி சுற்றுநிரூபத்தினை மாற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக அளவிலான தொற்று நோயினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக, பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, இலங்கையின் பல்வேறு சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக அமையக்கூடிய விடயங்களை இலங்கை அரசாங்கம் தவிர்த்துக் கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான தன்னிச்சையான முடிவுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம், தங்கள் அன்புக்குரியவர்களுக்கு உரிய இறுதிச் சடங்கினை வழங்க முடியாது அல்லது புதைக்க முடியாது என்ற அச்சம் காரணமாக அவர்கள் கொவிட் 19 குறித்து தகவல்களை வெளியிட தயங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தொடர்புபட்ட அனைத்து இன மத சமூகத்தவர்களுடனும் அனைத்து சுகாதார நிபுணர்களுடனும் தொடர்புபட்டவர்களுடனும் கலந்தாலோசனைகளை மேற்கொண்டு புதிய விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் இலங்கை ஜனாதிபதிக்கு மேலும் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் மாத்திரம் செய்வது என எடுக்கப்பட்ட முடிவிற்கான காரணங்களை தயவு செய்து தெரியப்படுத்துங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானம் பாகுபாடற்றது, அவசியமானது, உரிய நோக்கத்திற்கு சமாந்திரமானது என்பதை உறுதி செய்வதற்காக உரிய சுகாதார நிபுணர்கள் சிவில் சமூகத்தினர் மற்றும் சமூக உறுப்பினர்களுடன் கலந்தாலோசானைகள் இடம்பெற்றதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் நபர்கள் பயிற்றுவிக்கப்பட்டவர்களா என்பதை தெரியப்படுத்துங்கள் என அவர் கோரியுள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் மூடப்படுவதற்கு முன்னர் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உடல்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றார்களா? உடல் தகனம் செய்யப்படுவது குறித்து அவர்களுக்கு முன்கூட்டியே தகவல்கள் வழங்கப்படுகின்றதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல் காரணமாக சிறுபான்மை இனத்தவர்கள் பாரபட்சத்திற்கு உள்ளாவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்துங்கள் என ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

மத சுதந்திரத்திற்கான உரிமை இறுதி கிரியைகள் குறித்த நம்பிக்கைகள் மதிக்கப்படுகின்றதா பின்பற்றப்படுகின்றதா என்பதையும் தெரியப்படுத்துங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம்களுக்கும் இலங்கையின் ஏனைய மத இன சிறுபான்மை மக்களுக்கு எதிரான குரோதப் பேச்சு அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது, கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்கள் நோயாளிகளின் அடையாளங்களை பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை தெரியப்படுத்துங்கள்.
உங்களிடமிருந்து இது தொடர்பாக வெளியாகும் உங்களின் பதில்கள் 4 மணித்தியாலத்தில் குறிப்பிட்ட இணையத்தளம் மூலமாக வெளியாகும், மனித உரிமை ஆணையாளருக்கான அறிக்கையில் அது சேர்க்கப்படும் என விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.